திருவண்ணாமலை நகைக் கடைகளில் கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று அதிரடி சோதனை மேற்கொண்டார். அப்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்த கடைகளுக்கு அபராதம் விதித்தார்.
புதிய கட்டுப்பாடு
தமிழக அரசு கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு 24.03.2020 முதல் ஊரடங்கை பிறப்பித்து வருகிறது. ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை தடுப்பு சட்டத்தின் கீழ் 30.04.2021 நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் 20.04.2021 அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும்¸ ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும்¸ பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறையை பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிக்க குழு
திருவண்ணாமலை மாவட்டத்தில் முககவசம் அணிதல்¸ சமூக இடைவெளியை கடைபிடிப்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு¸ முககவசம் அணியாத¸ சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும்¸ முககவசம் அணியவும்¸ அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி திரையரங்குகள்¸ ஓட்டல்கள்¸ தேநீர் கடைகள் தொழிற்சாலைகள் மற்றும் பேருந்துகள் செயல்படவும்¸ திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும்¸ இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு தெரிவித்துள்ள கட்டுப்பாடுகளை மீறும் நபர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இது சம்மந்தமாக கண்காணிப்பு பணியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
அதிரடி சோதனை
திருவண்ணாமலை நகரில் நேற்றும்¸ இன்றும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இன்று திருவண்ணாமலை பஜாரில் உள்ள காமதேனு மற்றும் சுமங்கலி நகைக்கடைகள்¸ அபிராமி ஓட்டல்¸ சரவணா பாத்திரக்கடை போன்ற வியாபார நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினார்.
அப்போது காமதேனு மற்றும் சுமங்கலி நகைக்கடைகளில் கொரோனா விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக கூட்டத்தைச் சேர்த்து வியாபாரம் செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சுமங்கலி நகைக்கடையில் மேல்தளத்திலிருந்து சினிமா தியேட்டரிலிருந்து வெளியேறுவது போல் கூட்டம் வெளியேறியது. உடனடியாக நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து காமதேனு நகைக்கடைக்கு ரூ.5ஆயிரமும்¸ சுமங்கலி நகைக்கடையின் கீழ் தளத்திற்கு ரூ.5ஆயிரமும்¸ மேல்தளத்திற்கு ரூ.5ஆயிரமும் அபராதம் வசூலிக்கப்பட்டது. சரவணா பாத்திரக்கடையில் சானிடைசர் பயன்படுத்தாததையும்¸ முககவசமின்றி வாடிக்கையாளர்களை அனுமதித்ததையும் பார்த்து அந்த கடைக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபிராமி ஓட்டலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததை பார்த்து எவ்வளவு சொன்னாலும் மண்டையில் ஏறாதா? என கேஷியரை கடிந்து கொண்டு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்தார்.
காமதேனு நகைக்கடையில் இது தான் கடைசி என எச்சரித்தார். அபிராமி ஓட்டலில் இனி விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடைக்கு சீல் வைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சுமங்கலி நகைக்கடையில் உள்ள கூட்டத்தை பார்த்து என்ன இதெல்லாம் என கேஷியரிடம் கேட்டார். அதற்கு அவர் நாங்க எவ்வளவோ சொல்றோம் சார் என்றார். அப்போ கடையை பூட்டி விடலாமா? என கலெக்டர் கேட்டதற்கு பதறி போன கேஷியர் வேண்டாம் சார் என்றார்.
சென்ற முறை கொரோனா விதிமுறைகளை மீறியதற்காக சுமங்கலி நகைக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடைகளில் விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டதை பார்த்து டென்ஷனான கலெக்டர் கடைகளை கண்காணிக்காவிட்டால் அதை நானே செய்ய வேண்டியதிருக்கும் என நகராட்சி ஆணையாளரை எச்சரித்தார்.
பிறகு கலெக்டர் சந்தீப் நந்தூரி வேட்டவலம் ரோடு¸ திருமஞ்சன கோபுரத் தெரு ஆகிய இடங்களில் நடந்த சிறப்பு காய்ச்சல் பரிசோதனை மற்றும் கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது¸
திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது 1 அரசு மருத்துக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 350 படுக்கை வசதிகள்¸ 11 அரசு மருத்துவமனைகளில் 410 படுக்கை வசதிகள்¸ 1 தனியார் மருத்துவமனையில் 150 படுக்கை வசதிகள்¸ 2 கோவிட் கேர் சென்டர்களில் 560 படுக்கை வசதிகள் என மொத்தம் 15 இடங்களில் கோவிட்-19 நோய் தொற்று சிகிச்சைக்காக 1470 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்படுகிறது. அதே போல் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் 2ஆயிரம் பேர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. போதுமான அளவு தடுப்பூசி இருப்பு உள்ளது.
கொரோனா விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க 25 குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் தினமும் ரூ.2லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் இம் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 201 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று 135 ஆக இருந்த பாதிப்பு இன்று 200ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.