எ.வ.வேலுக்கு உள்ளடி வேலை செய்யும் கூட்டம்¸ உதயசூரியனுக்கு ஒட்டு போட வேண்டாம் என ரகசியமாக சொல்லி கொண்டிருப்பதாக சாவல்பூண்டி சுந்தரேசன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.
திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் 2 நாட்களாக சோதனை நடத்தினர். இதில் ரூ.3.50 கோடி கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதை மறுத்த எ.வ.வேலு ஒரு பைசாவை கூட கைப்பற்றப்படவில்லை என கூறியிருந்தார்.
சாவல்பூண்டி சுந்தரேசன்
எ.வ.வேலுவுக்கு 8 காலேஜ் இருக்கு. தமிழ்நாட்டில் 6ஆயிரம் ஏக்கர் நிலம்¸ ஸ்பின்னிங் மில் உள்ளது. கிரானைட் மில் உள்ளது. மெடிக்கல் காலேஜ் உள்ளது. கரூரில் ரூ.500 கோடியை பைனான்ஸில் விட்டுள்ளார். சினிமாவுக்கு பைனான்ஸ் செய்கிறார். சினிமா தயாரிக்கிறார். டிவி தொடர் எடுக்கிறார். 6 தடவை எம்.எல்ஏ¸ ஒரு தடவை மந்திரி¸ 20 வருடமாக மாவட்ட செயலாளர் என்றெல்லாம் திமுக நிர்வாகியிடம் பேசியதால் திமுக மாவட்ட துணைச் செயலாளராக இருந்த சாவல்பூண்டி சுந்தரேசன் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
அவர் பேசியதை வைத்து இந்த ரெய்டு நடைபெற்றதாக எ.வ.வேலுவுடன் இருந்த வழக்கறிஞர் விடுதலை கூறியிருந்தார். இந்நிலையில் சாவல்பூண்டி சுந்தரேசன்¸தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
காக்கை மீது வீண் பழி
காக்கை உட்கார பனம்பழம் விழுந்து விடுகிறது .இல்லை இல்லை காக்கை கூட உட்காரவில்லை காற்று ஊர் முழுவதும் சுழன்று அடிக்க அடித்த காற்றால்அங்கங்கே விழுந்த பனம் பழம் போல் இங்கேயும் பனம் பழம் விழுந்துவிட்டது காக்கை பாவம் அந்த பக்கம் பறந்து போகக் கூட இல்லை ஆனால் அந்த காக்கை மீது வீண் பழியாக காக்கையால் தான் பனம்பழம் விழுந்து விட்டது என்று சிலர் கதை கட்ட புறம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
பழி ஓரிடம் பாவம் என்னிடம் காக்கையின் துன்பம் எனக்கு என்னுடைய அந்தத் துன்பம் நான் எப்படி துன்பப்படுவேன் என்பது தொடர்புடைய அவருக்குத் தெரியும் என்னைப் பற்றி அவர் முழுதாக அறிந்து இருந்தாலும் கூட வேண்டுமென்றே வீண்பழி சுமத்தி அந்த இடத்தில் தான் அமர்ந்து விட வேண்டும் என்று நினைக்கிற ஒரு கூட்டம். தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டிருந்தாலும் கூட என் உயிர் இருக்கும் வரை என் உடல் இருக்கிறவரை நான் திமுக என்ற உணர்வோடு வாழ்ந்து முடிய சங்கல்பம் கொண்டிருப்பவன் நான்
அதிகாரிகள் மிரட்டல்
ஐந்து வருடத்திற்கு முன்பு நடந்த இதே சட்டமன்றத் தேர்தலில் இதே நாளில் தொண்டை கிழிய திருவண்ணாமலை பல்லவன் நகர் பகுதியில் உதயசூரியனுக்கு ஓட்டுக் கேட்டுக் கொண்டிருந்த போதுதான் என் வீட்டைச் சுற்றி 10 போலீஸ்காரர்கள் புடைசூழ ஐந்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஏழுவருமான வரித்துறை அதிகாரிகள் என் வீட்டில் சல்லடை போட்டு சலித்து என்னை மிரட்டி என்னை கொடுமைப்படுத்திய போதும் அவைகளை எல்லாம் தாங்கிக்கொண்டு அவர்களுக்கும் பதில் சொல்லிவிட்டு யாருடைய உதவியும் நான் எதிர்பார்க்காமல் நானே பதிலைச் சொல்லிவிட்டு அடுத்த நான்கைந்து மணி நேரத்தில் உதயசூரியனுக்கு ஓட்டு கேட்டு வீதிக்கு வந்தவன் நான்.
நான் ஒன்றும் தனி ஆள் அல்ல 50 வருடமாக ஒரு ஊரை தலைமை தாங்கிய நடத்திக்கொண்டிருப்பவன் 36 ஆண்டு காலமாக ஒரு ஊராட்சியில் தோற்று போகாமல் தொடர்ந்து தலைவனாக இருப்பவன் மற்றைய எவரையும் விட எனக்கும் உறவுகள் சொந்தம் பந்தம் என்று பல வழிகளில் இருக்கிறது. எனக்கு சாவல் பூண்டி சங்கப் பலகை இருக்கிறது என் ஊர் இளைஞர் நல இயக்கம் இருக்கிறது நன்றியும் நேர்மையும் ஒழுக்கமும் உள்ள பக்குவப்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்கள்.
