திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடை அருகே அழுகிய நிலையில் பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதில் துப்பு துலங்க வந்த மோப்ப நாய் சாராய டம்ளர்களை நீண்ட நேரம் மோப்பம் பிடித்தது.
திருவண்ணாமலை அடுத்த சொரகொளத்தூர் காப்புக்காட்டில்¸ கொண்டத்திலிருந்து சொரகொளத்தூர் செல்லும் வழியில் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள காப்பு காட்டில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியில் ஆடு மேய்க்க சென்ற சிலர் கலசபாக்கம் காவல்துறையினருக்கு இன்று தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்த போது அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடம்பில் துணியில்லாமல் நிர்வாண நிலையில் கிடந்த அந்த பெண்ணிற்கு சுமார் 30 வயதிருக்கும்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்¸ கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். வேலூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர்.
பிணமாக கிடந்த பெண் யார்¸ எந்த ஊரை சேர்ந்தவர்?¸ எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. நிர்வாண நிலையில் இருந்ததால் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
பெண் உடல் இருந்த இடத்திற்கு சிறிது தூரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் கடையை அகற்ற நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடைக்கு நேராக பெண் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் குடித்து விட்டு போதையில் யாராவது பெண்ணை கொலை செய்திருப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
காப்பு காட்டுக்குள் உட்கார்ந்து குடிக்கும் குடிமகன்கள் பாட்டில்களையும்¸ பிளாஸ்டிக் டம்ளர்களையும் அங்கேயே வீசி விட்டு சென்று விடுகின்றனர்.சம்பவ இடத்திற்கு திருவண்ணாமலையிலிருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் மியா மோப்பம் பிடித்து ஓடிய போது குடிமகன்கள் வீசி விட்டு சென்ற பிளாஸ்டிக் டம்ளர்களை கிளறி நீண்ட நேரம் மோப்பம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
காப்பு காட்டை மது அருந்தும் இடமாக மாற்றி விட்ட குடிமகன்கள் மீது வனத்துறை அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையையும் எடுப்பதில்லை. வனத்துறையினரின் ரோந்து இல்லாததால் இங்கு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.