அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு லட்டு, கேசரி
நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் துவக்கம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்கதர்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை புரியும் பக்கதர்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை சென்னையில் இருந்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு காணொளி காட்சி வாயிலாக இன்று (31.12.2023) தொடங்கி வைத்தார்.
இதையடுத்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பா.முருகேஷ், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை இயக்குநர் சுதர்ஷன், திருவண்ணாமலை கோயில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், மாநில தடகள சங்க துணைத் தலைவரும், அமைச்சர் எ.வ.வேலுவின் மகனுமான எ.வ.வே.கம்பன், அறங்காவலர்கள் டி.வி.எஸ். இராசாராம், கு.கோமதிகுணசேகரன், இரா.பெருமாள், திருவண்ணாமலை ஒன்றிய குழத்தலைவர் கலைவாணி கலைமணி மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
காலியாக இருந்த இருக்கைகள்
நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் குறித்து பக்தர்களுக்கு தெரியப்படுத்தும் விதம் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சரிவர விளம்பரப்படுத்தவில்லை. இதன் காரணமாக துணை சபாநாயகர், கலெக்டர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இருக்கைகள் காலியாக காட்சியளித்தது.
பவுர்ணமி தினங்களில் 1,25,000 முதல் 1,50,000 லட்சம் லட்டு வழங்கப்படும், வெள்ளி கிழமை 60,000 முதல் 70,000 பக்தர்களுக்கு கேசரியும், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் 60,000 முதல் 70,000 ஆயிரம் பக்கதர்களுக்கு லட்டும், திங்கள் மற்றும் வியாழன் கிழமையில் 25,000 முதல் 40,000 பக்தர்களுக்கு லட்டும், செவ்வாய் கிழமை 25,000 முதல் 40,000 பக்தர்களுக்கு லெமன்/தயிர் சாதமும், புதன் கிழமையில் 25,000 முதல் 40,000 பக்தர்களுக்கு கேசரியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அண்ணாமலையார் கோயிலில் தினமும் காலை முதல் இரவு வரை 3 ஆயிரம் பக்தர்கள் வரைக்கும் கூட்டு, பொரியலுடன் உணவு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.