Homeஅரசியல்6 வார்டுகள் புறக்கணிப்பா? அமைச்சர் விளக்கம்

6 வார்டுகள் புறக்கணிப்பா? அமைச்சர் விளக்கம்

6 வார்டுகள் புறக்கணிப்பா? அமைச்சர் விளக்கம்
மக்கள் பிரச்சனையை தீர்க்க எதிர்கட்சி கவுன்சிலர்கள் வந்திருந்தால் பாராட்டியிருப்பேன் என பேச்சு

திருவண்ணாமலையில் அதிமுகவினர் கவுன்சிலர்களாக உள்ள 6 வார்டுகளை புறக்கணிக்கும் எண்ணம் இல்லை என அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார்.

திருவண்ணாமலை நகராட்சி சன்னதி தெரு செவ்வா மடத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (18.12.2023) ‘மக்களுடன் முதல்வர்’ முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கி.கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், செய்யார் சப்-கலெக்டர் பல்லவி, நகரமன்றத் தலைவர் நிர்மலாவேல்மாறன், துணைத் தலைவர் ராஜாங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள், நகரமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:

பொதுவாக முதலமைச்சரை நாடி தான் மனு கொடுப்பார்கள். கோட்டையில் முதலமைச்சரை சென்று சந்தித்து மனு கொடுப்பதுதான் கால காலமாக இருந்து வந்தது. ஆனால் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் மண்டல வாரியாக சென்று மாவட்டத்தின் வளர்ச்சி எத்தனை சதவீதம் உள்ளது? எவ்வளவு மனுக்களை பெற்று இருக்கிறீர்கள்? எவ்வளவு மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது? என்று ஆய்வு பணியை மேற்கொண்டார். ஒரு முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டமாக வந்து மாவட்ட வளர்ச்சிக்காக ஆய்வு செய்த வரலாறு இப்போது தான் நடந்திருக்கிறது.

பொதுமக்கள் கொடுக்கிற மனுக்களை வைத்து பார்க்கும் போது 13 துறைகளுக்குத்தான் அதிகமான மனுக்கள் வந்திருக்கிறது. சாலை, குடிதண்ணீர்,  மின்விளக்கு, கழிவு நீர் கால்வாய் வேண்டுமென கேட்கும் போது நீங்கள் தான் நகராட்சியை தேடிச் செல்ல வேண்டும். ஆனால் உங்களுடைய வார்டுகளுக்கு அதிகாரிகள் வந்து அதன் மூலமாக நீங்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 30 நாளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்துடன் நோக்கம்.

6 வார்டுகள் புறக்கணிப்பா? அமைச்சர் விளக்கம்

ஆட்சி மாறத்தான் செய்யும்

நான் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது துவரம் பருப்பு விலை விண்ணை முட்டுகிறது என்று ஒரு செய்தி வந்தது. ஒவ்வொரு கடைக்கும் விலை வித்தியாசம் இருந்தது. இப்படி ஒவ்வொரு பொருளும் விலை ஏறும் போது மக்கள் கஷ்டப்படத் தான் செய்வார்கள். துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பையும் மக்கள் மறக்க முடியுமா? சாம்பார் இல்லாமல் யாராவது சாப்பிட முடியுமா? இட்லிக்கு சாம்பார் தான். சாப்பாட்டுக்கும் சாம்பார் தான். உளுத்தம் பருப்பு இல்லாமல் இட்லி வருமா? தோசை வருமா? இதுவெல்லாம் அன்றாட உணவு பொருட்கள். இது விலை ஏறினால் மக்களுக்கு கஷ்டம் தான்.

இது பற்றி அப்போது முதலமைச்சர் கலைஞரிடம் கலந்து பேசினேன். அவர் அளித்த அனுமதி பேரில்தான் துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும், உளுத்தம் பருப்பு 30 ரூபாய்க்கும், பாமாயில் 25 ரூபாய்க்கும் வழங்கியது கலைஞர் ஆட்சிதான். இதெல்லாம் மக்கள் மறந்து விடுவார்கள். ஏதோ அரசாங்கம் வந்தது,போட்டது என்று நினைப்பார்கள். அரசாங்கம் வரும். ஆனால் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆட்சியை நடத்த வேண்டும். அதுதான் முக்கியம்.

See also  திருவண்ணாமலை: மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி விவரம்

5 வருஷத்துக்கு ஒரு தடவை ஓட்டு போடுவோம். 5 வருஷத்துக்கு ஒரு முறை சில நேரங்களில் ஆட்சி மாற்றம் நடக்க தான் செய்யும். ஆனால் ஆட்சியில் இருக்கும் முதல்வர், அமைச்சர் பெருமக்கள், மக்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆட்சி நடத்துகிறார்களா? என்பது தான் முக்கியமான பொருள். அந்த அடிப்படையில் தான் இந்த திட்டம் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பட்டா வழங்க தடை

2006-2011 காலகட்டங்களில் கலைஞர் எடுத்த முயற்சியின் காரணமாக திருவண்ணாமலையில் 10 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. அன்று வருவாய்த்துறை அமைச்சராக இருந்த பெரியசாமிக்கு எனக்கும் யார் அதிகமாக பட்டா வாங்கித் தருவது என்ற போட்டி இருந்தது. வருவாய்த்துறை அமைச்சரையே மிஞ்சும் அளவுக்கு திருவண்ணாமலைக்கு பட்டா வாங்கி தரப்பட்டது. ஆனால் இன்றைக்கு நகரப் பகுதியில் பட்டா வேண்டும் என்று மனு கொடுக்கிறார்கள். ஆனால் இதில் ஒரு தடை இருக்கிறது. நகரத்தையும், நகரத்தை சுற்றி உள்ள 8 கிலோ மீட்டர் தூரத்திற்கும் பட்டா வழங்க கூடாது என்று ஒரு தடை உள்ளது. நான் இதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துப் பேசி அதற்கு ஒரு நல்ல தீர்வு காண்கிறேன் என்று முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் என்பது மிக மிக பின் தங்கிய மாவட்டம். குறிப்பாக விவசாய பெருமக்கள் அதிகமாக இருக்கிற மாவட்டம். திருவண்ணாமலை கோயிலுக்கு வரக்கூடிய ஆன்மீக பெருமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று எண்ணுவதற்கு காரணம் அப்படிப்பட்ட ஆன்மீக பெருமக்கள் வருகின்ற போது தான் திருவண்ணாமலை நகரத்தின் பொருளாதாரம் மேலும் வளரும் என்பதற்காகத்தான். திருக்கோயில் இருக்கிற காரணத்தில் தான் இங்கு வளர்ச்சி இருக்கிறது இல்லை என்றால் என்ன வளர்ச்சி இருக்க முடியும்?

இம்மாவட்டத்தில் இருக்கிற மக்கள் பெரிய பணக்காரர்களும் இல்லை, ஏழைகளும் இல்லை. நடுத்தர மக்கள்தான் இந்த மாவட்டத்தில் அதிகமாக இருக்கிறார்கள். எனவே அவர்களது பிரச்சனை தீர்க்க அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

திருவண்ணாமலை நகராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் நகரமன்ற உறுப்பினராக பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இதனால் இந்த நகர மன்றம் திராவிட முன்னேற்றக் கழக பிரதிநிதிகள் ஆளுகின்ற நகரமன்றமாக திகழ்கிறது. இந்த மாவட்டத்தில் 4 நகராட்சிகள்,10 பேரூராட்சிகளில் திராவிட முன்னேற்ற கழகம் தான் இன்றைக்கு ஆட்சி புரிந்து கொண்டிகிறது. அப்படி இருக்கிற காரணத்தினால் தான் அவர்கள் என்னை அணுகி கோரிக்கைகளை சொல்லுகின்றனர். அவர்கள் தருகிற மனுக்களை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் அளித்து முறையிடுகிறேன்.

