திருவண்ணாமலை அருகே 2 மகன்களை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தாயும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி அருகே உள்ள வட்ராபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராசு (வயது 40). இவர் கானாலாபாடி கிராமத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். சின்னராசுவின் மனைவி சூர்யா (32). இவர் சோமாசிபாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
சின்னராசுவுக்கும், சூர்யாவுக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு லட்சுமணன் (4), உதயன் (1) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
சின்னராசுவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. தினமும் கணவர் குடித்து விட்டு வருவதால் சூர்யா, மனநிம்மதியை இழந்து வாழ்க்கையை வெறுத்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த சூர்யா, மகன்களுடன் காணாமல் போய் விட்டார். இதையடுத்து சின்னராசுவும், அவரது குடும்பத்தாரும் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். சூர்யாவின் போனுக்கு தொடர்பு கொண்டதில் ரிங் அடித்ததே தவிர யாரும் எடுக்கவில்லை. நள்ளிரவு 1 மணியளவில் வீட்டின் அருகில் இருந்த விவசாய கிணற்றின் அருகில் சூர்யாவின் போன் சத்தம் ஒலிப்பதை கேட்டு அங்கு சென்று பார்த்தனர்.
அங்கு யாரும் இல்லாததால் கிராம மக்கள் சிலர் கிணற்றில் குதித்து தேடினர். இதில் சூர்யா மற்றும் உதயனின் உடலை மீட்டனர். லட்சுமணனின் உடல் கிடைக்கவில்லை. இதையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கிணற்றில் தண்ணீர் நிரம்பி இருந்ததால் அவர்கள் வந்து தேடியும் உடல் கிடைக்கவில்லை. இதனால் கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றர்.
தகவல் கிடைத்ததும் கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கணவனுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக சூர்யா, தனது 2 மகன்களை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு, தானும் அந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது சம்மந்தமாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று தனது திருமண நாள் வர உள்ள நிலையில் சூர்யா மகன்களை கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.