Homeசெய்திகள்விவசாயி கொலை-ரூ.20 லட்சம் கேட்ட 3 பேர் கைது

விவசாயி கொலை-ரூ.20 லட்சம் கேட்ட 3 பேர் கைது

விவசாயி கொலை-ரூ.20 லட்சம் கேட்ட 3 பேர் கைது

திருவண்ணாமலை கீழ்கரிப்பூர் விவசாயி கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கொலையும் செய்து விட்டு ரூ.20லட்சத்தை பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

விவசாயி

திருவண்ணாமலை அடுத்த கீழ் கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன்( வயது 48). விவசாயி. இவருடைய மனைவி ராஜகுமாரி. நூறு நாள் வேலை திட்டத்தில் பணி தள பொறுப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ராஜேஷ்கண்ணா¸ ராகுல் கண்ணா¸ என்ற மகன்களும்¸ சவுந்தர்யா என்ற மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் தனது நிலத்திற்கு சென்ற குபேந்திரன் வீடு திரும்பவில்லை. நிலத்திலேயே படுத்து தூங்கியிருப்பார் என அவரது குடும்பத்தினர் நினைத்து விட்டனர். நேற்று காலையிலும் வராததால் நிலத்திற்கு சென்று பார்த்தனர்.அங்கு குபேந்திரன் இல்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பிறகு உறவினர்¸ நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் குபேந்திரன் போன இடம் தெரியவில்லை. 

போலீசில் புகார்

இதையடுத்து தனது தந்தையை கண்டுபிடித்து தரக்கோரி குபேந்திரனின் மூத்த மகன் ராஜேஷ்கண்ணா வேட்டவலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.   சப்-இன்ஸ்பெக்டர் விசுவநாதன் வழக்கு பதிவு செய்தார். போலீசார் குபேந்திரனை தேடி வந்தனர்.

See also  திருவண்ணாமலையில் மருந்து கடையை மூடிய அதிகாரிகள்

இந்நிலையில் குபேந்திரனுக்கு மது பழக்கம் இருந்ததால் நிலத்தில் இருந்த தரை கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து வேட்டவலம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரசுராமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடினர். இரவு முழுவதும் தேடும் பணி நடந்தது. கிணற்றில் அதிகளவு தண்ணீர் இருந்ததால் தண்ணீருக்குள் கேமராவை வைத்து தேடினர்.அதில் எதுவும் தெரியாததால் கிணற்றுக்குள் தேடும் முயற்சியைக் கைவிட்டனர்.

விவசாயியை கொலை-ரூ.20 லட்சம் கேட்ட 3 பேர் கைது

ரூ 20 லட்சம்

இதற்கிடையே குபேந்திரனின் மூத்த மகனான ராஜேஷ்கண்ணா செல்போனுக்கு மாயமான குபேந்திரனின் போனில் இருந்து மர்ம நபர்கள் பேசினர். அதில் உனது தந்தையை நாங்கள் கடத்தி வைத்திருக்கிறோம். அவரை விடுவிக்க வேண்டுமானால் ரூ 20 லட்சம் தர வேண்டும். வெறையூரில் நாங்கள் சொல்லும் இடத்திற்கு வந்து கொடுக்க வேண்டும்¸ பணத்தை கொடுக்காமல் போலீசுக்கு தகவல் தெரிவித்தால் உனது தந்தையை கொன்று விடுவோம் என கூறிவிட்டு போனை துண்டித்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ்கண்ணா மீண்டும் வேட்டவலம் போலீசில் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் வேட்டவலம் பொறுப்பு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் மர்ம நபர்கள் கேட்ட பணத்துடன் ராஜேஷ் கண்ணாவை அழைத்துக்கொண்டு வெறையூர் சென்று கடத்தல்காரர்களுக்காக காத்திருந்தனர். ஆனால் கடத்தல்காரர்கள் வரவில்லை. இந்நிலையில் மர்மநபர்களிடம் இருந்து ராஜேஷ்கண்ணா விற்கு மீண்டும் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள் பணத்தை எடுத்துக்கொண்டு விழுப்புரம் வருமாறு கூறி விட்டு போனை துண்டித்தனர். 

See also  கோவில் கும்பாபிஷேக பணிகள் தடுத்து நிறுத்தம்

செல்போன் டவர் 

இதனால் கடத்தல்காரர்களை கையோடு பிடிக்க முயன்ற போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். போலீஸ் இருப்பதை தெரிந்து கொண்டு அவர்கள் போக்கு காட்டியதை புரிந்து கொண்ட போலீசார் செல்போன் டவர் மூலம் செல்போன் அழைப்பு வந்த இடம் குறித்து ரகசியமாக விசாரித்தனர். இதில் செல்போனில் பேசியது வெண்ணியந்தல் கிராமத்தைச் சேர்ந்த பாவாடை பூங்கா (28) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரும்¸ கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி( 40) அண்டம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (31) ஆகியோர் சேர்ந்து குபேந்திரனை கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது.

பணம் கொடுக்கல்¸ வாங்கல் தகராறில் இந்த கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. 20ந்தேதி இரவு குபேந்திரனுடன்¸ 3 பேரும் அவரது நிலத்தில் மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சேர்ந்து குபேந்திரன் கை கால்களை கட்டி அவருடைய விவசாய கிணற்றுக்குள் வீசி வீட்டு அவருடைய செல்போனை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர். மறுநாள் காலை வரை குபேந்திரனை அவரது குடும்பத்தினர் கண்டு பிடிக்க முடியாததை தெரிந்து கொண்ட பாவாடை பூங்கா பணம் பறிக்க திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இவர் ஏற்கனவே ஒரு வழக்கில் ஜெயிலுக்கு சென்று வந்தவர் என்பதும் தெரியவந்தது.

மீண்டும் தேடுதல் 

See also  சாத்தனூர் டேம் நீரை அனுமதியின்றி ஏரியில் நிரப்பிய மக்கள்

இதையடுத்து கிணற்றுக்குள் மீண்டும் குபேந்திரன் உடலை தேடும் பணி நடந்தது. ஒரு வழியாக இன்று காலை கிணற்றுக்குள் இருந்து குபேந்திரன் உடல் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

கிருஷ்ணமூர்த்தி¸ சீனிவாசன்¸ பாவாடை பூங்கா ஆகியோரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையையும் செய்து விட்டு பணத்தை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!