அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2 வது கட்ட சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். செய்யார்¸ வந்தவாசி¸ ஆரணி¸ போளுர்¸ கலசப்பாக்கம்¸ திருவண்ணாமலை¸ செங்கம் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திறந்த வேனில் நின்று பேசினார்.
இன்று பகல் கலசப்பாக்கத்தில் அதிமுக வேட்பாளர் வி.பன்னீர்செல்வத்தை ஆதரித்து அவர் பேசியதாவது¸
வரும் வழியில் பார்த்தேன். ஏரி¸ குளங்கள் எல்லாம் நிரம்பி இருக்கிறது. குடிமராமத்துப் பணியால் 50 ஆண்டு காலத்திற்கு பிறகு நிரம்பி உள்ளது. திமுக ஒரு குடும்ப கட்சி¸ அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதில் தாத்தா¸ பேரன்¸ மகன்¸ மகனுடைய பேரன் என அவர்களுக்கு மட்டுமே இடம் பெறுவார்கள். மற்றவர்கள் இடம் பெற முடியாது. ஏசியில் வாழ்ந்த ஸ்டாலினுக்கு நாட்டு மக்கள் கஷ்டம் தெரியாது. ஆனால் நான் கஷ்டப்பட்டு மக்களோடு மக்களாக இருந்து பல்வேறு பதவிகளில் இருந்து வளர்ந்து முதலமைச்சர் ஆனவன். ஆகையால் மக்களுடைய கஷ்டம் அனைத்தும் எனக்கு தெரியும். நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் நாற்று நடத்தெரியுமா? என்று கேட்டார். உடனே நான் வயலில் இறங்கி நாற்று நட்டேன். காஞ்சிபுரத்தில் வரப்பில் நடக்கத் தெரியாமல் ஸ்டாலின் சேற்றில் விழந்து விட்டார். அவர் என்னை பார்த்து போலி விவசாயி என்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவர் பேசி முடித்ததும் எதிரே கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் கலசப்பாக்கத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என கேட்டார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் இந்த கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளர் தணிகைவேல்¸ கீழ்பென்னாத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் செல்வகுமார் ஆகியோரை ஆதரித்து காந்தி சிலை அருகில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது அவர் தாமரை சின்னத்தை காட்டி தணிகைவேலுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அப்போது பேசிய அவர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாதபோது ஸ்டாலினை நம்பி திமுகவை ஒப்படைக்கவில்லை. தந்தையே மகனை நம்பவில்லை நாட்டு மக்கள் எப்படி நம்புவார்கள் ஸ்டாலின் கையில் கொடுக்கும் விபூதியை கொட்டி விடுகிறார். குங்குமம் வைத்தால் அழித்து விடுகிறார். ஆனால் இப்போது வேலை கையில் பிடித்து இரட்டை வேடம் போடுகிறார் என்றார்.
பேச்சை துவக்கும் போது அவர் வேட்பாளர் தணிகைவேலை பண்பானவர்¸ சரியானவர்¸ மோடியின் ஆசி பெற்ற வேட்பாளர் என அறிமுகப்படுத்தினார்.