நடராஜர் முகத்தில் துளையிட்டு பேன் பொருத்திய சம்பவம்
சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்- அண்ணாமலையார் கோயிலில் கற்தூண்கள் துளையிடப்பட்டிருக்கும் படங்களும் வெளியாகியதால் பக்தர்கள் அதிர்ச்சி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் உள்ள நடராஜரின் ஒவியத்தில் துளையிட்டு மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவும், கற்தூண்கள் துளையிடப்பட்டிருக்கும் படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், தென்னிந்திய கட்டிடக் கலை மற்றும் சிற்ப அம்சங்களுக்கு சிறந்த உதாரணமாக விளங்கி வருகிறது. இங்குள்ள சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய அழகிய தூண்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் உள்ளன.
இது மட்டுமன்றி கோயிலின் மகிழ மரத்தின் பின்புறம் பரந்து விரிந்துள்ள கல்யாண மண்டபத்தில் பழங்கால ஓவியங்கள் காணப்படுகின்றன. உருளை வடிவத் தூண்கள், சதுரத் தூண்கள் என அனைத்து விதமான தூண்களுடன் ஒவியக் கூடம் போல் இந்த கல்யாண மண்படம் அமைந்துள்ளது.
அப்படிப்பட்ட கல்யாண மண்டபத்தின் மேற்கூரையில் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள நடராஜர் ஒவியம்; அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. இந்த நடராஜரின் முகத்தில் துளையிட்டு அதில் மின் விசிறி மாட்டி கோயில் நிர்வாகம் பயன்படுத்தி வந்துள்ளது. இதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் வரிசையில் செல்வதற்கு தடுப்புகளை அமைக்க கோயிலின் கற்தூண்களிலும், தரையிலும் துளைகள் இடப்பட்ட படங்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரவி பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஏற்கனவே கோயில் தூண்களை துளையிட்டு பைப்புகளை பதித்தது, சிலையில் துளையிட்டு சிசிடிவி கேமரா பொருத்தியது, கோபுர சிற்பம் விழுந்து உடைந்தது, வாகனங்கள் உள்ளே சென்றதால் கோபுர சிற்பங்கள் சேதமடைந்தது தற்போது நடராஜரின் ஒவியத்தை சேதப்படுத்தியது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவது பக்தர்களை அதிருப்தி அடையச் செய்திருக்கிறது. கோயில் சிற்பங்கள், ஓவியங்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் நடராஜரின் ஒவியத்தை சேதப்படுத்தி மின்விசிறி அமைக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அந்த மின்விசிறியை அகற்றியுள்ளது.