என்னுடைய அதிகாரிகளை குறை சொன்னால் உச்சகட்ட கோபம் கொள்வேன், நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுவதா? என திமுக மற்றும் விவசாய இயக்கத்தைச் சேர்ந்தவரிடம் கலெக்டர் காட்டமாக கேட்டதால் விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளிக்கிழமை அன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த மாதத்திற்கான கூட்டம் 3வது வெள்ளியான இன்று நடைபெற்றது. கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, வங்;கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பதில் அளித்தனர்.
இந்த கூட்டத்தை யொட்டி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பொதுக் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவிக்குமாறும், தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
நறுமண தொழிற்சாலை அமைக்க வேண்டும்
இக்கூட்டத்தில் பிரதம மந்திரி விவசாயிகளுக்கான கவுரவ நிதி உதவி திட்டத்தில் விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிதிப்பயன் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளவும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து, நிதிப்பயன் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டுத் தொகை பெற்றிட நடவடிக்கைகள் எடுக்கவும், சீமை கருவேல மரங்களை அகற்றவும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் விஷக்கடிக்கு மருந்து இருப்பு வைக்கவும், மரவள்ளி கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஒரு நறுமண தொழிற்சாலை அமைக்க வேண்டும் எனவும், பால் கொள்முதல் செய்ய மின்னணு எடை மேடை அமைத்து தர வேண்டும் எனவும், வேளாண்மைத் துறையில் புதிய ரக விதை நெல்களை வழங்க வேண்டும் எனவும், தாட்கோ மூலம் கடன் வழங்க வேண்டும் எனவும், தனியார் சர்க்கரை ஆலைகளில் கரும்பு நிலுவைத் தொகை பெற்றுத் தர வேண்டும் எனவும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வள துறையின் மூலம் ஏரி குளங்கள் மற்றும் கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் எனவும், சீட்டம்பட்டு கிராமத்திற்கு சிமெண்டு ரோடு அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
விவசாயிகள் சொன்ன கோரிக்கைகள் மீதும், கொடுத்துள்ள மனுக்களின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தகவல் தெரிவிக்குமாறும், பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களுக்கு விரைவில் பதில் வழங்கவும், சம்மந்தப்பட்ட துறை அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
திமுக பிரமுகரும், இயற்கை விவசாயிகள் இயக்கத்தின் பொதுச்செயலாளருமான ஜாகீர்ஷா பேசும் போது அதிகாரிகள், மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை, சரியாக பதில் சொல்வதுமில்லை, மெத்தனமாக செயல்படுவதாக தெரிவித்தார்.
இதனால் கலெக்டர் முருகேஷ் கோபமடைந்தார். என்னுடைய அதிகாரிகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பற்றி குறை இருந்தால் என்னிடத்தில் வந்து கூறுங்கள், பொதுவில் கூறாதீர்கள். அதிகாரிகள் இரவு பகல் பாராமல் வேலை செய்கின்றனர். 6 மாதமாக சுகர்(சர்க்கரை) வந்து பாடுபட்டு கொண்டிருக்கிறேன். இங்கு எத்தனை அதிகாரிகளுக்கு சுகர், பிபி வந்திருக்கிறது தெரியுமா? இன்ஜினியர்கள் இறந்து போய் இருக்கின்றனர். அதிகாரிகள் கஷ்டப்படுவது எனக்கு தெரியும். 31/2 மணிக்குத் தான் சாப்பிடவே செல்ல முடிகிறது. நீங்க சாப்பிட்டு விட்டு சும்மா உட்கார்ந்து விட்டு பேசிவிட்டு போகாதீங்க இவ்வாறு கலெக்டர் ஆவேசமாக கூறினார். அப்போது அதிகாரிகள் தரப்பில் கலெக்டரின் பேச்சை வரவேற்று கைத்தட்டல் எழுந்தது.
அதிகாரிகளை குறை சொன்னால் உச்சகட்டமாக கோபப்படுவேன்
இதனால் குறை சொன்ன திமுக பிரமுகர் ஜாகீர்ஷா திகைத்து போய் உட்கார்ந்து விட்டார். கலெக்டரை பார்த்து அவர் டென்ஷன் ஆகாதீங்க சார் என்றார். அப்போதும் கோபம் அடங்காத கலெக்டர் நாக்கில் நரம்பில்லாமல் பேசி விட்டு போவதா?, நான் மற்ற கலெக்டர் மாதிரி இல்லை. என்னுடைய அதிகாரிகள் வேலை செய்யவில்லை என்றால் திட்டுவேன், எனக்கு முன் அதிகாரிகளை குறை சொன்னால் என்ன அர்த்தம்? என்னுடைய அதிகாரிகளை குறை சொன்னால் உச்சகட்டமாக கோபப்படுவேன் என கலெக்டர் விவசாயிகளை எச்சரிக்கும் தொனியில் பேசினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குநர் சி.அரக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.உமாபதி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கலெக்டர் கோபப்பட காரணமாக இருந்த திமுக பிரமுகர் ஜாகீர்ஷா, முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளுக்கு ஒட்டகத்தை பரிசாக வழங்கி பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.