ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்திய குருமன்ஸ் இன பெண்கள் தங்களையும் கைது செய்ய கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குருமன்ஸ் இன மக்களுக்கு தமிழ்நாட்டில் குரும்பா என்ற பெயரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) சான்று வழங்கப்படுகிறது. இதனால் கல்வி¸ வேலை வாய்ப்பில் உரிமைகள் பாதிக்கப்பட்டு வருவதால் தங்களுக்கு எஸ்.டி என (பழங்குடி) சாதி சான்று வழங்க வேண்டும் என அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் 1000த்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். நேற்று முதல் அவர்கள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். ஏராளமான பெண்களும்¸ மாணவ- மாணவியர்களும் இதில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் தங்களின் பாரம்பரிய வழக்கப்படி தலையில் தேங்காய் உடைத்தும்¸ கன்னட மொழியில் ராகம் பாடியும்¸ கம்பளிக்காக ஆட்டின் ரோமங்களை நெய்தும் காட்டினர். போராட்டத்தை விலக்கிக் கொள்ளும்படி அவர்களிடம் மாவட்ட வருவாய் அதிகாரி மு.பிரியதர்ஷினி¸ கோட்டாட்சியர் வெற்றிவேல் ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
பழங்குடியின மக்களின் கலாச்சாரத்தை ஆய்வறிக்கை செய்து எஸ்.டி. சாதி சான்று வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என அவர்கள் உறுதியாக தெரிவித்து விட்டனர். இரவு முழுவதும் அவர்கள் ஆர்.டி.ஓ அலுவலகத்திலேயே தங்கியிருந்தனர். இன்று 2 நாளாக போராட்டம் தொடர்ந்தது. குருமன்ஸ் இன மக்கள் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர். தமிழக முதல்வர் 3 நாட்களில் திருவண்ணாமலைக்கு வர உள்ள நிலையில் இவர்களது போராட்டம் அதிகாரிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசை கொண்டு அவர்களை அப்புறப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
இதனால் நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். ஆர்.டி.ஓ. அலுவலகத்தை சுற்றி அவர்கள் நிறுத்தப்பட்டனர். கடைசியாக குருமன்ஸ் இன மக்களிடம் வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜயா¸ திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு(பெறுப்பு) பாலகிருஷ்ணன் ஆகியோர் பேச்சு வார்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து குருமன்ஸ் இன மக்களில் ஆண்களை மட்டும் போலீசார் கைது செய்ய தொடங்கினர். இதைப்பார்த்த பெண்களும்¸ மாணவ-மாணவியர்களும் தங்களையும் கைது செய்ய கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது👆(வீடியோ). அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். பிறகு அவர்கள் போலீஸ் வாகனங்களில் ஏற்றி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 223 பேர்¸ திருவண்ணாமலை-திருக்கோயிலூர் ரோட்டில் உள்ள சுபலட்சுமி மகாலிலும்¸ சோமாசிபாடி புதூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.