உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 64 அடி உயரமுள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஒரு வருடத்தை 2ஆக பிரித்து அதாவது தை முதல் ஆனி வரை உத்தராயணம் என்றும்¸ ஆடி முதல் மார்கழி வரை தட்சயாணம் என்றும் அழைப்பர். அயனம் என்றால் “சூரியன் சம ரேகைக்கு வடக்கிலாவது தெற்கிலாவது சஞ்சரிக்கும் காலம்” என பொருள்.
தமிழ் ஆண்டு தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் சூரியன் சம ரேகையிலிருந்து வடக்கே நோக்கி நகர்ந்து திரும்பும் காலம் ஆறு மாத காலம் உத்தராயணம் எனப்படும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் முடியும் வரை சூரியன் தெற்கே நகரந்து திரும்பும் காலம் தட்சயாணம் ஆகும். தட்சாயணத்தில் விசேஷ தினங்கள் பூஜைகள் அதிகம் இருக்கும். உத்திராயணத்தில் சுபகாரியங்கள் செய்வார்கள்.
உத்தராயண புண்ணிய காலத்தின் கடைசி மாதம் ஆனி மாதமாகும். அனைத்து விதமான வரங்களையும் அள்ளித் தரக்கூடியது இந்த ஆனி மாதமாகும். இளவேனிற்காலம்¸ இதமான காற்று வீசக் கூடிய இந்த மாதத்தில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றதாக புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இது தேவர்களின் மாலை பொழுது என்றும் கூறப்படுகிறது. ஆனி மாதம் உத்ரம் நட்சத்திரத்தில் நடராஜ பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும்.
அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு வருடத்தில் 6 பிரதான அபிஷேகங்கள் நடக்கும். இதில் நடராஜ பெருமானுக்க நடைபெறும் அபிஷேகம் மிக முக்கியமானதாகும். உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம் முடிந்து¸ சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலமான ஆடி மாத பிறப்பை வரவேற்கும் விதம் ஆனி பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும்.
10 நாட்கள் நடைபெறும் ஆனி பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் அம்பாளுடன் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் தனித்தனி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.
நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஆண்டுக்கு 4 முறை கொடியேற்றம் நடைபெறும். இதில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றமும் ஒன்றாகும். இந்த கொடியேற்று விழா இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. மிதுன லக்கனம்¸ சித்திரை நட்சத்திரத்தில் பராசக்தி அம்மன் கொடி மரம் அருகே எழுந்தருள கோயில் சிவாச்சாரியார் அருண்¸ கொடி மரத்தில் கொடியேற்றினார்.
அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா” என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
கொடியேற்றம் நடைபெருவதை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.அதனை தொடர்ந்து முதலில் விநாயகர்¸ அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் சிறப்பு அலங்காரத்தினால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கொடிமரம் அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.
-செ.அருணாச்சலம்.