Homeசெய்திகள்நந்தி சிலையை எ.வ.வேலு திறந்து வைத்தார்

நந்தி சிலையை எ.வ.வேலு திறந்து வைத்தார்

நந்தி சிலையை எ.வ.வேலு திறந்து வைத்தார்
வரகூர், வாணாபுரம், பெருந்துறைப்பட்டில் புறவழிச்சாலை அமைக்கப்படும் என அறிவிப்பு

திருவண்ணாமலையில் அருணை பொறியியல் கல்லூரி அருகில் நந்தி சிலையை திறந்து வைத்த அமைச்சர் எ.வ.வேலு வரகூர், வாணாபுரம், பெருந்துறைப்பட்டில் புறவழிச்சாலை அமைக்கப்படும் என தெரிவித்தார்.

திருவண்ணாமலை – கள்ளக்குறிச்சி வரை இருவழி சாலையை 4 வழிச்சாலைகளாக அகலப்படுத்தும் பணி இன்று மெய்யூர் கிராமத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்பி, மு.பெ.கிரி எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டக்குழு தலைவர் சீ.பார்வதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் இரா.சந்திரசேகர் அனைவரையும் வரவேற்றார்.

பணிகளை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது,

சாலைகள் சிறியதாக இருப்பதால் விபத்துகள் அதிகம் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மாநிலத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் தரம் உயர்த்த வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 6 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் சாலைகள் இரண்டு வழி சாலைகள் தரம் உயர்த்தப்படவுள்ளது. அதன்படி, மாவட்டங்களை இணைக்கும் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக தரம் உயர்த்தப்படுகிறது.

See also  மாற்று பாதையில் போக்குவரத்து-போலீசாரை நிறுத்துங்கள்

ரூ.121 கோடி செலவு

இதனடிப்படையில் திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி இணைக்கின்ற இரு வழி சாலை நான்கு வழி சாலைகளாக அகலப்படுத்தி, உறுதிபடுத்துதல் மற்றும் மையத்தடுப்பான், மழைநீர் வடிகால் கால்வாய், தடுப்புச்சுவர் சாலை சந்திப்புக்களை மேம்படுத்துதல், பெரிய பாலங்கள் கட்டுதல் மற்றும் பல பணிகள் ரூ.121 கோடி மதிப்பில் துவங்கப்பட்டுள்ளது. வரகூர், வாணாபுரம், பெருந்துறைப்பட்டில் சாலை குறுகலாக இருப்பதால் அந்த பகுதியில் புறவழிச்சாலை அமைத்து தரப்படும்.

தமிழ்நாட்டில் போக்குவரத்து அதிகமாக உள்ள சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தண்டராம்பட்டு முதல் தானிப்பாடி வரை சாலைகள் அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பொழுது தொடங்கப்பட்டுள்ள பணியில் திருவண்ணாமலையிலிருந்து தென்பெண்ணையாறு வரை உள்ள 13 கிலோ மீட்டர் சாலைகள் அகலப்படுத்தப்படுகிறது.

நந்தி சிலையை எ.வ.வேலு திறந்து வைத்தார்

திருவண்ணாமலை கோவிலுக்கு பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அதிகளவில் வருவதால் இந்த சாலை விரிவுப்படுத்தும் பணி அத்தியாவசியமாகிறது. இந்த சாலை விரிவுப்படுத்தும் பணியின் மூலம் திருவண்ணாமலையிலிருந்து சேலம் சென்றடைவதற்கு விரைவாகவும், பாதுகாப்பாகவும் சென்றடைய முடியும்.

See also  மோசடி பெண்களிடம் பணத்தை இழந்தவர்கள் புகார் தரலாம்

மேலும் மேல்கச்சிராப்பட்டு மற்றும் கீழ்கச்சிராப்பட்டு வழியாக மணலூர்பேட்டை செல்வதற்கான சாலை விரிவுப்படுத்தும் பணிக்கு ஆணையிட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, விரைவில் இந்த பணியும் தொடங்கவுள்ளது

இவ்வாறு அவர் பேசினார்.

பிறகு அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை – திருக்கோவிலூர் சாலை சந்திப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரவுன்டானவில் நந்தி சிலையினை திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.8 கோடியே 32 இலட்சம் மதிப்பீட்டில் 26 ஆயிரம் சதுர அடியில் இரண்டு தளங்களுடன் 15 அறைகள் கொண்ட சுற்றுலா மாளிகையை திறந்து வைத்தார்.

விழாக்களில் கூடுதல் ஆட்சியர் ரிஷப், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, கோட்டாட்சியர் மந்தாகினி, ஆணையாளர் பிரித்திவிராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இல.சரவணன், திருவண்ணாமலை ஒன்றிய செயலாளர் மெய்யூர் சந்திரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பிரியாவிஜயரங்கன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மற்ற சாலைகளில் நந்தி சிலை அமைக்கப்படுமா?

திருவண்ணாமலை- போளூர் சாலையில் கிரிவலப்பாதை சந்திப்பில் கருணாநிதி சிலை முன்பு அமைக்கப்பட்ட ரவுண்டாவில் நந்தி சிலை அமைக்க வேண்டும் பக்தர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அங்கு காளை சிலை நிறுவப்பட்டது பக்தர்களை ஏமாற்றம் அடையச் செய்தது.

See also  ரமணாசிரமம் குறித்து போலீசில் பெண் பக்தர் புகார்

இந்நிலையில் திருக்கோயிலூர் ரோட்டில் அருணை பொறியியல் கல்லூரிக்கு முன்பாக ரிங்ரோடு சந்திப்பில் உள்ள ரவுண்டாவில் நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. வாஸ்து காரணமாக இந்த சிலை இங்கு நிறுவப்பட்டதாக பேசப்பட்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும் நெடுஞ்சாலை பகுதியில் முதன்முறையாக நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது திருவண்ணாமலைக்கு சிறப்பு சேர்த்துள்ளது என வரவேற்பு தெரிவித்துள்ள பக்தர்கள், ஆன்மீக நகரான திருவண்ணாமலைக்கு வரும் 8 சாலைகளிலும் இதே மாதிரியான நந்தி சிலை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!