இந்து மதத்தை இழித்து பழித்து பேசுகிறவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்¸ சூடு,சொரணை உள்ள இந்துக்களாக இருங்கள் என வீடு வீடாக சென்று இந்து முன்னணி பிரச்சாரம் செய்ய உள்ளது.
திருவண்ணாமலை உண்ணாமலை திருமண மண்டபத்தில் வேலூர் கோட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.அருண்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மணலிமனோகர்¸ கோட்ட தலைவர் கோ.மகேஷ் கோட்ட அமைப்பாளர் டி.வி.ராஜேஷ் கோட்ட செயலாளர்கள் வி.ரவி¸ என்.ரகுநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எஸ்.கௌதம் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் நா.முருகானந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது¸
சமீப காலமாக இந்து மதத்தை இழிவுபடுத்தி அரசியல் கட்சிகளில் சிலபேர் பேசி வருகின்றனர். முருகன் தமிழ் கடவுளா இல்லையா? விநாயகர் என்ன கடவுள்? விநாயகர் வடநாட்டு கடவுள் என்று இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசுகின்றனர். அரசியல் கட்சிக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இருக்கக்கூடாது. அரசியல் கட்சிகள் அரசியல் மட்டுமே செய்ய வேண்டும். மதத்திற்கு வரக்கூடாது. மத நம்பிக்கை இல்லாத கட்சிகள் மதத்தில் தலையிடுவது தவறு.
முருகரையும் விநாயகரையும் பற்றி பேசுகின்ற இவர்கள் அல்லா எந்த ஊர்? ஏசு எந்த கடவுள்? என பேச தயாராக இல்லை. தமிழ்நாட்டில் திட்டமிட்டு சதி செய்து இந்து மதத்தை சீரழிக்க வேண்டும். இந்து மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என வெளிநாட்டு தொடர்போடு ஈடுபட்டு வருகின்றனர். மதச்சார்பற்ற கட்சி இந்து மதத்தைப் பற்றி பேசுகின்ற போது கிறிஸ்துவம் மற்றும் முஸ்லீம் மதத்தைப் பற்றி பேசாதது ஏன்? முருகரைப் பற்றி விமர்சனம் செய்ய திருமாவளவனுக்கு எந்த தகுதியுமில்லை. பணத்துக்காகவும்,ஓட்டுக்காகவும் முஸ்லீம்¸ கிறிஸ்துவ மக்களை திருப்திபடுத்துவதற்காக அவர் பேசுகிறார். இந்து மதத்தில் உள்ளவர்களுக்கு இது புரியவில்லை. புரிய வைப்பதுதான் எங்களது வேலை.
வருகிற சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட கட்சிகளுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்ல மாட்டோம். இந்து முன்னணி என்பது கட்சி சார்பற்ற அமைப்பு. இந்து மதத்தை இழித்து பழித்து பேசுகிறவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள் எனவும் சூடு, சொரணை உள்ள இந்துக்களாக இருங்கள் எனவும் வீடுவீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்ய உள்ளோம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பிரசாதம் தரப்படுவதில்லை. எத்தனையோ கோவில்களில் பிரசாதம் கொடுத்து வருகின்றனர். ஆனால் கொரோனாவை காரணம் காட்டி அண்ணாமலையார் கோவிலில் பிரசாதம் தரமறுத்து பக்தர்கள் மனதை புண்படுத்துகின்றனர். பக்தர்கள் கொண்டுள்ள பக்திக்கு மதிப்பு தந்து பிரசாதம் தர அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் முறையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு தங்குமிடம் உணவு உள்பட எல்லா விதமான வசதிகளையும் செய்து தருகிறது. உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு நிறைய பணம் வருகிறது. பக்தர்கள் வசதிக்காக இதை ஏன் பயன்படுத்தவில்லை. இதேபோல் இக்கோவிலுக்கு உடனடியாக யானை வாங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை வடக்கு¸ தெற்கு மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் எஸ்.சிவா நன்றி கூறினார்.