Homeசெய்திகள்பழங்குடியின பள்ளிக்கு கவர்னர் ரூ.50 லட்சம் நிதி

பழங்குடியின பள்ளிக்கு கவர்னர் ரூ.50 லட்சம் நிதி

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை குனிகாந்தூரில் உள்ள பழங்குடியின பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட தமிழக கவர்னர் ரவி ரூ.50 லட்சம் நிதி உதவியை வழங்கியிருக்கிறார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த ஆகஸ்டு மாதம் திருவண்ணாமலைக்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஜவ்வாதுமலைக்கு சென்று குனிகாந்தூர் கிராமத்தில் எஸ்.எப்.ஆர்.டி.(சொசைட்டி பார் ரூரல் டெவலப்மெண்ட்) என்ற நிறுவனம் நடத்தி வரும் ஜவ்வாது மலைவாழ் மக்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று பள்ளி மாணவ-மாணவியர்களிடையே கலந்துரையாடினார்.

பழங்குடியின பள்ளிக்கு கவர்னர் ரூ.50 லட்சம் நிதி

அப்போது அந்த பள்ளி தொடர்ந்து 26 ஆண்டுகளாக அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருவதை பாராட்டி அப்பள்ளியின் தலைமை ஆசிரியை சிலம்பிக்கு சான்று வழங்கினார். அப்போது பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் தேவைப்படுவது குறித்து கவர்னரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் அந்த பள்ளிக்கு ரூ.50 லட்சத்தை நிதி உதவியாக கவர்னர் ஆர்.என்.ரவி அளித்திருக்கிறார். இதற்கு அந்த பள்ளியின் செயலாளர் கே.அர்ஜூனன் கவர்னருக்கு அனுப்பியுள்ள நன்றி கடிதத்தில் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஜவ்வாது மலைக்கு வந்த முதல் ஆளுநர் நீங்கள்தான். பழங்குடியினருக்கு சரியான நேரத்தில் உதவி செய்திருக்கிறீர்கள். இந்த உதவியை மறக்க முடியாது. இதன் மூலம் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

See also  மனு கொடுக்க 7ஆயிரம் பேர் குவிந்தனர்- கலெக்டர் திகைப்பு

மேலும் ‘நான் ஏழ்மையில் வாடுகிறேன் என்று சொல்லும் முன்பே,ஒருவருக்கு உதவி செய்யும் நல்ல குணம் உன்னத குடும்பத்தில் பிறந்தவனால் மட்டுமே முடியும்’ என்று மகாத்மா காந்தி உங்களுக்காக சொன்னது போல் உள்ளது. தாங்கள் தந்த நிதி முறையாக பயன்படுத்தப்படும் என உறுதி அளிக்கிறேன். எனவும் அந்த கடிதத்தில் செயலாளர் அர்ஜூனன் தெரிவித்துள்ளார்.

பழங்குடியின பள்ளிக்கு கவர்னர் ரூ.50 லட்சம் நிதி

இது குறித்து செயலாளர் அர்ஜூனன் கூறுகையில், எங்களது பள்ளியில் தற்போது 1717 மாணவ- மாணவியர்கள் படித்து வருகின்றனர். 80ஆம் ஆண்டில் பழங்குடி சமூகத்தினரிடையே வெறும் 0.2 சதவீதமாக ஆக இருந்த கல்வியறிவு அளவை தற்போது 39 சதவீதமாக உயர்த்தியிருக்கிறோம். இது எங்களது மிகப்பெரிய சாதனையாக உள்ளது. எங்களின் முயற்சிகள் மக்களிடையே கல்வியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் முன்னாள் மாணவர்கள் பலர் அறிவியல், கலை மற்றும் பொறியியல் துறைகளில் பட்டம் பெற்றுள்ளனர், அவர்களில் சிலர் எங்கள் பகுதியில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். கவர்னர் தனது சொந்த பணத்திலிருந்து நிதி அளித்திருக்கிறார்.அவருக்கு நன்றி கடிதம் அனுப்பியிருக்கிறோம். மேலும் அந்த பணத்திலிருந்து நான்கு தரமான வகுப்பறைகள் பிளஸ் 1 வகுப்புக்காக கட்டப்பட்டு அதற்கு கவர்னர் ஆர்.என்.ரவியின் பெயர் சூட்டப்படும் என்றார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!