கோவில்பட்டியில் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள டிடிவி.தினகரன் இன்று திருவண்ணாமலைக்கு வந்தார். தேர்தலில் வெற்றி பெற அவர் கிரிவலம் சென்றார்.
தமிழக அரசியலில் அதிரடி காட்டி வருபவர் டிடிவி.தினகரன்.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை துவக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சசிகலா அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தாலும் சோர்வடையாமல் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு வேட்பாளர்கள் தேர்வு¸ தேர்தல் அறிக்கை என பிசியாக இருந்தார்.
தேர்தல் வாக்குறுதி
இந்த வேலைகள் முடிந்ததும் தேர்தல் பிரச்சார வேலைகளில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை¸ வீடு தேடி ரேஷன் பொருட்கள் என்ற அமமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் வரவேற்பை பெற்றுள்ளது.
கிரிவலம் சென்றார்
இந்த சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் தினகரன் நாளை 15ம் தேதி பகல் 1.30 மணியிலிருந்து 2 மணிக்குள் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். அமமுக இன்று 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் திருவண்ணாமலைக்கு நேற்றிரவு வந்த அவர் தனது நண்பரின் விடுதியான அர்ப்பனா ஓட்டலில் தங்கினார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அண்ணாமலையாரை வேண்டிக் கொண்டு அவர் காரிலேயே கிரிவலம் சென்றார்.
அர்ப்பனா ஓட்டலில் செய்தியாளர்கள் அவரை சந்தித்தனர். செய்தியாளர்களை பார்த்ததும் யாருக்கும் தெரியாமல் வந்தேன். எப்படி வந்தீர்கள் என அவர் ஆச்சரியத்துடன் கேட்டார். பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு அளித்த பதில்கள் வருமாறு:-
அமமுகவிற்கு வெற்றி
அமமுகவிற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. மற்ற கட்சிகள் தேர்தல் வாக்குறுதியில் ஏமாற்று திட்டங்களை அறிவித்துள்ளனர். நாங்கள் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருவோம் என சொல்லியுள்ளோம். இதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவு பெறும்¸ வளர்ச்சி அடையும். இப்படி பல நல்ல திட்டங்களை தெரிவித்துள்ளோம். இதனால் மக்கள் அமமுக கூட்டணிக்கு வாக்களித்து எங்களை வெற்றி பெறச் செய்வார்கள்.
தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் போதே கோவில்பட்டியில் அமைச்சரின் காரை சோதனையிட்ட அதிகாரி மாற்றப்பட்டுள்ளது அதிகார துஷ்பிரயோகத்தை காட்டுகிறது. என்னதான் செய்தாலும் அங்கு அமமுகவைத்தான் மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள்.
திமுகவினர் பல தேர்தல் அறிக்கைளை வெளிட்டு அதில் எத்தனை நிறைவேற்றியிருக்கின்றனர்? எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என தவியாய் தவிக்கின்றனர். அது அவர்களது தேர்தல் அறிக்கையிலேயே தெரிகிறது. அதிமுகவை கைப்பற்றுவோம் என நான் சொன்னதில்லை. அமமுகவை துவக்கியதன் நோக்கம் அதிமுகவை மீட்டெடுப்பதற்காகத்தான்.
அதிமுகவின் ஊழல்கள்
அதிமுக ஆட்சியின் ஊழல்கள் குறித்து மக்களுக்கு தெரியும். நிச்சயம் இந்த ஆட்சி முடிந்து விடும் நானும் அவர்கள் செய்த ஊழல்களை தொடர்ந்து எல்லா இடங்களிலும் மக்களுக்கு சொல்லி வருவேன். அதிமுகவின் ஊழல்களை ஒன்று¸ இரண்டு என வரிசைப்படுத்த முடியாது. கடுமையான கொரோனா கால கட்டத்தில் எத்தனை முறைகேடுகள் நடந்திருப்பது என்பது தெரியும். எல்லா துறைகளிலும் ஊழல். குறிப்பாக முதல்வர் பழனிச்சாமி வகிக்கிற நெடுஞ்சாலைத்துறையில் எத்தனையோ ஊழல்கள் நடந்திருக்கிறது. இதை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்வோம்.
சசிகலா
ஆட்சி இருக்கிற வரையிலும்தான் அதிமுக இருக்கும். பிறகு நெல்லிக்காய் மூட்டை போல் சிதறி விடும். அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எங்களோடு இணைவார்கள். அதிமுகவை மீட்டெடுப்போம். சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து எனது சித்தியாக இருந்தாலும் நான் கருத்து சொல்வது நன்றாக இருக்காது. அவர்தான்(சசிகலா)சொல்ல வேண்டும். அவர் அரசியலுக்கு மீண்டும் வரவேண்டும் என நான் வலியுறுத்துவேன்.
ஊழல்கள் குறித்து எடப்பாடியுடன் நேரடியாக விவாதிப்பதில் எந்த பலனும் இல்லை. மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். ஆளுங்கட்சி பண மூட்டையை நம்பி தேர்தலில் நிற்கிறது. இந்த பணமெல்லாம் எங்கிருந்து வந்திருக்கிறது என்பது மக்களுக்கும் தெரியும்.
மாற்று சக்தி
ஒரு கட்சி பணத்தை மட்டும் நம்பி தேர்தலில் நின்றால் என்ன ஏற்படும் என்பது இந்த தேர்தலில் தெரியும். அதே போல் 10 ஆண்டுகளாய் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிற திமுக ஆட்சிக்கு வந்தால் தழிழ்நாடு எப்படியெல்லாம் பாதிக்கப்படும் என்பது மக்களுக்கு தெரியும். அதனால் மாற்று சக்தியை தமிழக மக்கள் விரும்புகிறார்கள். அந்த மாற்று சக்தியாக நிச்சயம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி இருக்கும்.
இதுவரை ஆர்.கே நகருக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை¸ பொருத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்.கே.நகரில் மீண்டும் போட்டியிவீர்களா? என்ற கேள்விக்கு பொருத்திருந்து பாருங்கள் என தினகரன் சஸ்பென்ஸ் வைத்துள்ளார். இந்நிலையில் அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆர்.கே.நகர் தேமுதிகவிற்கு ஒதுக்கப்படுமா? அல்லது 2 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவித்துள்ள டிடிவி.தினகரன் மீண்டும் ஆர்.கே.நகரில் போட்டியிடுவாரா? என்பது தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியானதும் தெரிந்து விடும்.