Homeஅரசியல்ரூ.500 கோடி¸6 ஆயிரம் ஏக்கர் நிலமா? எ.வ.வேலு மறுப்பு

ரூ.500 கோடி¸6 ஆயிரம் ஏக்கர் நிலமா? எ.வ.வேலு மறுப்பு

ரூ.500 கோடி¸6 ஆயிரம் ஏக்கர் நிலமா? எ.வ.வேலு மறுப்பு
எ.வ.வேலு

நேர்மையானவன்¸ நிரபராதி என உச்சநீதிமன்றமே என் மீதான வழக்கை தள்ளுபடி செய்து விட்டது என கூறி கலித்தொகை பாட்டை மேற்கோள் காட்டி எ.வ.வேலு தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்தார். 

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன்¸ சாத்தனூரைச் சேர்ந்த பொன்னுசாமி என்ற திமுக நிர்வாகியுடன் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. 

உழைப்பெல்லாம் வீண்

செங்கத்தில் கட்சியை ஆரம்பித்து 45 வருடங்களுக்கு முன் ஊர்¸ஊராக சென்று கொடியேற்றினேன். மந்திரி(எ.வ.வேலு) என் பெயரை சொல்லி பேச அழைக்கிறார். எனக்கு கை தட்டல¸ ஜால்ரா பசங்க.அப்பன்(எ.வ.வேலு) பாதுகாப்பில் உள்ள எ.வ.வே.கம்பன் பெயரை சொன்ன உடனே எல்லோரும் கைதட்டாரானுங்க¸ குதிக்கிறானுங்க. அப்ப உழைச்ச உழைப்பெல்லாம் வீண்தானே. அவங்க அப்பாவுக்கு (எ.வ.வேலு) 8 காலேஜ் இருக்கு. தமிழ்நாட்டில் 6ஆயிரம் ஏக்கர் நிலம்¸ ஸ்பின்னிங் மில் உள்ளது. கிரானைட் மில் உள்ளது. மெடிக்கல் காலேஜ் உள்ளது. கரூரில் ரூ.500 கோடியை பைனான்ஸில் விட்டுள்ளார். சினிமாவுக்கு பைனான்ஸ் செய்கிறார். சினிமா தயாரிக்கிறார். டிவி தொடர் எடுக்கிறார். 6 தடவை எம்.எல்ஏ¸ ஒரு தடவை மந்திரியாக இருந்து விட்டார். 20 வருடமாக மாவட்ட செயலாளராக இருக்கிறார். அப்ப கலைஞர் வாழ்க என கொடி பிடித்து ரத்தம் சிந்தி¸ வேர்வை சிந்தி உழைத்த தொண்டன் அப்படியே செத்து போகணுமா? அப்பனும் வாழ்க்கையை அனுபவிக்கணும்¸ புள்ளையும் வாழ்க்கையை அனுபவிக்கணும். கலைஞராக இருந்தாலும்¸ கலைஞர் புள்ளையாக இருந்தாலும் அவர்களையும் சேர்த்துதான் சொல்கிறேன் என அவர் பேசியதில் 7 நிமிட உரையாடல் மட்டுமே வெளியாகியது. இன்னும் 20 நிமிட உரையாடல் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

See also  ராகு காலத்தில் பா.ஜ.க வேட்பாளர் மனு தாக்கல்

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்¸ திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு குறிப்பிட்ட செய்தியாளர்களை மட்டும் சந்தித்தார். பேட்டியின் போது அவர் கூறியதாவது¸

கருப்பு பூனையை

என் மீது இல்லாத குற்றச்சாட்டு வந்ததால் இதற்கு விளக்கம் அளிக்க கட்சிக்காரர்கள் கேட்டுக் கொண்டதால் செய்தியாளர்களை சந்திக்கிறேன். சுடரில் இருள் தோன்றிற்று¸ திங்களில் தீ தோன்றிற்று என கலித்தொகையில் கூறப்பட்டுள்ளது. சுடரில் இருள் இருக்க முடியாது¸ திங்களில் தீ தோன்ற முடியாது. திங்கள் என்றால் சூரியன். யாரோ சொல்வதால் என் பொது வாழ்க்கை கருப்பு அடைந்திடாது. என்னுடைய தூய்மையான தொண்டை தொடர்ந்து செய்வேன். 2 தினங்களாக கருப்பு பூனையை இருட்டில் தேடுகிற மாதிரி செய்திகள் வருகிறது. 

