திருவண்ணாமலையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சங்கர் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு முகாமில் கூட்டத்தில் 824 மனுக்கள் குவிந்தன. முகாமில் கலந்து கொள்ள 1000த்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் மண்படம் நிரம்பியது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏ.எஸ்.மகாலில் மாவட்ட காவல் துறையின் சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சங்கர் தலைமையிலும், வடக்கு மண்டல ஐஜி கண்ணன், வேலூர் டிஐஜி முத்துசாமி, திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் மேற்பார்வையில் இன்று நடைபெற்றது.
இம்முகாமில் காவல் நிலையங்களில் புகார் அளித்து விசாரணையில் திருப்தி அடையாத 137 மனுதாரர்கள், புதிய மனுதாரர்கள் 437 என மொத்தம் 574 மனுதாரர்களும் மற்றும் 250 எதிர் மனுதாரர்களும் கலந்து கொண்டனர். மேலும் மனுதாரர்களோடு அவர்களது உறவினர்களும் வந்திருந்ததால் மண்டபே நிரம்பி காட்சியளித்தது.
மனுதாரர்களிடம் ஏடிஎஸ்பிகள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் விசாரணை நடத்தினர். இதில் 533 மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.
முகாமில் ஏடிஜிபி சங்கர் பேசியதாவது,
இன்றைக்கு இந்த முகாம் திருவண்ணாமலை பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு சிரமம் இன்றி அவர்கள் தரும் புகார்களை பதிவு செய்யும்படியும், அப்படி பதிவு செய்யப்படும் மனுக்கள் நல்ல முறையில் விசாரிக்கப்பட்டு தீர்வு காண வேண்டும் எனவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.
ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் புகார்களை வாங்குவதற்கு வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். காவல்துறை உயர் அதிகாரிகளும் பொதுமக்களை சந்தித்து புகார்களை பெற்று வருகிறார்கள். அது மட்டுமின்றி ஏற்கனவே கொடுத்துள்ள புகார் மீது நடத்தப்பட்ட விசாரணையில் பொது மக்களுக்கு திருப்தி இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள அவர்களுடைய பீட் பேக்கை கேட்கிறோம்.
திருப்தி இல்லாதவர்களை மீண்டும் அழைத்து அதிகாரிகள் பேசுகிறார்கள். வேறு விதமாக விசாரிக்க முடியவில்லை என்றால் சட்டப்படி தகுந்த அறிவுரைகளை கூறுகின்றனர். இந்த முகாம்கள் நடத்தப்படுவதனால் பொதுமக்களுக்கு கண்டிப்பாக திருப்தி ஏற்படும்.
காவல்துறையை பொருத்தவரைக்கும் எல்லா புகார்களுக்கும் தீர்வு காணப்படும் என உறுதி சொல்ல முடியாது. ஒரு சில புகார்கள் காவல்துறையின் அதிகாரத்தின் கீழ் வராது. ஒரு சில புகார்களில் காவல்துறை சட்டத்தின் படி உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது.
அப்படிப்பட்ட விஷயங்களில் இரு தரப்பினையும் அழைத்து சமரசம் செய்து வைக்கலாம். சமரசம் செய்து வைக்க முடியவில்லையென்றால் அவர்கள் சட்டப்படி கோர்ட்டுக்கு சென்று தான் தீர்வு காண வேண்டும். பொதுமக்களின் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், போலீஸ் நிலையங்களில் மனுக்களின் தன்மையை அறிய தனி மென்பொருள் துவக்கி வைத்தார். Petition Enquiry and Tracking System என்ற இந்த புதிய மென்பொருளை போலீஸ் நிலையங்களில் புதியதாக நியமிக்கப்பட்ட வரவேற்பாளர்கள் பயன்படுத்துவார்கள்.
Also read this…
பக்தர்களுக்கு நாள் முழுக்க அன்னதானம்- ஊராட்சி தலைவர் ஏற்பாடு