திருவண்ணாமலையில் கொரோனா நிவாரண பணிகளுக்காக பள்ளி மாணவர்கள் தங்களின் உண்டியல் பணத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் வழங்கினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ரிமோட் காரை தந்த கலெக்டர்
இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை திருவூடல் தெருவில் வசித்து வரும் பள்ளி மாணவன் மாணிக்கவாசகம் கொரோனா நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரிமோட் கார் வாங்குவதற்காக வைத்திருந்த உண்டியல் சேமிப்பு பணம் ரூ.1400-யை கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் வழங்கினார்.
இதையடுத்து மாணிக்கவாசகம் விரும்பிய ரிமோட் கார் ஒன்றை சந்தீப் நந்தூரி¸ அவருக்கு பரிசாக அளித்து¸ பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில் மேலும் சில மாணவர்கள் சிலர் உண்டியல் சேமிப்பு பணத்தை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
மடிக்கணினி வாங்க
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம்¸ கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் வசித்து வரும் 4-ம் வகுப்பு மாணவன் தர்சன் (9 வயது)¸ ஆன்லைன் கல்வி படிப்பதற்காக மடிக்கணினி வாங்குவதற்கு கடந்த 8 மாதங்களாக அவனது அம்மா¸ தாத்தா வழங்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வைத்து வந்துள்ளார்.
அவ்வாறு சேர்த்த ரூ.5036-யை மாணவன் தர்சன் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கினார். தர்சனின் தாயார் அனுபாரதி மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார்.
அக்காள் – தம்பி
இதே போல் திருவண்ணாமலை வட்டம்¸ கண்டியாங்குப்பம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சாததேனஷ்வரி¸ யஷ்வந்த்ஈஸ்வர்¸ சேத்பட்டு வட்டம்¸ ஆவனியாபுரம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் ஹரிபிரசாத் ஆகியோரது உண்டியல் சேமிப்பு பணம் மொத்தம் ரூ.5127- யை இன்று (20.05.2021) கொரோனா நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரியிடம் நேரில் வழங்கினார்கள்.
சாததேனஷ்வரி¸ யஷ்வந்த்ஈஸ்வரின் தந்தை ஆசைதம்பி டிரைவராக உள்ளார். பழையனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவி சாததேனஷ்வரி (வயது 13)¸ கண்டியாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் யஷ்வந்த்ஈஸ்வர் (வயது 11) ஆகியோர் சிறு வயது முதல் தாய்¸ தந்தை¸ உறவினர்கள் வழங்கும் பணத்தை தனித் தனியாக உண்டியலில் சேர்த்து வந்துள்ளார்கள். முதல் முறையாக சேர்த்த பணத்தில் இருவரும் தங்கள் குடும்பத்திற்கு தங்க மோதிரம் மற்றும் வளையல் வாங்கி உள்ளார்கள்.
கியர் சைக்கிள் வாங்க
2 முறையாக சேர்த்து வந்த பணத்தை கொரோனா நிவாரண பணிக்கு வழங்கியுள்ளனர். ஆவனியாபுரம் மாணவர் ஹரிபிரசாத் (வயது 10) அன்மருதை ஆக்சீலியம் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தந்தை மணிகண்டன்¸ பழைய கார்களை விற்பனை செய்து வருகிறார். கியர் சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சேர்த்து வந்துள்ள பணத்தை கொரோனா நிவாரண பணிக்கு வழங்கியிருக்கிறார்.
பணம் படைத்தவர்கள் “கப் சிப்”
திருவண்ணாமலை மாவட்டத்தில் பணம் படைத்தவர்கள் நிதி வழங்க முன்வராமல் அமைதியாக இருக்க¸ மாணவர்கள் தாங்கள் உண்டியலில் குருவி போல் சேர்த்திருந்த பணத்தை கொரோனா நிவாரண பணிக்கு வழங்கி பாராட்டுதலை பெற்று வருகின்றனர்.