விநாயகர் சிலை கரைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் கவுன்சிலரின் வீட்டுக்குள் சென்று பைக், சைக்கிளை அடித்து நொறுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது பற்றிய விவரம் வருமாறு,
விநாயகர் சதுர்த்தி விழா
திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் வட்டம் கருங்காலிகுப்பம் காலனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த சிலையை குன்னங்குப்பம் குளத்தில் கரைக்க போலீசார் அனுமதி அளித்திருந்த நிலையில் 22ந் தேதி இரவு ஆகி விட்டதால் கருங்காலிகுப்பம் ஏரியில் கரைப்பதற்காக சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
நள்ளிரவில் கரைக்கப்பட்ட சிலை
இதனால் இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். பிறகு நள்ளிரவு 12 மணியளவில் கருங்காலிகுப்பம் ஏரியில் சிலை கரைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு கருங்காலிகுப்பத்தைச் சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலர் அஞ்சலையின் கணவர் நாராயணன் (அதிமுக) என்பவரது வீட்டுக்குள் சிலர் நுழைந்து வீட்டை சேதப்படுத்தியும், அங்கிருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள், பாத்திரங்களை அடித்து நொறுக்கினார்களாம்.
இது குறித்து நாராயணன் கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் இன்று அதிகாலை கருங்காலிகுப்பம் காலனியைச் சேர்ந்த 5 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
3 மணி நேரம் சாலை மறியல்
இந்த தகவல் பரவியதும் அந்த காலனியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. காலை 8 மணிக்கு ஆரம்பித்த சாலை மறியல் 11 மணி வரை தொடர்ந்தது.
இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் வெளிமாவட்ட போலீசாரும் வரைவழைக்கப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் அழைத்து வந்த சூர்யா, சரவணன், லோகநாதன் ஆகியோரை கைது செய்த போலீசார் மற்ற 2 பேரை விடுவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு சொத்து(சேதம் மற்றும் தடுத்தல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
50 பேர் மீது வழக்கு
மேலும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்ற உத்தரவின்படி ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
கருங்காலிகுப்பத்தில் பாதுகாப்பு பணிக்காக 500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.