See also  அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்

மக்கள் நம்பிக்கையை பெற்றவன்

100 சதவீதம் முறையிட்டாலும் கூட அரசின் நிதி நிலைமைக்கு ஏற்ப திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் சில நேரங்களில் மாற்றுக் கட்சியில் உள்ள நண்பர்கள் அரசியல் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக எங்களை புறக்கணிக்கிறார்கள், திருவண்ணாமலையில் வார்டுகளை புறக்கணிக்கிறார்கள் என்கின்றனர். உங்கள் மனசாட்சிக்கு இது அரசியல் உள்நோக்கமாக தெரியவில்லையா? அமைச்சரையும் தாண்டி இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர். மக்களின் நம்பிக்கை பெற்றவன். 97000 வாக்குகள் அதிகம் பெற்ற மக்கள் பிரதிநிதி. நான் வார்டுகளை புறக்கணிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

அந்த 6 வார்டில் நான் சார்ந்திருக்கிற இயக்கத்திற்கு ஓட்டு போட்டு இருக்க மாட்டார்களா? நாங்கள் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அரசின் சார்பில் என்ன செய்கிறோமோ அதைத்தான் செய்கிறோம். ஆனால் அந்த 6 வார்டுகளில் இருப்பவர்கள் வார்டு புறக்கணிக்கப்படுகிறது என நினைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரசு மக்களுக்கு பயன்படத்தான் திட்டங்களை போடுகிறது. கலைஞரின் உரிமைத் தொகை 6 வார்டுகளை ஒதுக்கி விட்டா செய்கிறோம்? அரசாங்கத்தில் அப்படி விதி உள்ளதா? இல்லை. காலை உணவு திட்டம் அந்த வார்டுகளில் செயல்படுத்தக் கூடாது என்று சொல்ல முடியுமா? விதி தான் ஒத்துக் கொள்ளுமா? அப்படி நாங்கள் செய்வோமா? இதெல்லாம் நம் ஊரில் தேவையில்லாத ஒன்று.

என்னை பொறுத்த வரைக்கும் தேர்தல் காலத்தில் மட்டும் அரசியல் பேசுவேன். திருவண்ணாமலை உள்ள அனைத்து மக்களும் எனக்கு வேண்டியவர்கள் தான். மக்களின் பிரச்சினை தீர்ப்பதுதான் ஆட்சியின் கடமை. அமைச்சர்களின் கடமை. நாங்கள் யாரையும் புறந்தள்ளுவது இல்லை. இப்போது இந்த முகாமில் மனுக்கள் வாங்கப்படும் வார்டுகள், திமுக வெற்றி பெறாத வார்டுகள் ஆகும். எனவே அவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காக தான் இந்த 6 வார்டுகளில் முதலில் மனுக்களை பெறுங்கள் என்று சொன்னேன்.

எங்களைப் பொருத்தவரைக்கும் நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். ஆட்சி என்ன செய்யுமோ அதை நாங்கள் கட்டாயம் செய்வோம். அந்த நகர மன்ற உறுப்பினர்கள் இதில் (முகாமில்) கலந்து கொண்டு இருந்தால் அவர்கள் பெருந்தன்மையை நான் பாராட்டியிருப்பேன். ஆனால் அவர்கள் கொச்சை படுத்துகின்றனர். பிரச்சினையை தீர்ப்பதற்காக அமைச்சரை தேடி அல்லது மாவட்ட ஆட்சித் தலைவரை நாடி மக்கள் வந்திருக்கிறார்கள். எனவே பிரச்சனைகளை அவர்கள் (அதிமுக கவுன்சிலர்கள்) வந்து தீர்ப்பார்கள் என்றால் நான் பாராட்டியிருப்பேன்.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் அமைச்சர் என்ற முறையில் நான் செல்லும் போது பல எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் என்னிடம் மனு கொடுக்கிறார்கள். அப்போதே அதிகாரிகளை கூப்பிட்டு இவர் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர். இவரை ஒதுக்கிவிட வேண்டாம், மக்கள் பிரச்சனைகளைத்தான் சொல்கிறார்கள், உடனே செய்யுங்கள் என ஆணை பிறப்பிக்கின்றேன். அப்படி இருக்கும்போது இந்த 6 வார்டுகளை எந்த காலத்திலும் ஒதுக்க தயாராக இல்லை. அந்த வார்டுகளையும் எங்கள் வார்டாகத்தான் நினைக்கிறோம். நாங்கள் மனப்பக்குவம் உள்ளவர்கள். இயக்கத்திலும், அரசு பணியிலும் பண்பட்டவர்கள். எப்போது எதை செய்ய வேண்டுமோ கட்டாயம் செய்வோம். இந்த 6 வார்டுகளில் கொடுக்கப்பட்ட மனுக்களை அதிகாரிகள் உரிய முறையில் விசாரணை செய்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

