திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 43 பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தேர்தல் பிரச்சாரம்
தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 6ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை மறுநாளோடு மனு தாக்கல் முடிவடைகிறது. அதன்பிறகு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 20¸69¸091 வாக்காளர்கள் உள்ளனர். 49¸879 வாக்காளர்கள் முதன் முறையாக வரும் தேர்தலில் வாக்களிப்பவர்களாக உள்ளனர். இவர்களுக்காக மொத்தம் 3016 வாக்குச் சாவடி மைங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. புதிய வாக்குசாவடிகளுக்கு செல்ல சாலை வசதியும் ஏற்படுத்தி தரப்படுகிறது.
பதட்டமானவை
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 170 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே இப்பகுதிகளில் தேர்தல் நேரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். இந்நிலையில் தேர்தல் நேரத்தில் கலவரம் ஏற்படாமல் தடுத்திட பழைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
வடக்கு மண்டல ஐஜி சங்கர் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவண்ணாமலை ராஜாஜி தெருவைச் சேர்ந்த மணி(வயது 37)¸ பெருமாள் நகரைச் சேர்ந்த முருகன்(28)¸ போளுர் வட்டம் அரும்பலூரைச் சேர்ந்த போஸ்(21)¸ வந்தவாசி அடுத்த குத்தனூரைச் சேர்ந்த சிவமணி(45) ஆகியோரை ஏ.எஸ்.பி கிரண் சுருதி¸ டி.எஸ்.பிக்கள் அறிவழகன்¸ சுரேஷ் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி¸ சந்திரசேகரன்¸ திருநாவுக்கரசு¸ அண்ணாதுரை ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குன்னத்தூரைச் சேர்ந்த சம்பத்(67) என்ற பழைய குற்றவாளியை ஆரணி வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி தேர்தல் சமயம் உள்பட ஆறு மாத காலத்திற்கு குற்றச் சம்பவங்களில் ஈடுபட மாட்டேன் என பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ளது.
சிறையில் அடைப்பு
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இதுவரை ரவுடிசம் உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 43 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பழைய குற்றவாளிகள் 249 பேரும்¸ தேர்தல் நேரத்தில் கலவரம் உண்டாக்ககூடியவர்களாக கண்டறியப்பட்ட 51 நபர்கள் என மொத்தம் 300 பேரை வருவாய் கோட்டாச்சியர்களிடம் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் தேர்தல் சமயத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட மாட்டோம் என பிணைய பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது.