வேங்கிக்கால் ஏரி உபரி நீர் செல்வதில் சிக்கல்
ஓடை ஆக்கிரமிப்பால் வேங்கிக்கால் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிளை சூழ்ந்துள்ளது.
106 ஏக்கர் பரப்பளவு
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஏரி 106 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் இந்த ஏரி 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது. ஒரு பக்கம் ஏரி நிரம்பியுள்ளதற்கு மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும்¸ இன்னொரு பக்கம் வேதனை அடைந்திருக்கின்றனர்.
காரணம் நிரம்பி வழியும் உபரிநீர் செல்ல வழியின்றி தெருக்களில் ஓடி வீணாகி கொண்டிருக்கிறது. ஏரியிலிருந்து ஓரளவு மட்டுமே வழிந்தோடும் இந்த நீர் குடியிருப்பு பகுதிகளில் குட்டை போல் தேங்கியுள்ளது. குறிப்பாக குறிஞ்சி நகரில் வீட்டு மனைகளை மூழ்கடித்துள்ளது. அதிகமாக நீர் வெளியேறினால் இப்பகுதியும்¸ சுற்றுப்பகுதியும் வெள்ளக்காடாகும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஓடை ஆக்கிரமிப்பு
வேங்கிக்கால் ஏரியிலிருந்து வெளியேறும் நீர் ஓடையின் வழியே அய்யப்பன் நகர் ஏரியைச் சென்றடையும். இந்த ஓடை தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சிலர் ஓடையை வீட்டு மனைகளாக்கி விற்று உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது உபரி நீர் வீட்டு மனைகளின் மீது ஓடி அய்யப்பன் நகர் ஏரிக்கு முன்பாக இருக்கும் ஒடையை சென்றடைந்து விடும் என கூறி சமாளித்தனர்.
மணல் விற்பனை
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரிகளை தூர் வார மாவட்ட நிர்வாகம் மூலம் அனுமதி அளிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி சிலர் அரசு நிர்ணயித்துள்ள நாட்களை கடந்து¸ குறிப்பிட்ட லோடுக்கு பதிலாக பல மடங்கு லோடு வரை மணலை அள்ளி விற்று காசாக்கியுள்ளனர். இதே போல் வேங்கிக்கால் ஏரியிலும் நடைபெற்றது. அதிக ஆழத்துக்கு மணல் அள்ளப்பட்டதால் இந்த ஏரி அலங்கோலாமாக காட்சியளித்தது. 12 வருடங்களாகியும் நிரம்பாத ஏரிகள் எல்லாம் இந்த மழையில் நிரம்பி உபரி நீர் வெளியேறி வரும் நிலையில் வேங்கிக்கால் ஏரி இப்போதுதான் நிரம்பியுள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
வேங்கிக்காலில் 2011ல் 8ஆயிரத்தி 691 ஆக இருந்த மக்கள் தொகை இன்றைக்கு 25 ஆயிரத்தை கடந்துள்ளது. நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி விட்டது. இதனால் வேங்கிக்கால் ஏரி நிரம்பியதால் குறைவான ஏக்கர் நிலங்களே பாசன வசதி பெறும். அதே சமயம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சனை இருக்காது என கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.நிரம்பியுள்ள நீர் வீணாகாமல் மறு ஏரிக்கு செல்லும் வகையில் வழிவகைகளை ஏற்படுத்திட வேண்டும் எனவும்¸ ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றிட முன்வர வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிடா வெட்டி சிறப்பு பூஜை
இந்நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதை கொண்டாடும் வகையில் கிராம மக்கள் ஒன்று திரண்டு ஆட்டுக்கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்து பூக்கள் தூவி இனிப்பு வழங்கினர்.
இதில் வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவி சாந்தி தமிழ்ச்செல்வன்¸ முன்னாள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.கே.குமாரசாமி¸ ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.முருகன்¸ ஊராட்சிமன்ற துணைத் தலைவர் பாலா மூர்த்தி¸ ஊராட்சி செயலாளர் ஜெ.உமாபதி¸ மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.