Homeஅரசு அறிவிப்புகள்வேங்கிக்கால் கடைகளில் அதிரடி சோதனை

வேங்கிக்கால் கடைகளில் அதிரடி சோதனை

வேங்கிக்காலில் கடை¸கடையாக அதிகாரிகள் சோதனை 

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களிடம் ரூ.1 லட்சம் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டது. 

வளர்ந்து வரும் ஊராட்சி

திருவண்ணாமலை அருகே உள்ள வேங்கிக்கால் வேகமாக வளர்ந்து வரும் ஊராட்சியாக திகழ்ந்து வருகிறது. இங்கு 2011ல் 8ஆயிரத்தி 691 ஆக இருந்த மக்கள் தொகை இன்றைக்கு 25 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர்¸ மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் போன்ற முக்கிய அலுவலங்களும்¸ ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகமும் இந்த ஊராட்சியில் உள்ளது. 

இந்நிலையில் வேங்கிக்கால் ஊராட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகமாக உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில்¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா அறிவுரையின் பேரில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) டாக்டர் ஜி.அரவிந்த் தலைமையில்¸ திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் இரா.ஆனந்தன்¸ மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வி.சேதுராமன்¸ எம்.அப்துல் கப்பார்¸ அமுலு¸ வேங்கிக்கால் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி தமிழ்ச்செல்வன்¸ ஊராட்சி செயலாளர் ஜெ.உமாபதி மற்றும் தூய்மை காவலர்கள்¸ துப்புரவு பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

See also  அரசு குழந்தைகள் இல்லத்தில் வேலை வாய்ப்பு

ரூ.10ஆயிரம் வரை

அப்போது மளிகை கடை¸ காய்கறி கடை¸ உணவகங்கள்¸ பழக்கடைகளில் பயன்படுத்தப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சில கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள்¸ கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.. கடை உரிமையாளர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.1 லட்சம் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டது. 

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது¸ பயன்படுத்த கூடாது என்ற உத்தரவு உள்ளது. அதை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடைக்காரர்களை அதிகாரிகள் எச்சரித்தனர். 

வேங்கிக்காலில் கடை¸கடையாக அதிகாரிகள் சோதனை

வருத்தத்தில் வியாபாரிகள் 

பொங்கல் பண்டிகைக்கு சிறிது நாட்களே இருப்பதால் அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் வியாபாரிகளோடு சேர்ந்து பொது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கடந்த 2018ம் ஆண்டு அரசு ஆணை பிறப்பித்தது. ஆரம்பத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் பிறகு கவனிக்காமல் விட்டு விட்டனர். கடைகளுக்கு பைகளோடு வந்த மக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் தாராளமான நடமாட்டத்தால் துணிப்பை¸ பாத்திரங்கள் எடுத்து வருவதை மறந்து விட்டனர். மேலும் பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதிலாக ஆவின் பாலை கண்ணாடி அல்லது வேறு வழிகளில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் கருத்தும் காற்றோடு போய் விட்டது. 

See also  சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கான போட்டித் தேர்வு

இந்நிலையில் வேங்கிக்கால் பகுதியில் இன்று 20க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். இது பற்றிய நம்மிடம் பேசிய வியாபாரி ஒருவர் பொது மக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்றுதான் நினைக்கிறோம். ஆனால் நாங்கள் பயன்படுத்தாமல் விட்டால் மற்ற கடைகளில் பயன்படுத்துகிறார்கள். இதனால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்களை அரசு கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் பிளாஸ்டிக் அடியோடு ஒழிந்திருக்கும். கொரோனாவால் ஏற்கனவே வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் எங்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். முதலில் தவறு எங்கு உருவாகுகிறதோ அதை களை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். என்றார். 

வேங்கிக்கால் ஊராட்சியில் துப்புரவு பணிகளின் போது குப்பைகளில் அதிக அளவு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததே இந்த அதிரடி ரெய்டுக்கு காரணம் என்றும்¸ இனிமேல் வாரம் தோறும் இந்த சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!