திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி சைக்கிளில் சென்று தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் 06.04.2020 அன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2885 வாக்குச் சாவடிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தடையை மீறி கிரிவலம்
கொரோனா பரவுதலை தடுத்திடும் பொருட்டு திருவண்ணாமலையில் பவுர்ணமி தினத்தில் கிரிவலம் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடாந்து 12வது மாதமாக இந்த மாதமும் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி நேற்று இரவு முதலே பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இன்றும் கொளுத்தும் வெளியிலை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்.
சைக்கிள் பேரணி
இதை பயன்படுத்தி சைக்கிள் பேரணி மூலம் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்திட முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயிலிலிருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணியை மகளிர் திட்ட இயக்குநர் பா. சந்திரா¸ துணை ஆட்சியர் (பயிற்சி) அஜிதாபேகம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மனைவி¸ மகனுடன்
இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டார். அவரும்¸ அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் தனித்தனி சைக்கிள்களை ஓட்டிக் சென்று 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் வாக்காளர்களிடம் 100 சதவீதம் வாக்களிப்போம்¸ தேர்தல் நாள் ஏப்ரல் 6 என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணியில்¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. அரவிந்த்¸ மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்துகுமரசாமி¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குமார்¸ அரசு அலுவலர்கள்¸ தன்னார்வலர்கள்¸ கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணி திருவண்ணாமலை ஈசான்ய மைதானம் அருகில் அண்ணா நுழைவு வாயிலிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை நகராட்சி மத்திய பேருந்து நிலையம்¸ சின்னக் கடை தெரு¸ தேரடி வீதி¸ இராஜகோபுரம்¸ திருவூடல் தெரு¸ செங்கம் சாலை¸ அரசு கலைக் கல்லூரி¸ திருவண்ணாமலை நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு¸ அடிஅண்ணாமலை¸ அபாய மண்டபம்¸ காஞ்சி சாலை வழியாக மீண்டும் அண்ணா நுழைவு வாயிலில் முடிவடைந்தது.
1லட்சம் கடிதங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த தேர்தல்களில் 136 வாக்குச் சாவடிகளில் குறைந்தளவு வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்த வாக்குச் சாவடிகளுக்கு உட்பட்ட வாக்காளர்களின் 1லட்சம் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சியரின் பெயரில் ‘100சதவீதம் வாக்களிப்போம்¸ ஏப்ரல் 6 அனைவரும் தவறாமல் வாக்களிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்ற வாசகங்கள் அடங்கிய தேர்தல் விழிப்புணர்வு தபால் அட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த அட்டையை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி¸ வெளியிட்டு அதை அஞ்சல் பணியாளர்களிடம் வழங்கினார்.