துரோகக் கூட்டம்
அத்தனை பேரும் நான் சொல்வதைக் கேட்பார்கள் உதயசூரியனுக்கு மட்டும்தான் சுந்தரேசன் ஓட்டு கேட்பான் என்பதை அறிவார்கள் தொகுதியிலேயே சதவீத கணக்கில் மற்ற எந்த ஊரையும் விட உதய சூரியனுக்கு அதிக ஓட்டு பெற்று கொடுத்தவன் நான் இந்த முறை அதை விடவும் கூடுதலாக வாக்கு பெறப் போகிறவன் நான் ஆனால் தன்னுடைய வார்டில் உதயசூரியனுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று தனக்கு வேண்டியவர்களிடம் ரகசியமாக சொல்லிக் கொண்டிருக்கிற ஒரு சில துரோகக் கூட்டம் கயமைக் கூட்டம் குறைந்த ஓட்டு வாங்கும் கூட்டம் எனக்கு துரோக பட்டம் சூட்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
எவவனுக்காகவோ பரிந்துபேசிதான் நான் இந்த சதி வலையில் மாட்டிக் கொண்டேனே தவிர எனக்காக நான் பலன் அடைவதற்காக என்னுடைய நன்மைக்காக நான் பேச வில்லை பேசவும் மாட்டேன். இன்னொருவனுக்காக பேசிய பேச்சுதான் என் வாழ்க்கையை போக்கை மாற்றி விட்டது அதிலும் அந்தப் பேச்சு எவனுக்காக பேசினேனோ அவனே இப்பொழுது என்னை துரோகி என்கிறான் என் வாழ்க்கையில் எனக்கு எவனும் எந்த இடத்திலும் உதவிய தில்லை விழுந்த போதெல்லாம் நானே எழுந்திருக்கறேனே தவிர எவனும் என்னை கை கொடுத்து காப்பாற்றியதில்லை
உண்மையை சொன்னால்
எவரிடமும் எதற்காகவும் காலில் விழுவது கண்ணீர் விடுவது கலகம் சொல்வது தவறு செய்து விட்டுமன்னிப்பு கேட்பது செய்ததை மறந்து விடுங்கள் என்று தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்பதெல்லாம் என் வாழ்வில் என்றும் நடந்ததில்லை என்னை வழிநடத்திய எல்லோருக்கும் என்னைத்தெரியும் நான் நேருக்கு நேர் பேசுபவனே தவிர முதுகில் குத்துபவன் அல்ல துரோகம் செய்பவன் அல்ல துணிந்து கேட்பேன் அவ்வளவுதான் துரோகம் செய்வது என்னுடைய பரம்பரையிலே கிடையாது
உனக்காக பரிந்து பேசிய என்னை குறை சொல்லி கோள் சொல்லி காட்டிக்கொடுத்து எத்தனை காலம் வாழ்ந்து விடப் போகிறாய்? நீ நான் உன்னைப் பற்றிய உண்மையை சொல்ல ஆரம்பித்தால் உன் அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிவிடும். நான் சொல்லமாட்டேன். நான் அத்தனை கேவலமானவன் அல்ல.
எதிர்க்கட்சியிடம் ரகசிய உறவு
ஒன்றை நினைவில் கொள் என் உயிர் எனக்கு மயிர் ஆனால் அது உனக்கு வெல்லம் நான் எல்லாம் பார்த்து விட்டேன் நீ தான் இன்னும் ஏராளம் பார்க்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறாய் அந்த கனவு நீ யோக்கியனாக மாறினால் நிறைவேறலாம் நீ இயல்பாகவே நீ கயவன் உனக்கு துன்பம் வந்தால் உடனே மற்றவனிடம் விலையாகி போய்விடுவாய் எனக்கெல்லாம் துன்பம் வந்தால் செத்துப் போவேனே தவிர இன்னொருவனுக்கு விலைபோக மாட்டேன். என்ன கொடுமை அதிமுக காரரிடம் கொஞ்சுகிறான். எதிர்க்கட்சிகாரனிடம் ரகசிய உறவு வைத்திருக்கிறான்.
இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாவல்பூண்டி சுந்தரேசன் போட்டு தாக்குவது யாரை என்று தெரியவில்லை. ஏற்கனவே அவர் பேசிய ஆடியோவில் எ.வ.வேலுவின் மகன் கம்பனை தாக்கியிருந்தார். இம்முறை அவர் யாரை தாக்கியிருக்கிறார்? எ.வ.வேலுவிடம் நகர பிரமுகர்கள் 5 பேர் உடன் இருப்பார்கள். இதில் யாராவது ஒருவரா? என திமுக தொண்டர்கள் குழம்பி போய் உள்ளனர்.