ஆரணி அருகே 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொன்னொழில்நாதர் கோயிலில் 7 ஐம்பொன் சாமி சிலைகளை திருடிய கொள்ளையர்கள் தடயத்தை மறைக்க மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சிக்குபட்ட மதுரபூண்டி கிராமத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான பொன்னொழில் நாதர் கோயில் உள்ளது. இந்த கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக் கோயில் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு மூலவாக ஆதிபகவானும், ஜோலாமாலினியும் வீற்றிருக்கின்றனர்.
இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் தை மாதம் 20ந் தேதிக்கு பிறகு 3 நாட்களுக்கு சூரிய ஒளிவு விழும் நிகழ்வு நடைபெறும். மேலும் நவராத்திரி போன்ற விழாக்களும் விசேஷமாக நடக்கும்.
பொன்னொழில் நாதர் கோயிலில் அனந்தநாதர், பாசிர்தநாதர், தர்மேந்திரர், பத்மாவதி உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொன்றும் ஓன்றரை அடியிலிருந்து 9 அடி வரை உயரம் கொண்டதாகும்.
இந்நிலையில் நேற்று இரவு கோயிலின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் ஓன்றரை அடி உயரம் கொண்ட அனந்தநாதர், 9 அடி உடைய பாசிர்நாதர், 5 அடி உடைய தர்மேந்திரர் 6 அடி உடைய பத்மாவதி உள்ளிட்ட 7 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து கொண்டு சென்றனர்.
காலையில் கோயிலுக்கு வந்த நிர்வாகிகள் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆரணி தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சப்-இன்ஸ்பெக்டர் தேவிபிரியா தலைமையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். அப்போது கொள்ளையர்கள் தடயத்தை மறைக்க மிளகாய் பொடியை தூவி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.