திருவண்ணாமலை அருகே குழந்தைகள் வளர்ச்சி மேற்பார்வையாளரிடம் ரூ.8 லட்சத்து 93 ஆயிரத்தை மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். மேலும் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் மாவட்ட குற்றப்பிரிவை அணுகலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா செ. சொர்ப்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பம்மாள் (வயது-61) விதவை. கணவர் பெயர் மண்ணார். தண்டராம்பட்டு வட்டாரத்தில் அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வந்தவர் ராஜேஸ்வரி.
குப்பம்மாள் குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். அப்போது, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜேஸ்வரி, கீழ்பென்னாத்தூர் வட்டம் கீழ் கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரீகனின் மனைவி ஜாய்ஸ் உமாவை குப்பம்மாளுக்கு அறிமுகம் செய்து வைத்தாராம்.
ராஜேஸ்வரியும், ஜாய்ஸ் உமாவும் சேர்ந்து குப்பம்மாளிடம், தாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அதில் பணம் முதலீடு செய்தால் அதிகமாக லாபம் தருவதாகவும், வாதியை பார்ட்னராக சேர்த்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறினார்களாம்.
இதை நம்பிய குப்பம்மாள் இருவரிடமும் பல தவணைகளில் நேரடியாகவும், வங்கி மூலமாகவும் மொத்தம் ரூ.8 லட்சத்து 93 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அதன் பின்னர் 2 பெண்களும் குப்பம்மாளை ரியல் எஸ்டேட் தொழிலில் பார்ட்னராக சேர்க்காமலும், வாங்கிய பணத்தையும் திருப்பி தராமலும் இருந்துள்ளனர்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குப்பம்மாள், இதுபற்றி கேட்ட போது அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. பணத்தை ஏமாற்றிய பெண்கள் குறித்து குப்பம்மாள் விசாரித்ததில் இதே போல் பல பேரிடம் அந்த 2 பெண்களும் ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து குப்பம்மாள், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஜாய்ஸ் உமா, ராஜேஸ்வரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நேற்று ஜாய்ஸ் உமா கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கட்டுரை மற்றும் செய்திகளை
என்ற e mail id-யில் அனுப்பலாம்