ஆம்புலன்ஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு¸ ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆய்வுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்திலின்படி¸ தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள ஆம்புலன்ஸ் கட்டணம் குறித்தான ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்¸ வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஏ. குமாரா (திருவண்ணாமலை)¸ கே. பாட்டப்பசாமி (ஆரணி)¸ மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஏ. விஜயகுமார் (திருவண்ணாமலை)¸ ஆர். சிவக்குமார் (ஆரணி)¸ ஆர். கிருஷ்ணன் (செய்யாறு)¸ ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
கட்டணம் நிர்ணயம்
தமிழ்நாடு அரசால் கீழ்கண்ட பட்டியலின்படி ஆம்புலன்ஸ் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது¸
சாதாரண ஆம்புலன்ஸ் – 10 கி.மீ. வரை ரூ.1500. 10 கி.மீ. மேல் ஒவ்வொரு கி.மீ. ரூ.25
ஆக்சிஜன் ஆம்புலன்ஸ் – 10 கி.மீ. வரை ரூ.2000. 10 கி.மீ. மேல் ஒவ்வொரு கி.மீ. ரூ.50
ஆக்சிஜன் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ வசதி – 10 கி.மீ. வரை ரூ.4000. 10 கி.மீ. மேல் ஒவ்வொரு கி.மீ. ரூ.100.
ஆம்புலன்ஸ் பறிமுதல்
தமிழ்நாடு அரசு நிர்ணித்துள்ள கட்டணத்தை மட்டுமே ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பொதுமக்களிடம் வசூலிக்க வேண்டும். மேலும்¸ தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு மேல் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வசூலிக்கும் பட்சத்தில்¸ மோட்டார் வாகன சட்டப்படி ஆம்புலன்ஸ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு¸ ஓட்டுநரின் உரிமத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு¸ பதிவுச் சான்று ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
புகார் தெரிவிக்கலாம்
இது குறித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் புகார் அளிக்க மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறையில் 04175-1077¸ 04175-233344¸ 04175-233345 ஆகிய எண்களிலும்¸ 8870700800 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.