See also  உதயநிதி உருவ பொம்மையை எரிக்க முயற்சி

இவ்வாறு அவர் பேசினார்.

6 வார்டுகள் புறக்கணிப்பா? அமைச்சர் விளக்கம்

அமைச்சர் பேசியதன் பின்னணி

கடந்த செப்டம்பர் மாதம் திருவண்ணாமலை நகரமன்ற கூட்டம் நடைபெற்ற போது நகரில் குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பது குறித்து பிரச்சனையை எழுப்பிய அதிமுக நகரமன்ற உறுப்பினர்கள் குப்பை அள்ளும் ஒப்பந்ததாரரும், சுகாதார ஆய்வாளரும் கூட்டத்திற்கு வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்கள் கூட்டத்திற்கு வரவில்லை. இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பழனி, சாந்தி, சந்திரபிரகாஷ், நரேஷ், சீனிவாசன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் அதிமுக வார்டுகளில் அடிப்படை வசதிகளை செய்ய மாட்டோம் என கூட்டத்தில் சொல்கின்றனர். கால்வாய் இல்லை, சாலை இல்லை, குப்பைகளை அள்ளவில்லை, 6 வார்டுகளுக்கு எதையும் செய்ய மாட்டோம் என்கின்றனர். 6 வார்டுகளில் இருப்பவர்கள் யார் என்பதை காட்டுகிறோம் என்றனர்.

இந்நிலையில்தான் 5வது வார்டு(நகரமன்ற உறுப்பினர் சீனிவாசன்-அதிமுக), 6வது வார்டு(நகரமன்ற உறுப்பினர் நரேஷ்-அதிமுக), 16வது வார்டு(நகரமன்ற உறுப்பினர் சந்திரபிரகாஷ்-அதிமுக), 20வது வார்டு(நகரமன்ற உறுப்பினர் அல்லிகுணசேகரன்-அதிமுக), 24வது வார்டு(நகரமன்ற உறுப்பினர் சாந்திசரவணன்-அதிமுக), 32வது வார்டு(நகரமன்ற உறுப்பினர் எம்.பழனி-அதிமுக) ஆகிய வார்டுகளில் இன்று மக்களுடன் முதல்வர் என்ற முகாம் நடத்தப்பட்டது.

நகராட்சி மீது குற்றச்சாட்டு சொன்ன அதிமுக கவுன்சிலர்களை வார்டு மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் முகாமில் கலந்து கொள்ளாது ஏன்? என கேட்டு குற்றச்சாட்டை அவர்கள் பக்கம் திருப்பும் வண்ணம் அமைச்சர் எ.வ.வேலு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரோட்டை அடைத்து மேடை

மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சிக்காக அண்ணாமலையார் கோயிலுக்கு செல்லும் முக்கிய வழியான சன்னதி தெருவில் ரோட்டை அடைத்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் காந்திநகர் மைதானத்தில் பஸ், வேன்களை நிறுத்தி விட்டு கோயிலுக்கு நடந்து வந்த பக்தர்கள் மேடை அமைக்கப்பட்ட பகுதியை கடந்து செல்ல சிரமப்பட்டனர். பக்கத்து தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த நிகழ்ச்சியை வைத்திருந்தால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்பட்டிருக்காது என்பது அப்பகுதியினர் தெரிவித்தனர்.

முகாம் நடைபெறும் இடங்கள்

6 வார்டுகள் புறக்கணிப்பா? அமைச்சர் விளக்கம்

6 வார்டுகள் புறக்கணிப்பா? அமைச்சர் விளக்கம்


Link:http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!