திருவண்ணாமலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் நிர்வாணமாக வந்த விவசாயிகள் கைது செயய்ப்பட்டனர்.
பா.ஜ.கவுக்கு எதிராக
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்திருந்தனா. அதன்படி திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளருக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்ய விவசாயிகள் சக்கரபாணி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் இன்று அரை நிர்வாணமாக வரப் போவதாக தெரிவித்திருந்தனர்.
போலீசார் அதிர்ச்சி
இதற்காக பெரியார் சிலை அருகேயிருந்து ஊர்வலமாக வந்தனர். அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். அப்போது அந்த கூட்டத்திலிருந்து வெளியே வந்த ஒரு விவசாயிகள் 2 பேர் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் நிர்வாணமாக நடந்து வந்ததை பார்த்து போலீசார் அதிர்ந்தனர். பொது இடத்தில் நிர்வாண ஊர்வலம் சென்றதை பார்த்து பெண்கள் முகத்தை சுழித்துக் கொண்டு சென்றனர்.
போலீசார் ஓடி வந்து அவர்கள் மீது துணியை போர்த்தினர். பிறகு விவசாயிகள் மனு தாக்கல் செய்ய சென்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைக் கண்டித்து விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நிர்வாணமாக விவசாயிகள் அழைத்து வரப்பட்டது குறித்து மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது¸
மரபணு மாற்றப்பட்ட விதை
சிறு¸குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.6 ஆயிரம் பென்ஷன் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும்¸ விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபம் தரப்படும்¸ 1 கிலோ ரூ.18 க்கு விற்ற நெல்லுக்கு ரூ.54 தரப்படும்¸ கரும்பு டன்னுக்கு ரூ.2700 லிருந்து ரூ.8¸100 ஆக உயர்த்தி தரப்படும்¸ கோதவரி – காவிரி இணைப்பை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும்¸ ஒரு விவசாயிக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படும்¸ இளைஞர்களை ஆண்மை இழக்க செய்யும்¸ பெண்களை கருதரிக்காமல் செய்யும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் இறக்குமதி செய்யப்படாது என மத்திய அமைச்சர் அமித்ஷா எங்களிடம் உறுதி அளித்தார். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை.
புதிய வேளாண் சட்டத்தின் மூலமாக மரபணு மாற்றப்பட்ட விதையை கொண்டு வருகிறார்கள்¸ இது நியாயமா? விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்காமல் விவசாயிகளின் வேட்டி ¸ துண்டு ¸ கோவனம் போன்றவற்றை மத்திய அரசு உருவி விட்டதால் நிர்வாணமாக சென்றோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.