இறந்து போன திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் யானை ருக்குக்கு ரூ.49 லட்சத்தில் மணிமண்டபம் கட்டுவதற்கு விசுவ இந்து பரிஷத் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உயிரிழந்த யானை ருக்குவிற்கு அம்மணி அம்மன் கோபுரம் அருகில் 400 சதுரஅடி பரப்பளவில் ரூ.49 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் கட்டுப்படுகிறது.
இந்த பணியை கலெக்டர் பா.முருகேஷ் நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில் யானை ருக்குவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் மணிமண்டபம் கட்ட அரசு ரூ.49 லட்சத்தை ஒதுக்கீடு செய்திருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சனம், கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், அறங்காவலர் குழு உறுப்பினர் கோமதிகுணசேகரன் மற்றும் உறுப்பினர்கள், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் யானை ருக்கு கடந்த 2018-ம் ஆண்டு உயிரிழந்தது. இதே போன்று அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான 3 யானைகள் ஏற்கனவே உயிரை விட்டுள்ளது. இந்நிலையில் ருக்குவுக்கு மட்டும் மணிமண்டபம் கட்டுவது, அதுவும் ரூ.49 லட்சம் செலவிடுவது என்பது நியாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து விசுவ இந்து பரிஷத் நிர்வாகிகள் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் யானை ருக்கு இறந்து 4 ஆண்கள் ஆகிறது. அதற்கு மணி மண்டபம் 50 லட்சம் ரூபாய் செலவில் கட்ட இடம் ஒதுக்கி பூமி பூஜை கலெக்டர் முன்னிலையில் நடந்திருக்கிறது. இது தேவையற்ற ஒன்று. யானைக்கு மண்டபம் தேவையில்லை, வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு கார் பார்க்கிங் இல்லாமல் உள்ளது அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும்.
கோயிலுக்குள் போவதற்கு உள்ளூர் மக்களுக்கு பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. டூவீலரிலும் போக முடியவில்லை. அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் ஒரு பந்தாவுக்காக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இரட்டைப் பிள்ளையார் கோயில் தெரு பவுர்ணமி நாட்களில் மூடப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்துவோம்.
வெள்ளி, சனி, ஞாயிறு மட்டுமன்றி தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வருகின்றனர். அவர்களுக்கு பார்க்கிங் வசதி, குடிதண்ணீர் வசதி, இயற்கை உபாதைகளை கழிப்பதற்கான வசதிகள் எதையும் கோயில் நிர்வாகம் செய்து தரவில்லை. திருக்கோயில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகம் தவறாக செயல்படுகிறது.
கிரிவலப் பாதையில் கழிவறைகள் பவுர்ணமி நாட்களில் மட்டும் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் திறக்கப்படுவதில்லை. மிகவும் தொன்மை வாய்ந்த பலி பீடத்தை சரி செய்யாமல் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் ரூ. 49 லட்சத்தை செலவிட்டு யானைக்கு மணிமண்டபம் கட்டுவது என்பது தேவையற்றது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே போன்று ரூ. 49 லட்சம் செலவில் யானைக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். கோர்ட்டில் வழக்கு தொடரவும் சில அமைப்புகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.