Homeஆன்மீகம்முலைப்பால் தீர்த்தத்தை தூர்வாரிய சிவனடியார்கள்

முலைப்பால் தீர்த்தத்தை தூர்வாரிய சிவனடியார்கள்

திருவண்ணாமலை மலை மேல் நோய்களை தீர்த்து வைக்கும் குணம் உடைய முலைப்பால் தீர்த்தத்தை சிவனடியார்கள் சேர்ந்து ஒரே நாளில் தூர்வாரி சுத்தம் செய்தனர். தூர்வாரி முடித்தவுடன் மழை பெய்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

சிவலிங்க ஸ்வரூம்

சமய உலகில் புகழ் பெற்ற திருத்தலங்களில் சிறப்பு பெற்ற தலம் திருவண்ணாமலையாகும். கயிலை மலையில் இறைவன் இருப்பதால் சிறப்பு. ஆனால் இங்கு மலையே சிவலிங்கமாக காட்சியளிப்பது மாபெரும் சிறப்பாகும். சிவலிங்க ஸ்வரூபமான திருவண்ணாமலை மலையில் பழங்காலத்தில் யாராலும் ஏற்றப்படாமல் மலையின் உச்சியில் ஜோதி காட்சியளித்ததாக சொல்லப்படுகிறது.

பஞ்சமுக தரிசனம்

மலையின் அமைப்பு ஒவ்வொரு திக்கில் இருந்து பார்க்கும் போதும் ஒவ்வொரு மாதிரியாகக் காட்சியளிப்பது இதன் சிறப்பாகும். மலையின் கீழ்த்திசையில் இருந்து பார்க்கும்போது ஒன்றாகத் தெரியும். இது இறைவன் ‘ஏகன்’ என்பதை நமக்கு உணர்த்தும். சுற்றுப்பாதையில் இருந்து பார்க்கும்போது இரண்டாகத் தெரியும். இறைவன் அர்த்தநாரீஸ்வரர்’ என்பது இதன் பொருள். மலையின் பின்னே இருந்து பார்க்கிறவர்களுக்கு அதன் அமைப்பு மூன்றாகத் தெரியும். இது திரிமூர்த்திகளைக் குறிப்பதாகும். மலையைச் சுற்றி முடிக்கும் இடத்தில் ஐந்தாகத் தோன்றி பஞ்சமுக தரிசனம் அளிக்கும்.

See also  கார்த்திகை தீபத்திருவிழா பூர்வாங்க பணிகள் தொடக்கம்

மலையின் உடம்பெங்கும் மூலிகைச் செடிகளும்,குட்டை மரங்களும் நிரம்பி கிடக்கிறது. முலைப்பால் தீர்த்தம், பீம தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், பாத தீர்த்தம் போன்ற பல தீர்த்தங்களும் மலையில் உள்ளன. கந்தாஸ்ரமம், விருபாட்சி குகை, குகை நமச்சிவாயர், மாமரத்து கோயில், சடை சாமி கோயில் என புகழ் பெற்ற கோயில்கள் அமைந்திருக்கின்றன. இவை தவிர வண்ணாத்திக்குகை, பவழக்குன்று குகை, அருட்பால் குகை, மாமரத்துக் குகை என பல குகை கோயில்களும் உள்ளன.

புனித நீரை அருந்தி உயிர் வாழ்ந்த சித்தர்கள்

அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள மலையேறும் பாதையில் ஏறிச் சென்றால் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது முலைப்பால் தீர்த்தம். ரமணாசிரமம் பின்புறமும் ஏறி இங்கு செல்லலாம். அந்த காலத்தில் சித்தர்கள் இந்த தீர்த்தத்திலிருந்த தண்ணீரை அருந்தி உயிர் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
மழை நீர் பல மூலிகைகள் மேல் பட்டு இந்த தீர்த்தத்தை வந்து அடைகிறது. மேலும் தீர்த்தத்துக்குள் பல ஊற்றுகளும் உள்ளன. இதனால் இது புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. தூரத்திலிருந்து பார்க்கும் போது ஸ்கை புளு கலரில் தெரியும் தண்ணீர் பாட்டிலில் பிடித்து பார்த்தால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் போன்று வெள்ளை வெளேர் என காட்சியளிக்கிறது. அதே போல் தண்ணீரும் சுவை நிறைந்ததாக உள்ளது.

See also  திருவண்ணாமலையில் பிரபல நடிகர், நடிகை, 100 ஜப்பானியர்

தாய் பாலை போன்ற குணம் கொண்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவப்பட்ட வீடியோவால் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தண்ணீரை அருந்திச் சென்றும். தலை மீது தெளித்துக் கொண்டும் செல்கின்றனர்.

மக்களின் குடிநீர் பிரச்சனை தீரும்

இங்கிருந்துதான் சுற்றுப்புற கோயில்களுக்கும், அன்னதானம் தயாரிக்கவும், குடிநீர் பிரச்சனை ஏற்படும் போது மலையின் கீழ் பகுதியில் இருக்கும் வீடுகளுக்கும் பைப் மூலம் தண்ணீர் சென்று சேருகிறது. கோடை காலத்தில் தண்ணீர் குறைந்தாலும் வற்றாமல் முலைப்பால் தீர்த்தம் காட்சியளிக்கிறது.

நாளடைவில் இந்த தீர்த்த குளம் அசுத்தம் நிறைந்ததாக காணப்பட்டது. இதையடுத்து பல காலங்களாக இந்த புனித தீர்த்தத்தை பராமரித்து வரும் சடைசுவாமி ஞானதேசிகர் திருமடத்தை சேர்ந்த சிவனடியார்களும், பக்தர்களும் இணைந்து இரு தினங்களுக்கு முன்பு 30 அடி ஆழம் கொண்ட முலைப்பால் தீர்த்தத்தை தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர். ஒரே நாளில் அதிகாலையில் தொடங்கி இரவு வரை நாள் முழுவதும் அயராது செய்து முடித்தனர்.

இறைவன் அருளால் பெய்த மழை

பல நாட்கள் மழை இல்லாமல் வெப்பம் சுட்டெரித்த திருவண்ணாமலையில், தூர்வாரும் பணி முடிந்த சில நிமிடங்களிலேயே, இறைவன் அருளால் மழை பெய்தது. இதைப்பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர். மழை காலத்தில் தான் இந்த தீர்த்தம் முழுவதும் நிரம்பும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

See also  பருவதமலைக்கு வாகனத்தில் செல்லும் வகையில் பாதை

மேலும் இந்த குளத்தின் அருகில் உள்ள சடைசுவாமி ஞானதேசிகர் திருமடம், சத்குரு சாரிடபிள் டிரஸ்ட் என்ற பெயரில் இந்த புனித நீரை பயன்படுத்தி சமைத்து பல நூற்றுக்கணக்கான சாதுக்கள் மற்றும் ஏழை மக்களுக்கு அனுதினமும் அன்னதானம் செய்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது. மாலை நேரத்தில் தேநீரும் வழங்கப்படுகிறது.

இது மட்டுமன்றி சடைசுவாமி ஞானதேசிகர் திருமடம், நோயினால் இறக்கும் சாதுக்களை நல்லடக்கமும் செய்யும் பணியிலும், ரத்ததானம் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.


 திருவண்ணாமலை செய்திகள்

 Tiruvannamalai Agnimurasu

 https://youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!