கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக ஏரிக்குப்பம் சனீஸ்வரபகவான் கோயிலில் சனிபெயர்ச்சி அன்று அபிஷேம் மட்டுமே நடைபெறும் என்றும்¸ மற்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
சனிபெயர்ச்சி திருவிழாவிற்கு பக்தர்கள்¸ பொதுமக்கள் வர வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நவக்கிரகங்களில் நீதி தேவன் என அழைக்கப்படும் முக்கிய கிரகமான சனீஸ்வர பகவான் வருகிற 27ந் தேதி அதிகாலை 5-22க்கு மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகுகிறார். இதையொட்டி சனீஸ்வர கோயில்களிலும்¸ மற்ற கோயில்களில் நவகிரகங்களில் இடம் பெற்றிருக்கும் சனீஸ்வர பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளுர் வட்டம் ஏரிக்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் மூலவரான சனீஸ்வரர் உருவம் இன்றி யந்திர வடிவில் அருள்பாலித்து வருகிறார். பரிகார தலமாக விளங்கி வரும் இக்கோயிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் சனிக்கிழமைகளில் வருகை புரிந்து குளத்தில் நீராடி¸ பரிஹார ஹோமங்களும்¸ அபிஷேகங்களை செய்தும்¸ சனிக்கிழமைகளில் சனிதோஷ பரிகார பூஜைகள் செய்தும்¸ சனீஸ்வரபகவானை தரிசித்து தோஷங்களை கழித்து செல்கின்றனர்.
இதே போல் சனி பெயர்ச்சி தினத்தன்று பல்வேறு பகுதிகளிலிருந்து பரிகாரங்கள் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிந்து¸ எள் அகல்விளக்கு ஏற்றி வழிபடுவார்கள்.
இந்த வருடம் சனி பெயர்ச்சிக்கு கொரோனா நோய் தொற்று காரணமாக இக்கோயிலுக்கு பக்தர்கள் வர தடைவிதிக்கப்படுவதாகவும்¸ அபிஷேகத்தை தவிர மற்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை
தமிழ்நாட்டில் கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக கடந்த 24.03.2020 முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு¸ தற்போது தளர்வுகளுடன் 31.12.2020 வரை ஊரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும்¸ நோய் பரவல் முற்றிலும் குறையும் வரை பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 27.12.2020 அன்று ஏரிக்குப்பம் சனீஸ்வரபகவான் திருக்கோயிலில் சனிப்பெயர்ச்சி திருவிழா சிறப்பு அபிஷேகம் மட்டும் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும்¸ திருவிழாவின் போது ஆண்டுதோறும் நடைபெற்று வந்த அன்னதானம்¸ பரிகார ஹோமங்கள்¸ எள் தீபம் ஏற்றுதல்¸ குளத்தில் நீராடுதல் மற்றும் இதர நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெறாது எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
சனிப்பெயர்ச்சி திருவிழாவிற்கு திருவண்ணாமலை உட்பட அனைத்து மாவட்டங்களிலிருந்தும்¸ பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நோய் தொற்று பரவாமல் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு ஏரிக்குப்பம் சனீஸ்வரபகவான் திருக்கோயிலில் நடைபெறும் சனிப்பெயர்ச்சி திருவிழாவிற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா நோய் தொற்று பரவாமல் பொதுமக்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பக்தர்கள் கடும் கோபம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக கோயில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்படுவதால் மாவட்ட நிர்வாகத்தின் மீது பக்தர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
தற்போது நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி¸ திறந்தவெளியின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய¸ அரசியல்¸ விளையாட்டு¸ கல்வி¸ கலாச்சார¸ பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 19.12.2020 முதல் நடத்த அனுமதிக்கப்படுகிறது என தமிழக முதல்வர் அறிவித்தும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று மாணிக்கவாசகர் வீதி உலா நடத்த அனுமதிக்காதற்கும்¸ ஏரிக்குப்பம் சனீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் பங்கேற்க தடை விதித்தற்கும் ஆன்மீக அமைப்புகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன.