திருவண்ணாமலை அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதா? என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்ட அட்வகேட் கமிஷனர் இன்று மடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை அம்மணி அம்மன் கோபுரத்திற்கு எதிரே இருந்த அம்மணி அம்மன் மடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய இந்து சமய அறநிலையத்துறை, அந்த மடத்தையும் சேர்த்து இடித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஜாமீன் மனு
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதில் வீட்டை இழந்த பாஜக பிரமுகர் டி.எஸ்.சங்கர், மடத்தை இடித்தற்கு கண்டனம் தெரிவித்து மடத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினார். பிறகு அவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட போது அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதா? என உண்மைத்தன்மையை அறியும் பொருட்டு சென்னை உயர்நீதி மன்றம் அட்வகேட் கமிஷனரை நியமித்து உத்தரவிட்டது.
அட்வகேட் கமிஷனர்
இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்ட பெண் அட்வகேட் கமிஷனர், இன்று திருவண்ணாமலைக்கு வந்து அம்மணி அம்மன் மடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் வந்த அலுவலர்கள் சிறிய அளவிலான சென்சார் கருவி மூலம் இடிக்கப்பட்ட பகுதிகளை அளவீடு செய்தனர். புகைப்படமும் எடுத்தனர். அப்போது அவர்களிடம் இந்து முன்னணியினர் மடம் இடிக்கப்பட்டதற்கு ஆட்சேபனை தெரிவித்திருப்பது குறித்து விளக்கினர்.
பிறகு அண்ணாமலையார் கோயில் அலுவலகத்தில் அட்வகேட் கமிஷனர் விசாரணை நடத்தினார். அப்போது அவரை வியாபாரிகள் சங்க தலைவர் டி.எம்.சண்முகம், முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், ஜீவானந்தம், கார்த்தி வேல்மாறன், வழக்கறிஞர் அருள் குமரன் உள்ளிட்ட நகர பிரமுகர்கள் சந்தித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
கார் பார்க்கிங்
சந்திப்பு முடிந்து வெளியே வந்ததும் வியாபாரிகள் சங்கத் தலைவர் டி.எம்.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில் அம்மணி அம்மன் மடத்தை முழுவதுமாக கோயில் பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும், திருப்பதியில் உள்ளவாறு பக்தர்கள் தங்கி சாமி தரிசனம் செய்யவும், பக்தர்கள் தங்கும் அறைகள், கார் பார்க்கிங் வசதி போன்றவர்களை செய்து தரப்பட வேண்டும் என எங்கள் கருத்தை கூறினோம் என்றார்.
முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன் கூறியதாவது,
முறைகேடான காரியங்கள்
அம்மணி அம்மன் படம் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. நாங்களெல்லாம் இப்பகுதியில் பிறந்து வளர்ந்தவர்கள். அம்மணி அம்மன் மடத்தில் ஆன்மீக காரியங்கள் நடைபெறவில்லை, பூஜைகளும் நடைபெறவில்லை. பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இப்பகுதியில் உள்ளவர்களையும், சிவாச்சாரியார்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
நன்கொடையாளர்களை அழைத்து வந்து அவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு தரிசனம் காண்பிப்பது போன்ற தவறான செயல்களும், அடியாட்களை போன்று அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கஞ்சா மது பயன்பாடு போன்ற பல்வேறு முறைகேடான பணிகள் அங்கு நடைபெற்றது. மடத்தை வாடகைக்கு விட்டு பணத்தை வசூலித்தனர்.
திருப்பதி மாடலில்
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களை வர்த்தக சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் சந்தித்து அண்ணாமலையார் கோயிலுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து ஆலோசித்த போது இந்த மடத்தை பக்தர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக கார் பார்க்கிங், கழிவறை, பக்தர்கள் தங்கி தரிசனம் செல்வதற்கு உண்டான வசதி போன்றவைகளை திருப்பதி மாடலில் இங்கு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதைத்தான் நாங்களும் கூறியிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் அம்மணி அம்மன் மடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த அறிக்கையை வருகிற 7ந் தேதி, அட்வகேட் கமிஷனர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளார்.