திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எஸ்.தணிகைவேல், ராகு காலத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
நல்ல நேரம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான மனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இன்றோடு மனு தாக்கல் முடிவடைந்தது¸ தேர்தலில் வெற்றி பெற தங்கள் குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு பெரும்பாலான வேட்பாளர்கள் நல்ல நேரம் பார்த்து தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்வது வழக்கம்
முகூர்த்த நாள்
12ந் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 4 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்து இருந்தனர். சனி ஞாயிறு விடுமுறை என்பதால் அன்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியவில்லை. இதனால் 15ந் தேதி திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் அதிகரித்து காணப்பட்டது. முகூர்த்த நாள் என்பதால் அன்றைய தினம் அதிமுக மற்றும் திமுக உள்பட 31 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். நேற்று கிருத்திகை என்பதால் நேற்று முன்தினம் 17ந் தேதி 37 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
எ.வ.வேலு
பகுத்தறிவு பேசும் திமுகவில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எமகண்டம் கழித்து சுப ஓரையான புதன் ஓரையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதுமட்டுமன்றி ஒருபடி மேலே சென்று அண்ணாமலையார் கோயில் முன்பிருந்து தனது பிரச்சாரத்தை துவக்கினார்.
உற்சாக வரவேற்பு
அதிமுக கூட்டணியில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளராக பா.ஜ.க மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் எஸ்.தணிகைவேல் போட்டியிடுகிறார். வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு திருவண்ணாமலைக்கு வந்த அவருக்கு பல இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது திருவண்ணாமலை கீழ்நாத்தூரில் வானவேடிக்கை மேளதாளம் முழங்க ஆயிரக்கணக்கானோர் வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு முக்கிய பிரமுகர்கள்¸ நிர்வாகிகளின் வீட்டுக்கு சென்று அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
கோவிலுக்கு யானை
இதையடுத்து திருவண்ணாமலை அவலூர் பேட்டை ரோட்டில் நேற்று நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எஸ். தணிகைவேல் பங்கேற்றார் அவரை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அறிமுகப்படுத்தி பேசினார். இதில் பேசிய தணிகைவேல் அண்ணாமலையார் கோவிலுக்கு தனது சொந்த செலவில் யானை வாங்கி தரப்படும் என எனவும். 50¸000 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
ராகு காலம்
வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான இன்று அவர் பிரம்மாண்டமான ஊர்வலம் நடத்தி தனது வேட்பு மனுவை திருவண்ணாமலை கோட்டாட்சியரும்¸ சட்டமன்ற தொகுதி அலுவலருமான வெற்றிவேலிடம் தாக்கல் செய்தார். முற்பகல் 11.05க்கு அவர் தனது வேட்பு மனுவை அளித்தார் அந்த நேரம் ராகு காலம் ஆகும். பொதுவாக ராகு காலம்¸ எம கண்டங்களில் சுப நிகழ்ச்சிகளை யாரும் செய்ய மாட்டார்கள்.பகுத்தறிவு பேசும் திமுகவினரே நல்ல நேரம், சுப ஓரை பார்த்து வேட்பு மனு தாக்கல் செய்கையில் கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட பாஜகவில் அதன் வேட்பாளர் ராகு காலத்தை தேர்ந்தெடுத்து வேட்புமனு தாக்கல் செய்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்தான ஜோதிடர்
ராகுகாலம் மட்டுமன்றி செவ்வாய் ஓரையை தேர்ந்தெடுத்து அவர் மனு தாக்கல் செய்திருக்கிறார். பொதுவாக செவ்வாய் ஓரை நல்ல காரியங்களுக்கு உகந்தது அல்ல. சிதம்பரத்தைச் சேர்ந்த தனது ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனையின் பெயரிலேயே அவர் ராகுகாலம், செவ்வாய் ஓரையை தேர்ந்தெடுத்து மனுத்தாக்கல் செய்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
போர் குணம்
ராகு ,கேது என்பது மிகவும் சக்தி வாய்ந்த கிரகம் ஆகும். ராகு பகவான் எதிரிகளை அழிக்கும் சக்தியை கொண்டவர். இதன் அதிபதி துர்க்கை அம்மன். அதனால் தான் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை பழ விளக்கேற்றி அம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை சாத்தி வழிபடுவார்கள்.மேலும் செவ்வாய் என்பது போர் குணம் கொண்டதாகும். எனவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு அவர் ராகு காலம்¸ செவ்வாய் ஓரையில் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கலாம் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.