திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல போலீசார் தடை விதித்ததால் ஆத்திரம் அடைந்த பக்தர்கள் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து அவர்களை கிரிவலம் செல்ல போலீசார் அனுமதித்தனர்.
ஊரடங்கு தளர்வு
கொரோனா பரவுதலை காரணம் காட்டி கடந்த ஏப்ரல் மாதம் முதல் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை படிப்படியாக அரசு அறிவித்தது. இதையடுத்து மதுபானக் கடைகள்¸ சினிமா தியேட்டர்கள் இயங்க தொடங்கின. பஸ்களும் இயங்கின. கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோயில் கும்பாபிஷேம் மற்றும் திருவிழாக்களையும் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
அரசியல் கட்சியினர் நடத்தும் கூட்டங்களில் ஆயிரக்கணக்கில் ஆட்கள் திரண்டனர். ஆனால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தொடர்ந்து 10வது மாதமாக தடை விதிக்கப்பட்டது. இந்த தை மாதத்தில் தைப்பூசம் கொண்டாடப்படும் பூச நட்சத்திரம்¸ பவுர்ணமி திதியும் சேர்ந்து வருவதால் கிரிவலம் செல்ல அனுமதிக்க வேண்டும் என ஆன்மீக அமைப்புகள் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
பக்தர்கள் ஏமாற்றம்
தை மாத பவுர்ணமி அன்று கிரிவலம் சென்றால் ஆயுள் விருத்தி¸ உடல் நலம்¸ மன நலம் மேம்படும்¸ தடைகள் விலகும் என்பதால் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வழக்கம் போல் இந்த மாதமும் கிரிவலம் செல்ல தடை விதிப்பதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்ததால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
ஆனாலும் தை பவுர்ணமியான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வர திருவண்ணாமலைக்கு வந்தனர். பகலில் வெயில் என்பதாலும்¸ தைப்பூச வழிபாடு செய்ய வேண்டும் என்பதாலும் கூட்டம் வரவில்லை. மாலையில் பக்தர்களின் வருகை அதிகரித்தது.
ஒலிபெருக்கியில்
பக்தர்களின் கிரிவலத்தை தடுக்க கிரிவலப்பாதை முழுவதும் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். கூட்டம் அதிகரித்ததை பார்த்த போலீசார் அரசு கலைக்கல்லூரி அருகில் நின்று பக்தர்களை தடுத்து நிறுத்தினர். கொரோனா பரவுதலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருப்பதால் பக்தர்கள் திரும்பி செல்ல வேண்டும் என அவர்கள் ஒலிபெருக்கியில் அறிவித்தபடி இருந்தனர்.
நீண்ட தூரத்திலிருந்து வந்து விட்டோம். கிரிவலம் செல்ல அனுமதியுங்கள் என போலீசாரிடம் பக்தர்கள் கெஞ்சினர். ஆனால் போலீசார் அனுமதி தரவில்லை. ஆயிரக்கணக்கிலும்¸ லட்சக்கணக்கிலும் ஆட்களை திரட்டும் அரசியல் கட்சி கூட்டங்களை தடுக்காமல் எங்களை தடுக்கிறீர்களே? என சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு திடீரென திருவண்ணாமலை-செங்கம் செல்லும் சாலையில் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து தடைப்பட்டது.
போராட்டம் வெற்றி
அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு ஆண்கள்¸ பெண்கள்¸ சிவனடியார்கள் என ஆயிரக்கணக்கில் பக்தர்கள் போராட்த்தில் ஈடுபட்டனர். பக்தர்களின் ஆக்ரோஷத்தை பார்த்த போலீசார் சிறிது நேரத்திற்கு பிறகு கிரிவலம் செல்ல அனுமதித்தனர். போராட்டம் வெற்றி அடைந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கிரிவலம் சென்றனர்.