Homeஆன்மீகம்திருவண்ணாமலை கோயிலில் லட்சதீபம் ஏற்ற தடை

திருவண்ணாமலை கோயிலில் லட்சதீபம் ஏற்ற தடை

திருவண்ணாமலை கோயிலில்  லட்சதீபம் ஏற்ற அனுமதியில்லை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கொரோனாவை காரணம் காட்டி மகா சிவராத்திரியன்று லட்சார்ச்சனையும்¸ லட்சதீபமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு 24.03.2020 முதல் முழு ஊரடங்கு பிறக்கப்பட்டு¸ தற்போது பல்வேறு தளர்வுகளுடன் 31.03.2021 வரை ஊரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும்¸ கேரளா¸ தெலுங்கானா¸ மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதை காரணம் காட்டி சென்ற மாத பவுர்ணமி கிரிவலம் வருவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தடை விதித்தார். தொடர்ந்து 11 மாதமாக கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தடையை மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தை மாத பவுர்ணமி அன்று கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பியதால் ஆத்திரம் அடைந்த பக்தர்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால் சென்ற மாத பவுர்ணமி அன்று பக்தர்களை போலீசார் தடை செய்யவில்லை. பாதுகாப்பு பணியையும் மேற்கொள்ளவில்லை. 

See also  தீச்சட்டி ஏந்தி கிரிவலம்-திடீர் சாமியார் அருள்வாக்கு

திருவண்ணாமலையில் திருவூடல் உற்சவத்திற்கும்¸ சாமி மாடவீதி வருவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் மகாசிவராத்திரி வருகிற 11ந் தேதி நடைபெறுகிறது. வழக்கமாக மகாசிவராத்திரி அன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் சன்னதியில் லட்சார்ச்சனை நடைபெறும். மாலையில் அனைத்து சன்னதிகளிலும் சிவபெருமான்¸ அர்த்தநாரீஸ்வரரர் போன்ற உருவங்களை வரைந்து அதன் மீது தீபம் ஏற்றுவர். லட்ச தீபங்களால் கோயிலே ஒளிருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். 

இந்த வருடம் லட்ச தீபம் ஏற்றலாம் என மகா சிவராத்திரியை பக்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர். ஆனால் 11ந் தேதி சிவராத்திரி அன்று லட்சார்ச்சனையும்¸ லட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டளைதாரர்களுக்கும்¸ உபயதாரர்களுக்கும் அனுமதி இல்லை என்றும்¸ மூலவருக்கு அபிஷேகமும்¸ நான்கு கால பூஜையும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்ணாமலையார் சன்னதிக்கு பின்புறம் உள்ள சிவனின் திருமேனிகளில் ஒன்றான லிங்கோத்பவருக்கு நடைபெறும் பூஜையில் திருமாலிடம்¸ சிவன் முடியை பிரம்மன் கண்டதாக பொய் சாட்சி சொன்னதற்காக சிவ பூஜைக்கு உதவாது போவாய் என சாபம் பெற்ற தாழம்பூ¸ லிங்கோத்பவர் தலையில் வைக்கப்படுவது சிறப்பாகும். இந்த நிகழ்ச்சி வழக்கம் போல் நடைபெறுகிறது. 

See also  திருவண்ணாமலை:கோயில்களில் தரிசனத்திற்கு தடை

ஏரிக்குப்பத்தில் சனி பெயர்ச்சி யாகத்திற்கும்¸ தனுர் மாத உற்சவத்தையொட்டி பர்வதமலை ஏறுவதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இப்போது மகா சிவராத்திரிக்கு லட்ச தீபத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!