கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை ஒழிப்பது போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது திருவண்ணாமலை நகர போலீஸ் நிலையத்தில் 2 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில் இந்த மாநாட்டின் தலைப்பு என்னை கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும், சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்றவற்றை எதிர்க்க கூடாது, ஒழித்துக் கட்டணும். அப்படித்தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய காரியம் என்றார்.
இதற்கு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா, சனாதன தர்மத்தை எதிர்த்தால் போதாது, ஒழித்துக் கட்ட வேண்டும் என்று உதயநிதி பேசியிருக்கிறார். சுருக்கமாக சொல்வதென்றால் சனாதன தர்மத்தை பின்பற்றும் பாரதத்தின் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று அரைக்கூவல் விடுத்திருத்திருப்பதாக கூறியிருக்கிறார்.
இதற்கு பதில் அளித்துள்ள உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை பின்பற்றுவோர் இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று நான் பேசவில்லை நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் நான் உறுதியாக இருக்கிறேன் இதற்காக நீதிமன்றத்தில் எந்த சவால் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். வழக்கு தொடருங்கள், சட்ட ரீதியாக எந்த சவாலை சந்திக்க தயார் என கூறியிருந்தார்.
இதையடுத்து டில்லி போலீசில் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும். சமூக ஆர்வலருமான வினீத் ஜிண்டால் என்பவர் உதயநிதி புகார் அளித்திருக்கிறார். இதை தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் இந்து அமைப்பினர் அவர் மீது போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர்.
விசுவ ஹிந்து பரிஷத் புகார் மனு
திருவண்ணாமலை நகர போலீஸ் நிலையத்தில் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ஆர்.ஏழுமலை கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
உதயநிதி ஸ்டாலின் அவர் எழுதி வைத்து தயார் செய்த உரையில் உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க கூடாது. ஒழித்து கட்ட வேண்டும். அப்படிதான் இந்த சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் பணி, சனாதனம் பெயரே சமஸ்கிரதத்தில் இருந்து வந்தது. சனாதனம் சமுத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்று சனாதன தர்மத்திற்கு எதிராக உண்மைக்கு புறம்பான பேச்சை உள்நோக்கத்தோடு பேசியுள்ளார்.
உலகத்தில் பல்வேறு பிரிவினர் இன்று சனாதன தர்மத்தின் பல்வேறு கூறுகளை தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து வருகிறார்கள். பல்வேறு அறிஞர்கள் சனாதன தர்மத்தின் விஞ்ஞானப்பூர்வமான விழுமியங்களை (மனிதனுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள் ) வியந்து பாராட்டி வருகிறார்கள்.
சனாதான தர்மத்தில் சாதி பாகுபாடுகளை எங்கும் முன்னிறுத்தப்படவில்லை. உயர்ந்தவர்கள். தாழ்ந்தவர்கள் என்று எங்கும் சொல்லப்படவில்லை. சமூகத்தில் நேர்மையையும், தர்மத்தையும் நிலை நிறுத்தி காலத்தால் அழிக்க முடியாத வாழ்வியலாக உள்ளது.
நாங்கள் பிறப்பால் இந்து, சனாதன தர்மத்தை உயர்வாக நம்புகிறவர்கள். அதை கடைபிடித்து வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்துக்களின் மீது வெறுப்பை உமிழ்வதாகவே அமைந்துள்ளது. அவரது பேச்சு எங்களை மிகவும் பாதித்து மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
சமீபத்தில் கூட உச்ச நீதிமன்றமானது வெறுப்பு பேச்சை யார் பேசினாலும், அரசாங்கம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது. எனவே உதயநிதி ஸ்டாலின் மீதான இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்டு அவர் மீது தகுந்த பிரிவுகளின் படி வழக்கை உடனடியாக பதிவு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருக்கிறார்.
அவருடன் ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் எஸ்.மணிகண்டன், அம்மணி அம்மன் கோயில் நிர்வாகி ஏ.ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் சென்றிருந்தனர்.
வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் புகார் மனு
இதே போல் வழக்கறிஞரும், பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் டி.எஸ்.சங்கர், நகர போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
சென்னையில் 02-09-2023 சனிக்கிழமை அன்று நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் என்பதை எதிர்பதை விட ஒழிப்பதே நாம் செய்யவேண்டிய முதல் காரியம் ஆகும். பொய் செய்தி பரப்புவது கலவரத்தை தூண்டுவதுதான் சனாதனம். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும் எதிர்க்க முடியாது.
கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியோ, கொரோனா இதையெல்லாம் நாம் எதிரக்கக் கூடாது, ஒழித்து கட்ட வேண்டும். அப்படிதான் இந்த சனாதனமும் என பாரதத்தின் 100 கோடி சனாதனத்தர்மத்தை பின்பற்றும் இந்துக்களின் மனதை புண்படும்படியும், மத துவேஸத்தை தூண்டுபவராகவும் சட்டமன்றத்தில் எடுத்துக் கொண்ட சத்தியபிரமாணத்திற்கு எதிராகவும் பேசியுள்ளார். மதத்தினிடையே கலவரத்தை தூண்டியும் இந்து மத நம்பிக்கையை அவமதித்தும் இந்துக்களின் மத உணர்வுக்கு தீங்கிழைக்கும் உள்நோக்கத்துடனும் பேசியுள்ளார். அதை மீண்டும் நியாயப்படுத்தியுள்ளார்.
எனவே பிரிவு, 153ஏ மற்றும் பி. 295ஏ. 298, 505 இந்திய தண்டனைச்சட்டம், படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
அவருடன் நிர்வாகிகள் ஆர்.காண்டீபன், ஜி.விக்னேஷ், இ.சுரேஷ் மற்றும் சிதம்பர சோனாசல சுவாமி மற்றும் பலர் சென்றிருந்தனர்.