திருவண்ணாமலை ஜோதி மார்க்கெட்டில் 5 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் நள்ளிரவு நேரத்தில் சீல் வைத்தனர். இதனால் கொதிப்படைந்த வியாபாரிகள் நகரமன்ற தலைவரை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து கடைகளுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டது.
திருவண்ணாமலை தேரடி தெருவில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. ஜோதி மார்க்கெட் என்று அழைக்கப்படும் இங்கு 130 கடைகள் உள்ளன. இவை அனைத்தும் நகராட்சிக்கு சொந்தமானதாகும். இந்த கடைதாரர்களிடமிருந்து நகராட்சிக்கு ரூ.5 கோடிக்கு மேல் வாடகை பாக்கி வர வேண்டியது உள்ளதாக கூறப்படுகிறது.
நகராட்சி கடைகளின் வாடகை உயர்த்தப்பட்ட போது ஜோதி மார்க்கெட் கடைகளின் தரை வாடகையை ரூ.800லிருந்து ரூ.8ஆயிரமாகவும், கடைகளுக்கு ரூ.1200லிருந்து ரூ.12ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது. பல மடங்கு வாடகை உயர்த்தப்பட்டதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் தரை வாடகையை ரூ.8 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாகவும், கடை வாடகையை ரூ.12ஆயிரத்திலிருந்து ரூ.22 ஆயிரமாகவும் 200 மடங்கு வரை வாடகை உயர்த்தப்பட்டதால் வியாபாரிகள் விழிபிதுங்கி நின்றனர்.
மேலும் பூ வியாபாரிகள் வாழ்வாதாரத்தை கேள்வி குறிக்கியாக்கிடும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு பல மடங்கு உயர்த்தப்பட்ட வாடகையை கட்டாத கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கைகளில் இறங்கினர். இதை கண்டித்து வியாபாரிகள் பூக்களை ரோட்டில் கொட்டி சாலை மறியல் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர் .வாடகையை நிர்ணயம் செய்ய அரசு குழுவை நியமித்துள்ள நிலையில் நகராட்சி அதிகாரிகள் இதைப்பற்றி கவலைப்படாமல் தாங்கள் விதித்த வரியில் இருந்து எந்த வித மாற்றமும் செய்ய மாட்டோம் என கறாராக சொல்லி விட்டனர்.
பகலில் சென்று கடைகளுக்கு சீல் வைத்தால் பிரச்சனை ஏற்படுகிறது என்பதால் நேற்று நள்ளிரவு ஜோதி மார்க்கெட்டுக்கு சென்ற நகராட்சி அதிகாரிகள் 5 கடைகளுக்கு சீல் வைத்தனர். அதிகாலையில் கடைக்கு வந்த பார்த்த வியாபாரிகள் சீல் வைக்கப்பட்டு கடையின் ஷட்டரில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்தனர்.
அந்த நோட்டீசில் திருவண்ணாமலை நகராட்சிக்கு சொந்தமான கடைக்கு செலுத்த வேண்டிய வாடகை நாளது தேதி வரை செலுத்தப்படாமல் உள்ளது. எனவே, தமிழ்நாடு மாவட்ட சட்ட நகராட்சிகளின் பிரிவுகளின்படியும் மற்றும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023ன் படியும் தற்போது தாங்கள் நடத்தி வரும் கடையினை நகராட்சியால் நடவடிக்கை மேற்கொண்டு பூட்டி சீல் வைக்கப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கடையின் உரிமம் ரத்து செய்வதுடன், கடையை பொது ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள், சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட வியாபாரிகளுடன், சங்க நிர்வாகிகள் நகரமன்றத் தலைவரை சந்தித்து முறையிட்டனர். அதன்பிறகு அவரது அறிவுறுத்தலின் பேரில் கடைகளுக்கு வைக்கப்பட்டிருந்த சீலை அதிகாரிகள் அகற்றினர்.
இது குறித்து வியாபாரிகள் சங்கத் தலைவர் டி.எம்.சண்முகத்திடம் கேட்ட போது ஜோதி மார்க்கெட் போன்று மத்திய பஸ் நிலையத்தில் 5 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து கெடுபிடி செய்து வந்தால் மீண்டும் போராட்டத்தில் இறங்குவதை தவிர வேறு வழியில்லை, இது பற்றி நாளை பேசி முடிவெடுக்க உள்ளோம் என்றார்.
தொடர்புடைய செய்தி…
ரோட்டில் பூக்களை கொட்டி வியாபாரிகள் சாலை மறியல்
[email protected] – ல் செய்தி கட்டுரைகளை அனுப்பலாம்.