Homeஅரசியல்எ.வ.வேலு ஹாட்ரிக் வெற்றி பெற முடியுமா?

எ.வ.வேலு ஹாட்ரிக் வெற்றி பெற முடியுமா?

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் திமுகவில் பிச்சாண்டி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது போல எ.வ.வேலு ஹாட்ரிக் வெற்றியை பெறுவாரா? அல்லது அதற்கு பா.ஜ.க தடை போடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

2 லட்சத்து 84 ஆயிரம் 

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் 1லட்சத்து 37ஆயிரத்து 856 ஆண் வாக்காளர்களும்¸ 1லட்சத்து 46ஆயிரத்து 956 பெண் வாக்காளர்களும்¸ 39 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 851 வாக்காளர்கள் உள்ளனர். 

ஒரு தொகுதியில் 2 எம்.எல்.ஏ

51-52ம் ஆண்டில் 309 சட்டமன்ற தொகுதிகளில் 62 தொகுதிகளில் இரட்டை உறுப்பினர் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டன. அதில் திருவண்ணாமலையும் ஒன்று. இரட்டை உறுப்பினர் என்றால் ஒருவர் தலித் அல்லது பழங்குடியினராக இருப்பார். 1951ல் அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் காங்கிரசை சேர்ந்த ராமச்சந்திர ரெட்டியார்¸ தங்கவேல்(தலித்) ஆகியோர். 1957ல் ப.உ.சண்முகமும்¸ சி.சந்தானமும்(தலித்) ஆகியோர் சுயேச்சையாக நின்று ஒரே தொகுதியில் 2 எம்.எல்.ஏ என இரட்டை எம்.எல்.ஏவானார்கள் 

அதன் பிறகு இரட்டை உறுப்பினர் முறை ஒழிக்கப்பட்டு தனித் தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டன. 1962ல் காங்கிரசைச் சேர்ந்த பழனிப்பிள்ளையும்¸ 1967ல் விஜயராஜூம் வெற்றி பெற்றனர். இவர்களை எதிர்த்து நின்று தோற்றவர் ப.உ.சண்முகம். அதன்பிறகு 71லும்¸ 77லும் ப.உ.சண்முகம் வெற்றிவாகை சூடினார். 80ல் காங்கிரசைச் சேர்ந்த நாராணசாமியும்¸ 84ல் காங்கிரசைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ரவீந்திரனும் வெற்றி பெற்றனர். 

எ.வ.வேலு ஹாட்ரிக் வெற்றி பெற முடியுமா?
எ.வ.வேலு வாக்கு சேகரிப்பு  

பிச்சாண்டி ஹாட்ரிக் வெற்றி 

89ல் திமுகவைச் சேர்ந்த பிச்சாண்டியும்¸ 91ல் காங்கிரசைச் சேர்ந்த வி.கண்ணனும்¸ அதன்பிறகு 1996¸ 2001¸ 2006 ஆகிய 3 தேர்தல்களிலும் பிச்சாண்டி ஹாட்ரிக் வெற்றிம்  பெற்றார். 2011¸ 2016ல் திமுகவைச் சேர்ந்த எ.வ.வேலு வெற்றி பெற்றிருக்கிறார். இப்போது 3 முறையாக களம் காண்கிறார். இதில் அவர் வெற்றி பெற்றால் பிச்சாண்டியை போல் எ.வ.வேலு ஹாட்ரிக் வெற்றியை பெறுவார். இத்தொகுதியில் திருவண்ணாமலை நகராட்சியும்¸ 80 கிராமங்களும் அடங்கியுள்ளன. வன்னியர்¸ முதலியாரை அடுத்து ஆதிதிராவிடர்¸ யாதவர்¸ ரெட்டியார்¸ நாயுடு உள்பட மற்ற சமூகத்தினரும் பரவலாக உள்ளனர். 

See also  திருவண்ணாமலை 25வது வார்டில் மறு வாக்குப்பதிவா?

அதிமுக சோகம்

அதிமுக ஆரம்பிக்கப்பட்ட 1972க்கு பிறகு 49 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர்¸ ஜெயலலிதா போன்ற ஆற்றல் மிகுந்த தலைவர்கள் இருந்தும் ஒரே ஒரு முறை கூட திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் வெற்றியை பெறவில்லை. 4முறை போட்டியிட்டும் இரட்டை இலைக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த முறை வலிமை மிகுந்த எ.வ.வேலுவை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன்¸ அக்ரி.கிருஷ்ணமூர்த்தி¸ முன்னாள் மாவட்ட செயலாளர் பெருமாள்நகர் ராஜன் ஆகியோரில் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு முறை கூட வெல்ல முடியாத தொகுதியில் தேவையில்லாத ரிஸ்க் எதற்கு என அதிமுக தலைமை கூட்டணி கட்சியான பா.ஜ.கவிற்கு ஒதுக்கி தந்து விட்டது. 

