ராணுவம் உள்பட 3 அடுக்கு பாதுகாப்புடன் ஓட்டுகள் எண்ணப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் நேரில் ஆய்வு
திருவண்ணாலை திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் குழு வளாகம் மற்றும் ஆரணி வட்டம்¸ தச்சூர் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகம் ஆகிய சட்டமன்ற பொதுத் தேர்தல்-2021 வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை இன்று (23.03.2021) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது¸ இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் காவல் மேற்பார்வையாளர் (அனைத்து சட்டமன்ற தொகுதிகள்) அஜய்குமார் சௌத்ரி¸ தேர்தல் பொது மேற்பார்வையாளர்கள் அருண் கிஷோர் டோங்க்ரே (செங்கம்¸ திருவண்ணாமலை)¸ விஜய் குமார் மன்டிரி (கீழ்பென்னத்தூர்¸ கலசப்பாக்கம்)¸ பிரபாகர்¸ (போளுர்¸ ஆரணி)¸ கம்லேஷ்வர் பிரசாத் சிங்¸ (செய்யாறு¸ வந்தவாசி)¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. அரவிந்த்¸ மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்துகுமரசாமி¸ உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குமார்¸ தேர்தல் நடத்தும் அலுவலர்கள்¸ அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம்¸ திருவண்ணாமலை¸ கீழ்பென்னாத்தூர்¸ கலசப்பாக்கம்¸ போளுர்¸ ஆரணி¸ செய்யாறு. வந்தவாசி ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொதுத் தேர்தல் வாக்குப் பதிவு 06.04.2021 அன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 2885 வாக்குச் சாவடிகளில் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை,ஆரணி
செங்கம்¸ திருவண்ணாமலை¸ கீழ்பென்னாத்தூர்¸ கலசப்பாக்கம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் குழு வளாக மையத்திலும்¸ போளுர்¸ ஆரணி¸ செய்யாறு. வந்தவாசி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஆரணி வட்டம்¸ தச்சூர் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாக மையத்திலும்¸ 02.05.2021 அன்று வாக்குகள் எண்ணப்படுகிறது.
இந்த மையங்களை மாவட்ட ஆட்சியர் தேர்தல் மேற்பார்வையாளர்களுடன் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வேட்பு மனுக்கள் பரிசீலனை மற்றும் வாபஸ் பெறப்பட்டு நேற்றைய தினம் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் முடிக்கப்பட்டுள்ள. திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்படுத்துதல் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு நாள் அன்று தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மூன்று அடுக்கு பாதுகாப்பு
வாக்கு எண்ணும் மையங்களில் அடையாள அட்டை வழங்கப்படும் தேர்தல் அலுவலர்கள்¸ பணியாளர்கள்¸ வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட காவலர்கள்¸ தமிழ்நாடு சிறப்பு காவலர்கள் மற்றும் மத்திய இராணுவப் படையினர் மூலம் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் வலுவான அறையில் சிசிடிவி பொறுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.
35¸000 தபால் வாக்குகள்
மேலும்¸ தபால் வாக்குகள் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் அச்சிட்டு வந்தவுடன் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 24¸000 அரசு அலுவலர்கள்¸ பணியாளர்கள்¸ ஆசிரியர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளாகள் உட்பட 35¸000 நபர்களுக்கு தபால் வாக்குகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல்¸ மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஏற்கனவே படிவம் 12டி மூலம் விருப்பம் தெரிவித்துள்ள 8530 நபர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்படவுள்ளது என்றார்.