என் குடும்பத்தாருக்கு ஒரு பள்ளி¸ ஒரு பாலிடெக்னிக்¸ ஒரு மகளிர் கல்லூரி¸ ஒரு ஆடவர் கல்லூரி¸ ஒரு பொறியியல் கல்லூரி உள்ளது. 25 வருடத்திற்கு முன் திமுகவிற்கு வருவதற்கு முன்பே திரைப்படத்துறையில் சம்பாதித்தேன். இவைகளை என் குடும்பத்தார் அறக்கட்டளை மூலம் உருவாக்கிய நிறுவனம். சொத்தல்ல. மக்களுக்கு தொண்டாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்கள் சொத்தாக முடியாது.

See also  ஜெயலலிதா இருந்தால் நாக்கை அறுத்திருப்பார்-கோகுல இந்திரா ஆவேசம்

எனக்கு நூற்பாலைகள் இல்லை. தமிழ்நாட்டில் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இல்லை. ரூ.500 கோடி பைனான்ஸ்சில் இல்லை. ரூ.50 கோடி கூட பைனான்ஸ்சில் இல்லை. வருமான வரித்துறைக்கு என்ன கணக்கு காட்டினேனோ அதிலிருந்து ஒரு செண்ட் இடமோ¸ பணமோ என்னிடத்திலோ¸ எனது குடும்பத்தாரிடத்திலோ இல்லை. 

சுந்தரேசன்

சட்டமன்றத்தில் ஜெயலலிதா அம்மையாரிடம் நடந்த காரசார விவாதத்தின் விளைவாக என் மீது ரூ.11 லட்சம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக புனையப்பட்ட வழக்கு திருவண்ணாமலை கோர்ட்டிலும்¸ சென்னை ஐகோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டில் அரசு சார்பில் அப்பீல செய்யப்பட்டதில் வழக்கு விசாரணை வரும் போதே இது பொய் வழக்கு என தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. என்னை நேர்மையானவன்¸ நிரபராதி என உச்சநீதி மன்றமே விடுவித்து விட்டது. 

ஏழைகளுக்கு உதவி

பொதுமக்களும்¸ பல்வேறு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பொது மேடையில் என்னை குற்றம் சாட்டி பேசுவதில்லை. காரணம் நான் பொது வாழ்க்கையில் அப்பழுக்கற்றவன்¸ நேர்மையானவன். மக்கள் தொண்டு செய்ய வேண்டும் என தற்போதும் பணியாற்றி கொண்டிருக்கிறேன். அரசியலில் மட்டுமல்ல. கல்வி தொண்டு மூலம் ஏழைகளுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறேன். தமிழை வளர்க்க மதத்திற்கு அப்பாற்பட்டு அருணை தமிழ்சங்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறேன். தூய்மை அருணை¸ இளைஞர்களுக்கான கணினி மையம்¸ மகளிருக்கான தையற்பயிற்சி ஆகியவற்றை நடத்தி வருகிறேன். 

See also  திருவண்ணாமலை: மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி விவரம்

இவையெல்லாம் சட்டமன்ற உறுப்பினருக்கு சாத்தியமானதா என்றால் சாத்தியமானது அல்ல. சட்டமன்ற உறுப்பினர் என்பதையும் தாண்டி இந்த மண்ணுக்கு சொந்தக்காரன்¸ ஏழைகளின் குடும்ப பொருளாதாரம் உயர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தொண்டாற்றி வருகிறேன். 

திருமண நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்ளும்போது மாவட்டத்தில் ஒரு நல்ல மருத்துவமனை இல்லை என்று திருவண்ணாமலையில் உள்ள பெரும்பான்மையானோர் கூறுவார்கள். ஒரு அவசரம் என்றால் வேலூர் சி.எம்.சிக்கும்¸ பாண்டி ஜிப்மருக்கும்தான் செல்ல வேண்டும்¸ பணக்காரர்கள் என்றால் சென்னைக்கு சென்று விடுவார்கள். எவ்வளவோ செய்கிறீர்கள். உங்கள் காலத்தில் ஒரு நல்ல மருத்துவமனையை உருவாக்குங்கள் என பொது மக்கள் சொன்னதற்காக இந்தியன் வங்கியில் ரூ.130 கோடி கடன் பெற்று சிறப்பு மருத்துவமனையை கட்டிக் கொண்டிருக்கிறேன். 

இவ்வாறு எ.வ.வேலு பேட்டியில் கூறினார். 

பேட்டியின் போது அவர் தன்மீது குற்றம்சாட்டிய திமுக மாவட்ட துணைச் செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன் பற்றி எதையும் கூறவில்லை. மேலும் சாவல்பூண்டி சுந்தரேசன் கூறிய கிரானைட் தொழிற்சாலை தனக்கு இருக்கிறதா?¸ இல்லையா? என்பது குறித்தும்¸ வாரிசு அரசியல் குறித்தும் அவர் விளக்கம் அளிக்கவில்லை. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!