சாவல்பூண்டி சுந்தரேசன் |
பரபரப்பான சூழ்நிலையில் திருவண்ணாமலையில் இன்று கூடிய திமுக பொதுக்குழு கூட்டத்தில் சாவல்பூண்டி சுந்தரேசனை கட்சியை நீக்க தலைமைக்கு பரிந்துரை செய்வது என முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
3 ஆயிரம் ஏக்கர்
எ.வ.வேலுவுக்கு 6 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது¸ ரூ.500 கோடியை வட்டிக்கு விட்டுள்ளார் என சாவல்பூண்டி சுந்தரேசன் பேசிய ஆடியோ வெளியானதால் கடும் கோபத்தில் உள்ளார் எ.வ.வேலு.
சாவல்பூண்டி சுந்தரேசன்¸ ஆரம்பத்தில் கிராம நிர்வாக அலுவலரிடம் உதவியாளராக இருந்து திமுக கழகத்தில் இணைந்து உயர்ந்து இன்றைக்கு திருவண்ணாமலை ஒன்றிய செயலாளராக இருந்து தற்போது மாவட்ட துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். தலைமை கழக பேச்சாளர்¸ முரசொலி கவிஞரான சாவல்பூண்டி சுந்தரேசன் மனதில் பட்டததை வெளிப்படையாக பேசக் கூடியவர். சமீப காலமாக அவர் தன்னுடைய பேஸ்புக்கில் திமுகவில் தற்போது உள்ள நிலைப்பாடு குறித்து அடிக்கடி எழுதி வந்தார். அதில் இருந்து சில…
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன் பாவம் உழைப்பைத் தவிர அவன் பெரிதாக இந்த இயக்கத்தில் எதையும் கண்டதில்லை¸ பாவம் பெரிதாக அவன் எதையும் அனுபவித்ததில்லை¸ யாரோ ஒரு சிலருக்கத்தான் அந்த வாய்ப்பு¸ பல நேரங்களில் பாவம் உழைப்பவன் உழைப்பவனாகவே இருந்துவிட்டு வாழ்ந்துவிட்டு போய்விடுகிறான். அதிலே சாமர்த்திய காரர்கள் பலனை அடைந்து விடுகிறார்கள்.
உழைப்பும் தகுதியும் இல்லாமல்
ஊர்கூடி தேர் இழுப்பது என்று சொல்வார்கள் பலகைகள் தட்டினால்தான் சப்தம் வரும் என்று சொல்வார்கள் அப்படி கூடி தேர் இழுத்து ஒருவரை முக்கியமானவராக தேர்வு செய்தால் அவர்கள் தேர்வு செய்த முக்கியமானவர் தொண்டனை மறந்து போனால் அவர்களைப் பற்றி நாம் என்ன சொல்வது?
எந்த உழைப்பும் தகுதியும் இல்லாமல் தி.மு.கவில் நுழைந்த உடனே சாதி பணம் என்ற பின்புலத்தை மட்டும் நம்பி கழகத்தின் எந்த அடிப்படை கொள்கைக்கும் தகுதி இல்லாதவர்கள் சுயநலவாதிகள் சனா தானவாதிகள் சந்தர்ப்பவாதிகள் பிற்போக்குவாதிகள் இயக்கத்திற்குள் ஊடுருவி பதவி பெற்று விடுகிறார்கள். ஒரு இயக்கம் அவனுக்கு அந்த சின்னத்தை கொடுக்காமல் அவன் சுயேச்சையாக நின்றால் நோட்டாவுக்கு கிடைக்கிற ஓட்டு கூட கிடைக்காது.
இப்போதெல்லாம் கழகத்தின் அடிப்படை கொள்கைகைளை அறியாதவர்கள்¸ கழகத்தின் கடந்த கால வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்கள்¸ மாற்று கலாச்சாரத்தில் வளர்ந்து இயக்கத்தில் இணைந்தவர்கள் போன்ற சில தவறானவர்களின் வழிகாட்டுதலில் பொது கூட்டங்களுக்கு ஆட்கள் வருவதில்லை கூட்டம் சேர்வதில்லை பேச்சாளர்கள் பேசினால் கூட்டம் சேருவதில்லை கூட்டத்திற்கு செய்கிற செலவு வீண் என்று சொல்லி ஒரு தவறான செய்தியை கழகத்தின் மூத்த தலைவர்களிடமும் நாடு முழுவதும் பரப்பி விட்டிருக்கிறார்கள்
காலம் தண்டிக்கும்
தான் மட்டுமே பேச வேண்டும் தனக்கு மட்டுமே கைத்தட்டல் வரவேண்டும் தான் மட்டுமே முக்கியமானவராக இருக்கவேண்டும் என்று நினைக்கிற ஒரு சிலர் மொத்தத்தில் மக்களை பிடிக்காத சிலர் கூட்டங்கள் தேவையில்லை என்று கழகத்தை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.
