குழந்தை திருமணத்திற்கு வந்தவர்கள் மீது வழக்கு
பெற்றோர், உறவினர்கள், புரோகிதர், சமையல்காரர்கள் மீதும் வழக்கு பாய்ந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று நடக்க இருந்த குழந்தை திருமணம் ஒன்று அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து திருமணத்திற்கு வந்தவர்கள், பெற்றோர், உறவினர்கள், புரோகிதர், சமையல்காரர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டது.
குழந்தைத் திருமணம் செய்வதால், கர்பப்பை முழு வளர்ச்சி அடையாத காரணத்தினால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படவும், எடைகுறைவான குழந்தை பிறக்கவும், தாய்சேய் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாலும், இரத்த சோகை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும், கல்வி, அறிவு தடைபடுவதாலும் அரசு குழந்தைத் திருமணத் தடைச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் 2006-ன்படி குழந்தைத் திருமணம் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும். குற்றம் புரிந்தவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை அல்லது 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டும் உண்டு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2020ம் ஆண்டு 228 பெண் குழந்தைகளின் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிக அளவில் நடைபெறுவதாகவும், முகூர்த்த நாட்களில் குழந்தை திருமணம் நடப்பது வழக்கமான ஒன்றாக ஆகி விட்டது என அப்போதைய கலெக்டர் சந்தீப் நந்தூரி வேதனையுடன் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து 1098 என்ற கட்டணமில்லாத தொலைபேசிக்கு வரும் புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் அவ்வப்போது குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் காட்டு தென்னூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடப்பதாக சமூக நல அலுவலர் மீனாம்பிகைக்கு 1098 குழந்தைகள் பாதுகாப்பு எண் மூலமாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2007 இன் படி இக் குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட மணமகனின் பெற்றோர், மணமகளின் பெற்றோர் மற்றும் திருமண ஏற்பாட்டிற்கு அலங்காரம் செய்ய ஒப்புக் கொண்டவர்கள், திருமணத்திற்கு வருகை புரிந்தவர்கள் அனைவரின் மேலும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
திருமண பத்திரிக்கையில் பெயர் பொறிக்கப்பட்ட சொந்தக்காரர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் திருமண மண்டபம் உரிமையாளர் மற்றும் புரோகிதர் ஆகியோர்கள் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
முதன்முறையாக திருமணத்திற்கு வந்தவர்கள், பெற்றோர், உறவினர்கள், புரோகிதர், சமையல்காரர்கள், அலங்காரம் செய்தவர்கள் என இந்த திருமணத்தில் சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.