சாலையோரம் கரும்பு ஜூஸ் விற்கும் தொழிலாளி கொரோனா நிவாரணப் பணிக்கு ரூ.5ஆயிரம் வழங்கியதைப் பார்த்து கலெக்டர் நெகிழ்ச்சி அடைந்தார்.
திருவண்ணாமலை அடுத்த கலசபாக்கம் வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (04.06.2021) நடைபெற்ற கோவிட்-19 சிறப்பு தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது¸ கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தி. சரவணன்¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி¸ சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அஜிதா¸ கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரா. அன்பரசி¸ ஒன்றிய ஆணையாளர்கள் மகாதேவன்¸ விஜயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள்¸ மருத்துவர்கள்¸ மருத்துவப் பணியாளர்கள்¸ உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி¸ கலசபாக்கம்¸ நடுத் தெருவில் சுகாதாரத் துறை சார்பில் காய்ச்சல்¸ பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாமில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும்¸ வீடு¸ வீடாகச் சென்று உடல் வெப்பம் மற்றும் ஆக்ஸிஜன் அளவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து¸ கலசபாக்கம் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள்¸ வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். கலசபாக்கம் வட்டம்¸ பழங்கோயில் மற்றும் மோட்டூர் ஆகிய ஊராட்சிகளில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நடைபெற்று வரும் சிறப்பு தடுப்பூசி முகாம்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் முதலமைச்சர் உத்தரவின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தினமும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டு¸ தடுப்பூசி செலுத்திக் கொண்டால்¸ உயிரிழப்புகள் குறைக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் அச்சமில்லாமல்¸ தைரியாமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் மூன்றாவது அலை வரும் என்கிறார்கள்¸ அதற்கு முன்பு தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பாதுகாப்பாக இருக்கலாம். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள்¸ உறவினர்கள்¸ நண்பர்கள் அனைவரிடமும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் எலத்தூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும்¸ தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் எலத்தூர் பணிமனை பராமரிப்புக் கூடத்தினையும் ஆய்வு செய்தார்.
அப்போது எலத்தூர் நெடுஞ்சாலை அருகில் கரும்பு ஜீஸ் நடத்தி வரும் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மற்றும் ரஞ்சனி குடும்பத்தினர் தங்களது தினசரி வருமானத்திலிருந்து ரூ.5000-த்தை கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள். சாலையோர வியாபாரி மனமுகந்து நிதி அளித்ததைப் பார்த்து மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி நெகிழ்ச்சி அடைந்தார்.
திருவண்ணாமலை நகராட்சி¸ வேட்டவலம் சாலை¸ தனபாக்கியம் மருத்துவமனை எதிரில் உள்ள லெபனான் பங்களாவில் நடைபெற்று வரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு¸ ஆய்வு மேற்கொண்டார். மேலும்¸ திருவண்ணாமலை நகராட்சி மத்திய பேருந்து நிலையம் எதிரில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது வாகனங்களில் வீடு¸ வீடுடாக உணவு வழங்கும் பணி மேற்கொள்பவரிடம் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுரை வழங்கி¸ உடனடியாக வீடு¸ வீடாக உணவு விநியோகம் செய்யும் அனைத்து தனியார் ஊழியர்களும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.