மருத்துவமனை முற்றுகை |
திருவண்ணாமலையில் கூலி தொழிலாளி இறந்ததால் அவருக்கு தவறான ஆபரேஷன் செய்ததாக கூறி தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
திருவண்ணாமலை துர்க்கையம்மன் கோயில் தெருவில் ஸ்டார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பொது மருத்துவம் மட்டுமின்றி சர்க்கரை நோய்¸ எலும்பு முறிவு¸ நரம்பியல் கோளாறுகள்¸ இருதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. சென்னையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பத் |
இந்நிலையில் இந்த மருத்துவமனையில் திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சம்பத்(வயது 42) என்பவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதற்காக கடந்த 18ந் தேதி ஆபரேஷன் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன்பிறகு சம்பத்திற்கு நினைவு திரும்பவில்லை. 2 நாட்கள் ஆகியும் அவருக்கு சுயநினைவு திரும்பாததால் அத்தியந்தல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனிக்காமல் இன்று இறந்தார். இதையடுத்து ஸ்டார் மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையால் சம்பத் இறந்து விட்டதாக கூறி அந்த மருத்துவமனையை அவரது பெற்றோர்கள்¸ மனைவி¸ பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரூ.2 லட்சத்தை சுளையாக கட்டினோம். இந்த மாதிரி செய்து விட்டார்கள். 65 வயதில் மருமகள்¸ பேரக்குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது என இறந்த சம்பத்தின் தந்தை மருத்துவமனை வாசலில் கதறி அழுதார். அப்பலோ மருத்துவமனையை விட 2 மடங்கு வசதி உள்ளது. தைரியமாக பணம் கட்டுங்கள்¸ காப்பாற்றி விடலாம் என டாக்டர்கள் கூறியதை நம்பி கடன் வாங்கி பணத்தை கட்டியதாக உறவினர்கள் தெரிவித்தனர். தலையில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறி தலை மட்டுமன்றி இடுப்பிலும் ஆபரேஷன் செய்துள்ளனர். ஆபரேஷன் செய்த வீடியோவை தர மறுக்கின்றனர் எனவும் குற்றம் சாட்டினர்.
தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி அண்ணாதுரை தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். மருத்துவமனை டாக்டர் பாலாவை போலீஸ் ஜீப்பில் ஏற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பிறகு பேச்சு வார்த்தை நடத்தி உறவினர்களை கலைந்து போகச் செய்தனர். உரிய விசாரணை நடத்தி மருத்துவமனை மீது நடவடிக்கை எடுத்து தவறான சிகிச்சையால் ஏற்படும் மரணங்களை தடுத்திட வேண்டும் என சம்பத்தின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.