விவசாயத்தையே நம்பி உள்ள திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் ஒரு தொழிற்சாலையை உருவாக்கித் தர ஏற்கனவே வெற்றி பெற்றவர்கள் தவறி விட்டனர். திண்டிவனம் ரோட்டில் பல ஏக்கரில் கட்டப்பட்டு மூடப்பட்டிருக்கும் டான்காப் எண்ணெய் தொழிற்சாலையை கூட திறக்க யாரும் முன்வரவில்லை. சிப்காட்டும் செய்யாருக்கு சென்று விட்டது. என்ன செய்வார்கள் மக்கள்? வேலை தேடி சென்னை¸ பெங்களுர் என மற்ற நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.

எ.வ.வேலு ஹாட்ரிக் வெற்றி பெற முடியுமா?
தணிகைவேல் வாக்கு சேகரிப்பு  

பக்தர்கள் மன வேதனை

வரலாற்று சிறப்பு மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய வசதிகளும் செய்து தரப்படவில்லை. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். இந்த கோபுரங்களை ஒட்டிச் செல்லும் மதில்சுவர் ஓரங்கள் அசுத்தம் நிறைந்து காட்சியளிக்கிறது. இதை பார்த்து பக்தர்கள் மன வேதனை அடைந்து செல்கின்றனர். இதை தடுக்க வேண்டிய கோயில் நிர்வாகம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. கோயில் மதில்சுவர் பகுதிகளில் பூங்கா அமைத்து எனது செலவில் பராமரிப்பு செய்வேன் என 2011 தேர்தலில் எ.வ.வேலு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அண்ணாமலையார் கோயில் மேம்பாடுக்காக எதையும் செய்யவில்லை. 4 வருடங்களாக கோயிலுக்கு யானை வாங்கிக் கொண்டிருக்கிறார் என்றால் பாருங்களேன். 

See also  தி.மலை கோயிலில் டிடிவி.தினகரன் மகள் திருமணம்

கிடப்பில் ரயில் பாதை

அண்ணாமலையார் கோயில் வருமானத்தை கொண்டு பள்ளி¸ கல்லூரிகள்¸ முதியோர் இல்லங்கள் போன்றவை ஏற்படுத்தப்படவில்லை. காய்கறி மார்க்கெட்¸ பூ மார்க்கெட் போன்றவை இன்னும் இட நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகின்றது. சென்னை¸ பெங்களுருக்கு இத் தொகுதி மக்கள் அதிக அளவில் சென்று வரும் நிலையில் வார இறுதி நாட்களிலும்¸ பண்டிகை நாட்களிலும் போதிய பஸ் வசதி இல்லாமல் அவதி பட்டு வருகின்றனர். ரயில் வசதி கனவாகி போய் விட்டது. திருவண்ணாமலை – திண்டிவனம் ரயில் பாதை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு விட்டது. எதற்கெல்லாமோ போராட்டம் நடத்தும் திமுக இதற்காக எந்தவித போராட்டத்தையும் நடத்தாமல் மனு கொடுப்பதோடு கடமை முடிந்தது என்று இருந்து விட்டதாக தொகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

எ.வ.வேலு ஹாட்ரிக் வெற்றி பெற முடியுமா?
அருள் வாக்கு சேகரிப்பு  

இளைஞர்கள் ஆதங்கம் 

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பிற்காக எதாவது பெரிய அளவிலான திட்டம் ¸ தொழிற்சாலை ( செய்யார் சிப்காட்டுனு சொல்லி எங்களை ஏமாத்த வேண்டாம் ) எதாவது இந்த மாவட்டத்துக்கு வந்து இருக்கா ? இப்போ சென்னைக்கு மிக அருகே இருக்க மாவட்டம்தான் நம்முடையது. ஒவ்வொரு பண்டிகை நாளுக்கும் சென்னை ¸ திருச்சி ¸ ஓசூர் ¸ பெங்களுர் போன்ற இடங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் இளைஞர்களை பாருங்கள் 50 சதவீதம் நம்ம மாவட்டத்தை சேர்ந்தவங்களாதான் இருப்பாங்க. பொறந்த ஊரை விட்டு வொயிட் காலர் வேலைனு இல்லைங்க அடிப்படை வேலைக்கே இந்த மாவட்டத்தை விட்டு வெளியேற ஆரம்பிச்ச இளைஞர்களுக்கு என்ன பதில் வச்சு இருக்கிங்க ? என சமூக வலைதளங்களில் இளைஞர்கள் தங்களது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்து வருகின்றனர். 

