பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் – உண்ணாமலையம்மன் திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது.
இறைவனின் திருமணங்கள்
முருகன் – தெய்வானை¸ ராமபிரான் – சீதாதேவி¸ பரதன் – மாண்டவி¸ லட்சுமணன் – ஊர்மிளை¸ மீனாட்சி சுந்தரேஸ்வரர்¸ ஆகியோருக்கு திருமணம் நடைபெற்ற தினம் பங்குனி உத்திரம் ஆகும். இறைவனின் திருமணங்கள் நடந்த இந்நாளில் கோயில்களில் திருக்கல்யாண வைபவங்கள் நடத்தப்படுவது வழக்கம்.
திருமாலும்¸ பிரம்மாவும் அடிமுடி காணமுடியாத இறைவன் அருள்பாலித்து வரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 12 மாதங்களும் விழாக்கள் நடைபெறும். ஒரு வருடத்தில் 89 நாட்கள் முக்கிய விழாக்கள் நடக்கிறது. இதில் பங்குனி மாதத்தில் நடக்கும் திருக்கல்யாண உற்சவம் விசேஷமானதாகும். மற்ற கோயில்களில் கருவறையில் திருக்கல்யாணம் நடைபெறாது. ஆனால் உலகிலேயே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மட்டும்தான் முதலில் கருவறையிலும்¸ பிறகு மண்டபத்திலும் திருக்கல்யாணம் நடக்கும்.
திருக்கல்யாணம்
பங்குனி உத்திரத்தையொட்டி அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டது. பகல் 12 மணிக்கு அண்ணாமலையார் கருவறையில் அண்ணாமலையாருக்கும்¸ கருவறை தெய்வமான போகசக்தி அம்மனுக்கும் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. பிறகு அண்ணாமலையார் சன்னதியில் இருந்து எடுத்து வரப்பட்ட மாங்கல்யத்தை உண்ணாமலையம்மன் சன்னதியில் உண்ணாமலையம்மனுக்கு சிவாச்சாரியார்கள் கட்டினார்கள்.
மாலை மாற்றுதல்
இதைத் தொடர்ந்து உற்சவர்களுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. தாய்வீடான குமரக்கோயிலுக்கு உண்ணாமலையம்மன் சென்றார். அங்கு மண்டகப்படி நடைபெற்றது. மாலை 5 மணி அளவில் அங்கிருந்து அவர் சீர்வரிசையுடன் அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டார். கோயிலில் கொடிமரத்திற்கு முன்பு அவரும்¸ அண்ணாமலையாரும் எதிர்எதிரே நிறுத்தி வைக்கப்பட்டனர். அங்கு மாலை மாற்றுதல்¸ பூப்பந்து எறிதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் பிறகு அலங்கார மண்டபத்தில் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.
பக்தர்கள் முழக்கம்
அங்கு சிவாச்சாரியார்கள் விதவிதமான பழங்கள்¸ பலகாரங்களை வைத்து சிறப்பு யாகம் வளர்த்தனர். வேத மந்திரங்கள் முழங்க அம்பாளின் கழுத்தில் சிவாச்சாரியார் மாங்கல்யத்தை அணிவித்தார். அப்போது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்¸ உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி ஆகியோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி மாடவீதி உலா நடைபெற்றது.