இதையெல்லாம் தாங்கிக் கொண்டு தான் அரசியலில் இருக்க வேண்டியிருக்கிறது இருந்து கொண்டு இருக்கிறேன். தங்களுடைய நன்மைக்காக¸ தங்களுடைய வசதிக்காக¸ தங்களுடைய பெருமைக்காக¸ தங்களுடைய உயர்வுக்காக¸ தங்களுடைய சுய நலத்திற்காக¸ பிறருக்கு துன்பம் செய்பவரை¸ பிறரைக் கெடுப்பவரை¸ பிறரை அழிக்க நினைப்பவரை காலம் தண்டிக்கும்
கம்பன் |
இப்படி தனது ஆதங்கத்தை சாவல்பூண்டி சுந்தரேசன் கொட்டி தீர்த்திருந்தார். உச்ச கட்டமாக சாத்தனூரைச் சேர்ந்த பொன்னுசாமி என்ற திமுக நிர்வாகியுடன் அவர் பேசிய உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் திமுகவில் வாரிசு அரசியலைப் பற்றி பேசிய அவர் கட்சிக்கு வந்தவுடனே நாற்காலியில் உட்கார நினைக்கிறார் என எ.வ.வேலு மகன் கம்பனை தாக்கியுள்ளார். கலியுக கம்பனாம்¸ கலசப்பாக்கத்தை காப்பாற்ற வந்த கடவுளாம்¸ அவர் பேசியதால்தான் திமுகவிற்கு ஓட்டு வந்ததாம் என ஜால்ரா போடுகின்றனர். இந்த கட்சிக்கு உழைத்த ப.உ.ச¸ தர்மலிங்கம்¸ புலவர் கோவிந்தன்¸ பாபு ஜனார்த்தனம் வாரிசுகள் கட்சியில் ஆதிக்கம் செலுத்தவில்லை. ஏன் பிச்சாண்டி வாரிசு கூட ஆதிக்கம் செலுத்தவில்லை என்று பேசியிருக்கிறார்.
கொரோனா காலத்தில் கட்சிக்காக ரூ.68 லட்சம் செலவு செய்திருக்கிறேன். நெடுஞ்சாலைத்துறையில் ரூ.40 கோடிக்கு வேலை வந்தது. இதில் திமுகவிற்கு 40 சதவீதம் கிடைத்தது. இதில் எனக்கு ரூ.16 கோடிக்கு வேலை வர வேண்டும். ஆனால் ரூ.5 கோடிக்கான வேலைதான் கிடைத்தது. 2016லிருந்து 2020வரை ரூ.10 கோடிக்குத்தான் வேலை செய்திருக்கிறேன். அருணை வெங்கட்(திமுகவைச் சேர்ந்த ஒப்பந்தகாரார்) கட்சியில் என்ன பொறுப்பில் உள்ளார்?அவருக்கு ரூ.50 கோடிக்கு வேலை செல்கிறது. அவர் எம்.எல்.ஏவை மிரட்டுகிறார். 2 ஒன்றிய செயலாளர்களும் (செங்கம்-அண்ணாமலை¸ பிரபாகரன்) திருட்டு பசங்க¸ என்னையே ஏமாத்தராங்க என்று செங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கிரி¸ பேசிய ஆடியோவும் வெளியாகியது.
எ.வ.வேலு |
இந்த 2 ஆடியோக்களையும் அதிமுக¸ பா.ஜ.க ஐடி விங்க்¸சமூக வலைத்தலங்களில் வைரலாக்க எ.வ.வேலு டென்ஷனின் உச்சத்திற்கே சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று 3ந் தேதி அண்ணா நினைவு நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வந்த போது தன்னுடைய காரில் சாவல்பூண்டி சுந்தரேசன் உள்பட யாரையும் ஏற்றாமல் தனியாக சென்றார்.
அலுவலகம் வர தடை
இதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்திற்கு சாவல்பூண்டி சுந்தரேசன் சென்ற போது அங்கு இருந்தவர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இங்கு எந்த முகத்தோடு வருகிறாய் என அவரை கடும் சொற்களால் திட்டியதாலும்¸ ஒருவரைக்கொருவர் தள்ளி விட்டுக் கொண்டதாலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கட்சி அலுவலகத்திற்குள் நுழைய விடாததால் சாவல்பூண்டி சுந்தரேசன் அங்கிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் இன்று மாலை திருவண்ணாமலையில் திருக்கோயிலூர் ரோட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில்; சாவல்பூண்டி சுந்தரேசனை கட்சியை விட்டு நீக்க தலைமைக்கு பரிந்துரை செய்வது என்ற முடிவுவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கட்சிக்கு எதிராக யாரும் கருத்துக்களை பதிவிடக்கூடாது என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாம்.
நெருக்கடி
ஏற்கனவே திருவண்ணாமலை தொகுதியில் பல இடங்களில் திமுகவினர் பா.ஜ.கவிற்கு தாவி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நெருங்கும் வேலையில் மு.பெ.கிரி¸ சாவல்பூண்டி சுந்தரேசன் பேசிய ஆடியோ எ.வ.வேலுவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.