திருவண்ணாமலை மாவட்டத்தில் 2295 கருக்கலைப்புகள் நடந்திருப்பதால் செவிலியர்கள்¸ சமூகத் தலைவர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
குடும்ப நல அட்டை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தோக்கவாடி சந்தோஷ் மஹால் திருமண மண்டபத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக குடும்ப நல திட்ட அட்டை வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
குடும்ப நல துணை இயக்குநர் எ.அன்பரசி அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட சிறப்பு ஆலோசகர் எஸ்.ஷோபா திட்ட விளக்கவுரை ஆற்றினார்.
விழாவுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி குடும்ப நல திட்ட அட்டையினை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது¸
12 வது தரவரிசை
திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் கருத்தரிக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குடும்ப நல அட்டைகள் வழங்கப்படுகின்றது. திருவண்ணாமலை மாவட்டம் பெண்கள் கர்ப்பம் தரிக்கும் விகிதாசாரத்தில் 12 வது தரவரிசையில் உள்ளது.
ஆண்டிற்கு 33¸500 குழந்தைகள் பிறக்கின்றது. அதில் 5¸500 பிரசவங்களில் 3 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களாக இருக்கிறார்கள். திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 4041ம்¸ செய்யார் சுகாதார மாவட்டத்தில் 1459 பேர்களும் உள்ளனர். மாநில அளவில் 3 குழந்தைகள் மற்றும் அதற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்பவர்களின் சதவிகிதம் 7.2 ஆக உள்ளது. இதில் செய்யார் சுகாதார மாவட்டம் 8.2 சதவிகிதமாகவும். திருவண்ணாமலை சுகாதார மாவட்டம் 17.0 சதவிகிதமாகவும் ஆக திருவண்ணாமலை மாவட்டம் 13.2 சதவிகிதமாக உள்ளது.
2295 கருக்கலைப்புகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் .அரசு மருத்துவமனை¸ அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2295 கருக்கலைப்புகள் நவம்பர் 2020 வரை செய்யப்பட்டுள்ளது. இக்கருக்கலைப்பு குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் தகவல் தெரிவித்து கிராம சுகாதார செவிவியர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் சமூகத்தலைவர்கள் மூலமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் இணை இயக்குநர் ஜெகன்நாதன்¸ எஸ்.அமுதா¸ டி.செர்மிஸ்தா¸ எம்.கண்ணகி¸ துணை இயக்குநர்கள் கே.எம்.அஜிதா¸ எம்.சங்கீதா¸ மக்கள் கல்வி தொடர்பு அலுவலர் ஆர்.அமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.