பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டாமல் ஏமாற்றும் பயனாளிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்யும்படி கலெக்டர் முருகேஷ் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 45 கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் நடைபெறுகின்ற அனைத்து திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கலந்து கொண்டு அனைத்து திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். குறிப்பாக பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
ஒவ்வொரு ஊராட்சியிலிருந்தும் ஊராட்சி மன்றத் தலைவர்¸ ஊராட்சி செயலாளர்¸ மேற்பார்வையாளர் ஆகியோரிடம்¸ பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். அப்போது பெரும்பாலான ஊராட்சிகளில் 2016ம் ஆண்டிலிருந்து வீடுகள் கட்டப்படாமல் இருப்பது தெரிய வந்தது.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் பேசியதாவது¸
இனி வேடிக்கை பார்க்க முடியாது
பயனாளிகள் வேறாகவும்¸ வீடு கட்டுபவர்கள் வேறாகவும் உள்ளனர் இது தவறு. முதல் தவணை¸ இரண்டாவது தவணை என ரூ.52ஆயிரத்தை வாங்கிக் கொண்டு வீட்டை கட்டி முடிக்காமல் உள்ளனர். இனிமேல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. அவர்கள் மீது ஊராட்சி செயலாளர்கள் போலீசில் புகார் கொடுங்கள். நான் எஸ்.பியிடம் கூறி எப்ஐஆர் போட சொல்கிறேன்.
பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு 266 சதுர அடி வீடு கட்ட ரூ.2 லட்சத்து 72 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கான பயனாளிகளை தேர்வு செய்தது உங்கள் கிராமத்தில் ஒருவர்தான். 2016லிருந்து வீடு கட்டாமல் அரசு பணத்தை வீணாக்கலாமா? பலர் கடன் வாங்கி வீடு கட்டுகின்றனர். மழை பெய்தால் ஒழுகும் வீடுகளும் உள்ளன. உண்மையான பயனாளிகள் யாரும் வீடு வேண்டாம் என சொல்ல மாட்டார்கள். எனவே இத்திட்டத்தில் தப்பான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தமிழகத்திலேயே கடைசி இடத்தில் உள்ளது. இதற்கு காரணம் நாம்தான். அப்போதிருந்த அதிகாரிகள் இன்னும் ஓய்வு பெறவில்லை. எங்கிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் வீட்டு வசதி வாரியத்தில் எம்.டியாக இருந்தவன். ரூ.500 கோடிக்கெல்லாம் டெண்டர் விட்டிருக்கிறோம். அடுக்குமாடி வீடுகள்¸ 1500 வீடுகள் என கட்டியிருக்கிறோம். வீடுகளை எத்தனை மாதத்தில் கட்டி முடிக்க வேண்டும் என எனக்கு தெரியும். 266 சதுர அடி வீட்டை 45 நாட்களில் கட்டலாம். அல்லது 3 மாதத்தில் கட்டி முடிக்கலாம். 2016லிருந்து ஒவ்வொரு செங்கலாக கட்டியிருந்தாலும் 3 வருடத்திலாவது கட்டியிருக்கலாம். அஸ்திவாரம் போடாமலேயே போட்டதாக கூறி பணத்தை எடுத்திருக்கின்றனர். எனவே குறிப்பிட்ட நாட்களுக்குள் வீடுகளை கட்டி முடிக்காவிட்டால் பணி மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்படுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நீலந்தாங்கல் ஊராட்சியில் வீடு கட்டும் திட்டத்தை ஆய்வு செய்த போது ஊராட்சி மன்றத் தலைவர் தான் படிப்பு அறிவு இல்லாதவன் என கூறினார். இதனால் கோபமடைந்த கலெக்டர் இங்கு படித்தவர்கள் யாரும் இல்லை. நானே படிக்காதவன்தான். திட்டங்களை நிறைவேற்ற மனதிருந்தால் போதும்¸ ஊராட்சி தலைவர்கள் ரோடு போடுவதிலும்¸ கால்வாய் கட்டுவதிலும்¸ தெரு விளக்குகளை அமைப்பதிலும் மட்டும் கவனம் செலுத்தினால் மட்டும் போதாது¸ வளர்ச்சி பணிகளிலும் கவனம் செலுத்துங்கள் என கூறினார்.
ஜூலை 10க்குள் கட்ட வேண்டும்
பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டம் மற்றும் முதலமைச்சர் பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சிகளில் 2016-2022ம் ஆண்டு வரை மொத்தம் 2529 வீடுகள் கட்ட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 1032 வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது இந்த வீடுகளை ஜூலை 10ந் தேதிக்குள் விரைந்து கட்டி முடித்திட வேண்டும் என கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆய்வு கூட்டம் பகல் 12 மணிக்கு தொடங்கி 3-45 மணிக்கு முடிவடைந்தது. கூட்டத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சரண்யாதேவி¸ உதவி செயற்பொறியாளர் பூங்கொடி¸ உதவி திட்ட அலுவலர்கள் இயமவர்மன்¸ உமாலட்சுமி¸ நாகேஷ்¸ ஆணையாளர் ஆ.சம்பத்¸ வட்டார வளர்ச்சி அலுவலர் பா.காந்திமதி¸ ஒன்றிய உதவி செயற்பொறியாளர்கள் பிரசன்னா¸ ரவிசந்திரன்¸ சிவக்குமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்¸ மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்¸ பணி மேற்பார்வையாளர்கள்¸ 45 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள்¸ ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபாஷினி நன்றி கூறினார்.