விண்ணப்பங்களை பதிவு செய்ய வருபவர்களிடம் ரூ.1000 வழங்குவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என சொல்லும்படி பணியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்களை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
விண்ணப்பபதிவு முகாம்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட முகாம் அடுத்த மாதம் 4ந் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்த மாதம் 5ந் தேதி முதல் 16ந் தேதி வரை 2ம் கட்ட முகாமும் நடைபெறவுள்ளது. மேலும் விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடம் எந்தெந்த நாளில் பங்கேற்க வேண்டுமென்ற விவரம் அடங்கிய டோக்கன் மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை ஏற்கனவே வீடு வீடாக வழங்கப்பட்டுள்ளது.
அமராவதி முருகையன் பள்ளி
விண்ணப்ப பதிவு நடைபெறும் முகாம்களை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய்தார். அதன்படி திருவண்ணாமலை அமராவதி முருகையன் நகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த முகாமை அவர் பார்வையிட்டார்.
அப்போது மூதாட்டி ஒருவரிடம் எதற்காக விண்ணப்பம் அளிக்கிறீர்கள் என கேட்டதற்கு அவர் ஆயிரம் ரூபாய் வாங்குவதற்காக என்றார்.ஆயிரம் ரூபாய் தருவது யார் தெரியுமா என அமைச்சர் கேட்க அதற்கு அந்த மூதாட்டி நீங்க தான் கொடுக்குறீங்க என்றார்.
அதற்கு அமைச்சர் சிரித்துக்கொண்டே இந்த திட்டம் கலைஞர் பெயரில்;தான் கொடுக்கிறோம். இவர் யார் தெரியுமா என விண்ணப்பத்தில் இருந்த படத்தை மூதாட்டியிடம் காட்டி அமைச்சர் கேட்டார் அதற்கு அந்த மூதாட்டி மு.க.ஸ்டாலின் என்றார். அவர்தான் கொடுக்கிறார், இந்த பணம் ஆண்களுக்கு கிடையாது, எல்லாம் பெண்களுக்குத்தான் என்று அந்த மூதாட்டியிடம் அமைச்சர் வேலு கூறினார்.
ஸ்டாலின் பெயரை சொல்லுங்க…
அப்படியே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வாங்குவதை விட இந்த திட்டத்தை பற்றி பயனாளிகளிடம் எடுத்துச் சொல்லுங்கள், இந்த அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்தான் ஆயிரம் ரூபாய் தருகிறார்கள் என்று சொல்லுங்கள். முதலமைச்சர் தருகிறார் என்று சொல்வதில் தவறில்லை. எனவே விண்ணப்பம் பதிவு செய்யும் போது சொல்லுங்கள் என்று அங்கு பணியில் இருந்த தன்னார்வலர்களுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
திருவண்ணாமலை வட்டம் மெய்யூர் ஊராட்சி விநாயகபுரம், தண்டராம்பட்டு வட்டம் வாணாபுரம் ஊராட்சி மழுவம்பட்டு, சதாகுப்பம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற முகாம்களை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது துணை சபாநாயகர் கு.பிச்சாணடி மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் ரிஷப், கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், நகர மன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் பா.கார்த்திவேல்மாறன், நகரமன்ற துணை தலைவர் சு.ராஜாங்கம், 23வது வார்டு நகரமன்ற உறுப்பினர் திலகம்ராஜாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாணாபுரத்தில் முகாம் ஆய்வை முடித்துக் கொண்டு காரில் ஏற முயன்ற அமைச்சரை மழுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சூழ்ந்து கொண்டு தங்கள் கிராமத்தில் அசுத்தம் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக புகார் தெரிவித்தனர்.
அவர்களின் கோரிக்கைகளை பொறுமையாக கேட்ட அமைச்சர் வேலு, இது பற்றி கலெக்டரிடம் சொல்லி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் அம்மாபாளையம் பால் பவுடர் தொழிற்சாலையில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியமர்த்தும் நடவடிக்கையை கைவிடுமாறு மனு அளித்தனர்.
குடும்ப பாரத்தை தாங்குபவர்கள் மகளிர்கள் தான்
சதாகுப்பம் கிராமத்தில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்தி 89 ஆயிரத்து 822 ரேஷன் கார்டுகள் உள்ளது. 1627 ரேஷன் கடைகள் உள்ளன. முதல் கட்டமாக கலைஞர் உரிமை தொகை திட்டத்தை இம் மாவட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக 991முகாம்கள் அமைக்கப்பட்டு மனுக்களை பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவைகள் முறையாக நடைபெறுகிறதா? சான்றுகள் எல்லாம் பெறப்படுகிறதா? முறையாக பதிவு செய்யப்படுகிறதா? என்பதை எல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்.
இப்பணி நடைபெறு 201 பேர் மண்டல அலுவலராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். 70 பேர் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். 12 பேர் கோட்ட அலுவலர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். உண்மையான, தகுதியான பயனாளிகள் யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக இவ்வளவு ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கிறது.
1 கோடி பெண்களுக்கு உரிமை தொகை
ஒரு குடும்பத்தின் பாரத்தை தாங்குபவர்கள் மகளிர்கள் தான். அவர்கள் கையில் ஆயிரம் ரூபாய் சென்றால் தான் பொருளாதார வளரும். இதற்கு தகுதியானவர்கள் தமிழகத்தில் ஏறத்தாழ ஒரு கோடி பேர் இருப்பார்கள் என்பது ஒரு கணக்கு தான்.அது போக போக தான் தெரிய வரும். கூலி வேலை செய்கிற குடும்பம், ஆயிரம் ரூபாய் பணத்தை எதிர்பார்த்து குடும்பம் இருக்கிறது என்பது தான் இத்திட்டத்திற்கான தகுதி ஆகும்.
மாதத்துக்கு 1 கோடி அட்டைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு 1000 கோடி ரூபாய் தேவைப்படும். 7 மாதத்துக்கு ரூ.7000 கோடி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியை தாண்டி இரண்டு லட்சம் அதிகமாகிவிட்டது என்றாலும் கண்டிப்பாக முதலமைச்சர் அவர்களுக்கும் உரிமை தொகையை வழங்குவார்.
இவ்வாறு அவர் கூறினார்.