திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் புதிதாக நவீன வசதிகளுடன் கூடிய கழிவறைகள் கட்டுவதற்கான இடத்தினை அமைச்சர் நேரில் சென்று தேர்வு செய்தார். அதே போல் திருவண்ணாமலை நகரில் புதிய வழிப்பாதையை அமைக்கும் சாத்திய கூறுகளையும் ஆய்வு செய்தார்.
ஆன்மீக நகரான திருவண்ணாமலைக்கு அண்ணாமலையார் கோயிலுக்கு செல்லவும், கிரிவலம் செல்லவும் தினந்தோறும் வெளி மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், ஆயிரக்கணக்காண பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் பவுர்ணமி, சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீப விழா அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
பவுர்ணமி, தீபத்திருவிழாவை தவிர மற்ற நாட்களில் கிரிவலப்பாதையில் உள்ள கழிவறைகள் திறக்கப்படாததால் பக்தர்களும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதே போல் குடிதண்ணீரும் கிடைப்பதில்லை. கிரிவலப்பாதையில் உள்ள கழிவறைகள் அனைத்தும் இலவசம் என்பதால் விசேஷ நாட்களில் மட்டும் தான் பராமரிக்க முடிகிறது. தினந்தோறும் கழிவறையை திறந்து பராமரிக்க வேண்டும் என்றால் அதற்கான நிதி பஞ்சாயத்தில் இல்லை என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
5 இடங்களில் நவீன கழிவறை
இந்நிலையில் கிரிவலப்பாதையில் மேற்கு காவல் நிலையம் அருகிலும், அடிஅண்ணாமலை சீனிவாச பள்ளி அருகிலும், வாயுலிங்கம் அருகிலும், இலங்கை அகதிகள் முகாம் அருகிலும், சின்னகடை வீதியிலும் புதியதாக 5 இடங்களில் குளியறை, ஓய்வறையுடன் கூடிய நவீன வசதிகளுடன் கூடிய கழிவறை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடங்களை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று இரவு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அவருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி, மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு வாரிய உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், உதவி கோட்டப் பொறியாளர் ராஜ்குமார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் மோகனசுந்தரம், திருவண்ணாமலை நகர திமுக செயலாளர் கார்த்தி வேல்மாறன், நகராட்சி ஆணையர் தட்சனாமூர்த்தி ஆகியோர் சென்றிருந்தனர்.
புதிய வழி சாத்தியமா?
திருவண்ணாமலை நகரில் சின்னகடைத்தெருவில் ஒரு நவீன கழிவறை கட்டப்படுகிறது. இந்த இடத்தை பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு வட ஒத்தவாடை தெருவில் ஓடை கால்வாயை பார்வையிட்டார். ஓடை அடைப்பு ஏற்பட்டு ரோடுகளில் கழிவு நீர் ஒடுவதாக அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அமைச்சர் அந்த கால்வாயில் 2 இடங்களில் 3 அடி பள்ளம் எடுத்து உள்ளே இறங்கும் அளவிற்கு கைப்படி வைக்க வேண்டும். அடைப்பு ஏற்படும் நேரங்களில் இதில் இறங்கி அடைப்புகளை சரி செய்திட வேண்டும். பிறகு அதை பூட்டி விட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பிறகு முன்னாள் அமைச்சர் ப.உ.சண்முகம் வீடு பக்கத்தில் உள்ள பெரிய கால்வாயையும் பார்வையிட்டார். அப்போது அவரிடம் நகர பிரமுகர்கள், இந்த கால்வாயை தூர்வாரி யாரும் விழுந்து விடாதவாறு மேலே சிலாப் அமைக்க வேண்டும் எனவும், அதன் அருகிலேயே வழிப்பாதையை ஏற்படுத்தினால் இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியும் என்றும். அந்த வழி அண்ணாசிலை பின்புறம் வரை செல்லும் என்பதால் (சின்னகடைத் தெருவிலிருந்து அண்ணாசிலை பின்புறம் தெருவை நேரடியாக இணைப்பது) காந்தி சிலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்றும் தெரிவித்தனர். இது பற்றி பரிசீலிப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.