செய்யாறில் ரூ.30 கோடியை மோசடி செய்து விட்டு தலைமறைவான நிதி நிறுவன அதிபரை கைது செய்யக் கோரி பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் திருவண்ணாமலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கவர்ச்சிகரமான பரிசுகள்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் நிதி நிறுவன மோசடி என்பது அதிகமாகிக் கொண்டே வருகிறது. பல கவர்ச்சிகரமான பரிசுகளையும், அதிக வட்டியையும் தருவதாக மக்களின் ஆசையை தூண்டி பணம் வசூலிக்கும் நிறுவன முதலாளிகள், சில காலங்கள் பரிசுத் தொகையையும், வட்டியையும் கொடுத்து விட்டு பின்னர் எஸ்கேப் ஆகி விடுகின்றனர். சிறுக, சிறுக சேர்த்த பணம் பறிபோன அதிர்ச்சியில் கண்ணீரும், கம்பலையுமாக மக்கள் பணத்தை மீட்டு தரக் கோரி போலீஸ் நிலையத்திற்கு அலைந்து கொண்டிருப்பது செய்யாறு, ஆரணி உள்பட பல பகுதிகளில் நடந்து வருகிறது.
இது போன்ற மோசடிகளை தவிர்க்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டாலும் கூட மோசடி மன்னர்களின் கவர்ச்சி வலையில் சிக்கிக் கொள்கின்றனர்.
எஸ்.எஸ். குழுமம்
செய்யாரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த எஸ்.எஸ். என்ற நிதி நிறுவனம் ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிளை அலுவலகங்களை அமைத்தது. எஸ்.எஸ். என்ற பெயரில் மோட்டார்ஸ், பைனான்ஸ், டிராவல்ஸ் நடத்தி வந்த சீனிவாசன், ராஜ்குமார் ஆகியோர் தீபாவளி சிறுசேமிப்பு திட்டத்தை ஆரம்பித்தனர்.
சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்றும், 8 வருடமாக அனுபவமிக்கவர்களால் நடத்தப்படும் நிறுவனம் என்றும், பொருட்கள் வீடு தேடி வரும் என்றும், 10 கிராம் தங்க நாணயம், வெள்ளி கொலுசு, வெள்ளி காப்பு, மளிகை பொருட்கள் போன்ற கவர்ச்சிகரமான பரிசுகளை தருவதாகவும் நோட்டீஸ் வெளியிட்டு பொதுமக்களிடம் பணத்தை வசூலித்தனர். மேலும் ரூ.1 லட்சம் கட்டினால் 5 பவுன் நகை வழங்கப்படும் என்றும் அறிவிப்பு செய்தனர்.
பல்லாயிரக்கணக்கானோர்
இவர்களின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி செய்யாறு மட்டுமன்றி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட ஊர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் எஸ்.எஸ்.தீபாவளி சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்தார்கள். இவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க முகவர்கள் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொருவரும் 500லிருந்து 3ஆயிரம் வரை பொதுமக்களை தீபாவளி சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்த்தனர்.
சுமார் ரூ.30 கோடி அளவிற்கு பொதுமக்களிடமிருந்து பணத்தை வசூல் செய்த நிலையில் திடீரென அந்த நிறுவனம் மூடப்பட்டு உரிமையாளர்கள் தலைமறைவானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். செய்யாறு போலீசார் ரூ.11லட்சம் மோசடி செய்ததாக சீனிவாசனை மட்டும் கைது செய்தனர்.
முற்றுகை-ஆர்ப்பாட்டம்
ஆனால் மோசடிக்கு முக்கிய காரணமான ராஜ்குமாரை போலீசார் கைது செய்யாததை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கணக்கானோர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் முழுங்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் இன்ஸ்பெக்டர் அசோக், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பிறகு அவர்களிமிருந்து தனித்தனியாக புகார் மனுக்களை பெற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பெருமாட்டூர்நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா என்பவர் எஸ்.எஸ்.தீபாவளி சிறுசேமிப்பு திட்டத்தில் 3 ஆயிரம் பேர்களை சேர்த்து அவர்களிடமிருந்து ரூ.95 லட்சம் வசூலித்து கொடுத்திருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் ஒரிகையைச் சேர்ந்த சங்கீதா என்பவர் 782 பேரிடமிருந்து ரூ.35 லட்சத்தை வசூலித்து தந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதே போல் பல பேர் புகார் மனுக்களை தந்துள்ளனர்.