திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 30க்கும் மேற்பட்ட சிலை கொண்ட கோயில் அமைந்துள்ளது. இதில் ஆடையில்லாமல் இருக்கும் பெண்ணின் இடுப்பு பகுதியில் முனிவர் தவமிருப்பதாக வடிவமைக்கப்பட்ட சிலையின் வீடியோ வைரல் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மலையை பிரதட்சணம் வருவதென்பது அந்த மகேஸ்வரனையே சுற்றி வந்து வணங்குவதாகும். எண்ணற்ற ஞானியரும், யோகியரும், சித்தர்களும் உறையும் இடமாக விளங்குவதால் அவர்களின் தவ புண்ணிய தெய்வீக சக்திகள் பரவி கர்மவினை போக்குவதாகவும், மலையைச் சுற்றி உள்ள, அஷ்டதிக்குப் பாலர்களால் ஆராதிக்கப்பட்ட அஷ்ட லிங்கங்களை வழிபட்டால் அஷ்டமாசித்திகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கையால் வெளி நாடு மட்டுமன்றி வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையை நாடி வருகின்றனர்.
100க்கும் மேற்பட்ட கோயில்கள்
கிரிவலப்பாதையில் திருநேர் அண்ணாமலை, அடி அண்ணாமலை, துர்க்கை அம்மன் கோயில் என சில கோயில்கள், அண்ணாமலையார் கோயில் கட்டுப்பாட்டில் இருந்தாலும் 100க்கும் மேற்பட்ட தனியார் கோயில்களும் அமைந்துள்ளன.
இந்நிலையில் அம்மணமாக உள்ள பெண்ணின் இடுப்பு பகுதியில் முனிவர் உட்கார்ந்து தவமிருப்பதாக கூறியும், அந்த சிலையை வீடியோ எடுத்தும் ஒரு யூ டியூப் சேனல் இந்த கோயில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ளதாக கூறி அதை வெளியிட்டிருந்தது.
இதைப் பார்த்தவர்கள் கிரிவலப்பாதையில் நிர்வாண சிலை இருக்கக் கூடாது என தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.
இதையடுத்து இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் இரா.அருண்குமார், நகரத் தலைவர் நாக.செந்தில் மற்றும் நிர்வாகிகள் அந்த கோயிலை கண்டுபிடித்து பெண்ணின் இடுப்பு பகுதியில் முனிவர் உட்கார்ந்திருப்பது போன்ற சிலையை பார்வையிட்டனர். அது நிர்வாண சிலை அல்ல, இடுப்பு பகுதியில் துணி உள்ளது என விளக்கம் அளித்த கோயில் நிர்வாகிகள் பூமாதேவியின் மேல் மகரிஷி முனிவர் தவம் இருப்பதை சித்தரித்து அந்த சிலை வடிவமைக்கப்ட்டதாக விளக்கம் அளித்தனர்.
ஒரே கோயிலில் 30க்கும் மேற்பட்ட சிலைகள்
நித்யானந்தர் ஆசிரமம் எதிரே அத்தியந்தல் போகும் சாலையில்தான் இந்த தனியார் கோயில் அமைந்திருக்கிறது. கோயிலின் பெயர் சங்கு நாத பெருமாளாகும். ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாராயணன் வீற்றிருக்கிறார். தத்தாத்ரேயர் என்கிற பிரம்மா, விஷ்ணு, சிவன், விநாயகர், நித்ராதேவி, சூரியபகவான், திரவுபதியுடன் கூடிய பஞ்சபாண்டவர்கள், துவாரபாலகர்கள், அனந்த பத்ம சைண நாராயணன், சந்திரபகவான், நடராஜர், சக்கரத்தாழ்வார் என 30க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் உள்ளன.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஸ்ரீசாமி நாராயண கிரிஜி இக்கோயிலை அமைத்திருக்கிறார். இது குறித்து கோயில் நிர்வாகி ராஜா கூறுகையில் சனிக்கிழமைகளில் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது. மகேஸ்வர பூஜை நடத்தி அன்னதானமும், சிவனடியார்களுக்கு வஸ்திர தானமும் வழங்கி வருகிறோம். சங்கு நாதருக்கு முன் திருமணம் செய்து கொண்டால் முதலாவதாக பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக பிறக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்து பக்தர்கள் திருமணமும் செய்து கொள்கின்றனர். மேலும் இரவில் தூக்கம் வராதவர்கள் இங்குள்ள நித்ராதேவி சிலை முன்பு வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு அந்த தொல்லை விலகுகிறது. பூமாதேவி மீது மகரிஷி தவமிருக்கும் சிலையை பிரதிஷ்டை செய்து 20 ஆண்டுகள் ஆகிறது என்றார்.
தமிழாசிரியர் ராச.மனோகரன் இந்த சர்ச்சைக்குரிய சிலை குறித்து அளித்த விளக்கம்
இங்கே உள்ள சிலை பற்றி இத்தனை ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது எப்படி முளைத்தது என்பது தெரியவில்லை. மனக்கட்டுப்பாட்டுடன் முனிவர் மட்டும் அல்ல, மக்களும் வாழ வேண்டும் என்பதற்கான அடையாளம் சின்னம்தான் இது.
இவ்வாறு அவர் கூறினார்.
இருந்தாலும் பூமித்தாயை நிர்வாணமாக சித்தரித்தற்கு ஆன்மீகவாதிகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
Watch the video…
திருவண்ணாமலை செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திடுங்கள்
செய்தி, கட்டுரைகளை அனுப்ப…