இந்த முறையாவது வரும் தலைமுறைக்கான வேலைவாய்ப்புக்கு வெளியே செல்லாமல் நம் மாவட்டத்துக்குள்ளே திட்டங்களை வைத்திருக்கும் கட்சியோ¸ வேட்பாளரையோ தேர்வு செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பி நம் எதிர்காலத்தை நிர்மாணிப்போம் எனவும் அவர்கள் தங்களது கருத்தை பதிவிட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் 

ஆனால் திமுக¸ பா.ஜ.க வேட்பாளர்கள் வாக்குறுதி எதையும் வெளியிடாமல் கட்சியின் தேர்தல் அறிக்கையை சொல்லி ஓட்டு கேட்டு வருகின்றனர். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் இரா.அருள் தொகுதி வளர்ச்சிக்கான திட்டங்கள் அடங்கிய நோட்டீசை வீடு வீடாக வழங்கி ஓட்டு கேட்டு வருகிறார். சுறுசுறுப்பாக ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார்.அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் வேட்பாளர் ஏ.ஜி.பஞ்சாட்சரம் கூட்டணி கட்சியினரை அரவணைக்காமல் கடமைக்கு ஓட்டு கேட்பதாக அவரது கட்சியினரே குற்றம் சாட்டுகின்றனர். பல ஏரியாக்களில் அமமுக இங்கு நிற்கிறதா? என மக்கள் ஆச்சரியமாக கேட்கும் நிலையும் உள்ளது. 

See also  அமைச்சர் வேலு தீபாவளி பரிசு-திமுகவினர் உற்சாகம்
எ.வ.வேலு ஹாட்ரிக் வெற்றி பெற முடியுமா?
பஞ்சாட்சரம் வாக்கு சேகரிப்பு 

பலம்-பலவீனம் 

எ.வ.வேலு அரசியலுக்கு அப்பாற்பட்டு கல்வி தொண்டு மூலமாகவும்¸ இளைஞர்களுக்கான கணினி மையம்¸ மகளிருக்கான தையற்பயிற்சி ஆகியவற்றை நடத்தியும்¸ ஏழைகளுக்கு உதவிகளை செய்து வருகிறார். அருணை தமிழ்சங்கம் என்ற அமைப்பை நடத்தி விருதுகளை வழங்கி வருகிறார்.  தூய்மை அருணை மூலம் நகரை சுத்தம் செய்யும் பணியையும்¸ மரக்கன்றுகள் நடும் பணியையும் செய்து வருகிறார். முக்கியமாக கொரோனா காலத்தில் பல்வேறு பிரிவினருக்கு நலத்திட்ட உதவிளை வழங்கி   அவர்களது பாராட்டுதலை பெற்றார். இவைகளெல்லாம் வேலுவுக்கு பலமாக உள்ளது. கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுக்காதது¸ உட்கட்சி பூசல் இவருக்கு பலவீனமாகும். 

வைட்டமின் “ப”

பா.ஜ.க வேட்பாளர் தணிகைவேல் இப்போதுதான் தீவிர அரசியலுக்கு வந்திருக்கிறார். ஏழை மக்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து வருகிறார். கொரோனா காலத்திலும் நிவாரண உதவிகளை வழங்கியிருக்கிறார். ஒரு குறுகிய வட்டத்திலேயே இருந்து விட்டது அவரது பலவீனமாகும். தேர்தல் பிரச்சாரத்தில் இவர் எ.வ.வேலுவுக்கு கடுமையான போட்டிகளை கொடுத்து வருகிறார். உதவிக்கு வெளி மாநில பா.ஜ.கவினர் வருகை தந்துள்ளனர். இவரது வெற்றிக்கான வியூகங்களை பா.ஜ.கவின் மேல்மட்ட தலைவர்கள் வகுத்து கொடுத்து வருகின்றனர். ஆனாலும் இவருக்கு அதிமுகவினரின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கமால் உள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை முடிவு செய்யும் இடத்தில் வைட்டமின் “ப” உள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!